டாரண்டினோ படமா இது? அதிர்ச்சி தந்த ஹேட்ஃபுல் எயிட்- திரை அலசல்

ரு சாதாரண கதையை வைத்துக்கொண்டு தனது திரைக்கதையால் மிகச் சிறந்த படமாக மாற்றிவிடுவார் உலக அளவில் புகழ்பெற்ற இயக்குநரான டாரன்டினோ. இவருக்கென்று தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் நம்ம ஊரிலும் இருக்கிறார்கள். அவர் படம் எடுக்கப்போகிறார் என்று தெரிந்தாலே அவரின் ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

திரைக்கதையும், திருட்டுத்தனமாக படமும் இணையத்தில் கசிய விடப்பட்டிருந்தாலும் ,அவரின் ரசிகர்கள் "ஹேட்ஃபுல் எய்ட்" படத்தை திரையரங்கில் பார்க்க பலத்த எதிர்பார்ப்புடன் தான் காத்திருந்தனர். படமும் வெளியானது. ஆனால் அவரின் மற்ற படங்களைப் போல இந்தப் படம் பெரிய அளவில் பேசப்படவில்லை. முதலில் படத்தின் கதையைப் பார்ப்போம்.

ஒரு பனிப்பிரதேசத்தில் டெய்ஸி என்ற பெண்ணை தூக்கில் போடுவதற்காக ரூத் என்ற ஹேங்மேன் கோச் வண்டியில் அழைத்துச் சென்று கொண்டிருக்கிறார். வழியில் பௌன்டி ஹன்டரான கறுப்பினத்தை சேர்ந்த மேஜர் வாரனை சந்திக்கிறார். வாரனும் கோச் வண்டியில் ஏறிக்கொள்கிறார்.கொஞ்ச தூரம் போனதும் ஷெரீப் மேனிக்ஸையும் கோச் வண்டியில் ஏற்றிக்கொண்டு பயணத்தைத் தொடர்கிறார்கள். நான்கு பேர் பயணிக்கும் கோச் வண்டியிலும், அந்தப் பயணத்தின் போது ஓய்வெடுக்க அவர்கள் தங்குகிற ஒரு மோட்டலிலும் படத்தின் முழுக் கதையும் நிகழ்கிறது.

கோச் வண்டியின் பயணமும், அப்போது நிகழ்கின்ற சம்பவங்களும்,உரையாடல்களும் மெதுவாக நகர்கிறது.சில நேரங்களில் நம் பொறுமையைச் சோதித்து சலிப்படையச் செய்கிறது. சுவாரஸ்யமாக திரைக்கதையை வடிவமைக்கும் டாரன்டினோவின் படத்தையா நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்ற கேள்வி எழும்புகிறது. 70 எம் எம் இல் படம் எடுக்கப்பட்டிருப்பதால் கதையையும் 60, 70 களில் வெளியாகும் படத்தைப் போல டாரன்டினோ எழுதிவிட்டாரோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது கிட்டதட்ட ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பேசிக்கொண்டே இருக்கிறார்கள். மோட்டலுக்கு சென்ற பின் கதை கொஞ்சம் சூடு பிடிக்கிறது.

மோட்டலில் ஏற்கனவே நான்கு பேர் தங்கியிருக்கிறார்கள். மோட்டலை நடத்திக்கொண்டிருக்கும் அந்த நான்குபேரும் மோட்டலின் உரிமையாளர்களைக் கொலை செய்துவிட்டு டெய்ஸியின் வருகையை எதிர்பார்த்து அவளைக் காப்பாற்ற வந்த சகோதரனும் அவளின் குழுவும் என்று தெரிய ஆரம்பிக்கும்போது சீட்டின் நுனிக்கே சென்று விடுகிறோம்.

மோட்டலில் டெய்ஸியின் குழுவைச் சேர்ந்தவர்கள் காபியில் விஷத்தை கலந்துவிடுகின்றனர். அது டெய்ஸியைத் தவிர அவளுடன் வந்த மற்றவர்களுக்குத் தெரியாது. அந்தக் காபியை பருகுவதாலும் மோட்டலில் நடக்கின்ற துப்பாக்கி சண்டையில் ஒருவரை ஒருவர் சுட்டுக்கொண்டும், ஷெரீப்பையும், வாரனையும் தவிர மற்ற எல்லோரும் இறந்துவிடுகின்றனர். வாரனும் ஷெரீப்பும் சாவின் விளிம்பில் இருக்கிறார்கள் .வாரனிடம் இருக்கும் ஆப்ரஹாம் லிங்கனின் கடிதத்தை ஷெரீப் படிப்பதோடு படம் நிறைவடைகிறது.

டாரன்டினோ கறுப்பினத்தவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பவர். அவர்களின் துயரமான நிலையை படத்தில் சித்தரிப்பவர். ஹேட்ஃபுல் எய்ட் படத்திலும் கூட கறுப்பின மேஜராக வரும் வாரனின் பாத்திரத்தை அருமையாகச் சித்தரித்து இருப்பார். வாரனிடம் அமெரிக்க அதிபர் லிங்கன் தனக்கு எழுதியதைப் போன்ற பொய்யான ஒரு கடிதம் இருக்கும். அந்தக் கடிதத்தின் வழியாகத் தான் அவரால் வெள்ளையர்களிடம் நெருங்க முடிகிறது. இது கறுப்பினத்தவர்களின் துயரமான நிலையைச் சித்தரிப்பதாக இருக்கிறது.

டாரன்டினோ படம் வெளியாகும் முன்பு காவல்துறையினரால் கறுப்பினத்தவர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளுக்கு எதிரான பேரணியில் கலந்து கொண்டார். அதனால் காவல்துறையின் பலத்த எதிர்ப்பையும் சம்பாதித்துக் கொண்டார். இதனால் ஹேட்ஃபுல் எயிட் படத்துக்கு பலத்த எதிர்ப்பும் புறக்கணிப்பும் காவல் துறையிடம் இருந்து கிளம்பியது.

இந்த புறக்கணிப்பு மற்றும்  திருட்டுத்தனமாக இணையத்தில் படம் வெளியான பின்பும் டாரன்டினோ படத்தை வெளியிட்டது பாராட்டுக்குரியது.

சுமார் 2.47 மணி நேரம் ஓடும் இப்படம். ஆரம்பத்திலேயே மெதுவாக நகர்வதால் டாரன்டினோவில் மற்ற படங்களைக் கொண்டாடும் அவரின் ரசிகர்களையே  சலிப்படையச் செய்யும் எனும்போது மற்றவர்களுக்கு சொல்லவா வேண்டும். கோச் வண்டிக் காட்சிகளை குறைத்து இருந்தால் படம் சுவாரஸ்யமான ஒன்றாக மாறியிருக்கும்.

படத்தில் டெய்ஸியாக நடித்தவரின் நடிப்பு உண்மையிலுமே பிரமாதமானது. என்னியோ மோரிக்கோனின் இசை தான் படத்துக்கு பெரிய பலமே. இந்த வருடத்துக்கான ஆஸ்கர் விருதுப் பட்டியலில் சிறந்த துணை நடிகை,ஒளிப்பதிவு, இசை ஆகிய மூன்று பிரிவுகளில் இப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

-சக்திவேல்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!