Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்த மலையாள போலீஸோட “விசாரணை”... சான்சே இல்ல! “ஆக்‌ஷன் ஹீரோ பிஜூ” விமர்சனம்

திரையரங்கில் படம் முடிந்து வெளியேறும் ரசிகர்களின் மனதில் இறுக்கத்தையும், கண்களில் பயத்தையும் ஏற்படுத்திய திரைப்படம் விசாரணை. நிச்சயம் தமிழ் ரசிகர்களின் மனதில் ஏதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். ‘விசாரணை’ வெளியான அதே நாளில் மலையாளத்தில், போலிஸை வேறு கோணத்தில் வெரைட்டியாக காட்டியிருக்கும் படம் “ஆக்‌ஷன் ஹீரோ பிஜூ”.

எர்ணாகுளம் டவுன் ஸ்டேஷனில் எஸ்.ஐ.யான நிவின் பாலியின் ஆக்‌ஷன் அதிரடி அதகளமே படத்தின் கதை. காவல் நிலையத்திற்கு தினசரி வரும் பிரச்சினைகளும், அதை எதிர்கொள்ளும் போலீஸ்காரர்களும், ஒரு போலீஸ் ஸ்டேஷனுமே கதையின் ஹீரோ. அங்கு நடக்கும் கதைளைத் தொகுத்து, திரைக்கதையில் சுவாரஸ்யம் கூட்டி இயக்கியிருக்கிறார் இயக்குநர் அப்ரிட் ஷைன். கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு அப்ரிட் ஷைன் இயக்கிய முதல் படமான “1983”ம் செம ஹிட். அதிலும் ஹீரோ நிவின்பாலி தான்.

நிவினுக்கும் நாயகியான அனுவிற்கும் திருமணம் நிச்சயமாகியிருக்கும், திருமணத்திற்கு இடைப்பட்ட 15 நாட்களுக்குள் நிவின்பாலிக்கு வரும் வித்தியாசமான கேஸ்கள், அதனால் உருவாகும் பிரச்னைகள், அவற்றை எப்படிச் சமாளிக்கிறார் என்பதைச் சொல்லும் காமெடி ஆக்‌ஷன் கலவையே கதை.

உரிக்காத முழுத் தேங்காயை துணியில் சுற்றி, கைதிகளைப் போட்டு பிரித்தெடுக்கும் நிவின் பாலி, கோபமானால் மீசையை முறுக்கி விடும் ஸ்டைல் கேரள  இளைஞர்களின் இன்றைய ட்ரெண்ட். சுடிதாரில் வந்து நெஞ்சை அள்ளும் நாயகியாக அனு. ஒரே பாடலில் ரசிகர்களை வசீகரிக்கும் நடிப்பு நச். நகை களவாடி போலீஸிடம் மாட்டிக்கொள்ளும் ரோகினி, தன் மனைவியைப் பறிகொடுத்து கண்ணீர் விடும் சுராஜ், போலீஸ் கான்ஸ்டபிளாக வரும் ஜார்ஜ் என்று ஒவ்வொருவரும் அவரவருக்கான கேரக்டரில் வெரைட்டி காட்டியிருக்கிறார்கள்.

ஒரே கதையை மையமாகக் கொண்டு டிராவல் செய்யாமல், வித்தியாசமான பல சம்பவங்களின் தொகுப்பை ஒரே நேர்க்கோட்டில், எந்த பிசகலும் இல்லாமல் நேர்த்தியாகப் படமாக்கியிருக்கிறார்கள். காட்சிப்படுத்தப்பட்டுள்ள சம்பவங்கள், திரைக்கதையில் சுவாரஸ்யத்தையும், விறுவிறுப்பையும் கூட்டியிருக்கிறது. அவற்றில் சில... 

பிஜூ விசாரிக்கும் சில கேஸ்கள்:

* ஒரு பெண்ணை அடித்ததால் போலீஸில் மாட்டிக்கொள்கிறார் டிரைவர் குமார், அவரை விசாரித்தால் அது கள்ளக்காதல் என்று தெரிகிறது. அதனால், இந்தப் பெண்ணை விட்டு விடு என்று கூற, காதல் தோல்வியில் சுற்றும் டிரைவர் குமார்,

* நடுத்தெருவில் குடித்து விட்டு ஆட்டம் போடும் முதியவரை, ஸ்டேஷனுக்கு கூட்டிவந்து பாடச்சொல்லி கேட்கும் நிவின், பாடி முடிந்ததும் நான் கெளம்பட்டுமா என்று கேட்க, மீண்டும் செல்லில் அடைத்துவிடுவது

* போலீஸின் வாக்கிடாக்கியை எடுத்துவைத்துவிட்டு, குடித்துவிட்டு போதையில் போலீஸைப் பற்றி போலீஸிடமே பேசி கடுப்பேற்றும் கதாபாத்திரம், அதனால் ஆத்திரமடையும் கமிஷனர், அவனை கண்டுபிடித்து வெளுத்து எடுப்பது,

* மாங்காய் பறித்ததற்காக சிறுமியை நாயை விட்டுக் கடிக்க விடும், பணக்கார சைக்கோவை பிடிக்கும் நிவின், பின்னர் அரசியல்வாதிகளின் டார்ச்சரை மீறி, ஜெயிலில் தள்ளி கெத்து காட்டுவது,

இதுமட்டுமல்லாமல் கஞ்சா பயன்படுத்தும் மாணவர்களை டீல் செய்வது, செயின் அறுக்கும் கும்பலை பிடிப்பது, இரண்டு ரவுடிகளுடன் எதார்த்தமான சண்டையென்று ஒவ்வொன்றுமே புதிய கோணத்தில் போலீஸை, ரசிகர்களுக்கு காட்டியிருக்கிறது ஆக்‌ஷன் ஹீரோ பிஜூ.

காமெடி அழுகை, சோகம், வேகம், ஆக்‌ஷன், சண்டை என்று எல்லாச்சுவைகளையும் ஒரே திரைக்கதையில் கொண்டு வந்து அதை நச்சென்று எடிட் செய்திருக்கும் எடிட்டர் மனோஜ், விஜய் ஏசுதாஸ் குரலில் “பூக்கள் பனிநீர் பூக்கள்” பாடலும், ராஜேஷ் முருகேசனின் பின்னணி இசையும் படத்திற்கு ப்ளஸ்.

ஃப்ரீ அட்வைஸ்:

விசாரணை படம் பார்த்த அதிர்வில் இருக்கும் தமிழ் ரசிகர்களுக்கு, இந்த ஆக்‌ஷன் ஹீரோவின் போலீஸ் கதை நிச்சயம் ஒரு சந்தோஷத்தைக் கொடுக்கும் என்பதில் எந்த மாற்றமுமில்லை. ரெண்டுமே போலீஸ் கதை தான். ரெண்டுமே இந்திய போலீஸ்காரர்களின் வித்தியாசமான இரண்டு முகங்களை சொல்லிச் சென்றிருக்கிறது. விசாரணை பார்த்துட்டீங்கன்னா, இந்த ஸ்ட்ரிக்ட் போலீஸையும் பார்த்துடுங்க...

பி.எஸ்.முத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement