ஃபகத்ஃபாசிலின் பழிவாங்கல்! - மகேஷிண்டே ப்ரதிகாரம் (விமர்சனம்)

பள்ளிக்கூடம் படிக்கும்போதோ, கல்லூரிக் கலத்திலோ எப்போதேனும் ஒருவரால் நீங்கள் காயப்படுத்தப்பட்டிருப்பீர்கள். காயம் என்றால் மனதளவில் அல்ல, அடிவாங்கி, அவமானப்பட்டிருப்பீர்கள். அவனை பழிவாங்கவேண்டும் என்று எண்ணம் உடனே வரும். ஆனால் நாளாக நாளாக அதை மறந்துவிடுவோம்.

மகேஷ் அப்படி மறக்கவில்லை. ‘அவனைத் திருப்பி அடிப்பேன். அது வரைக்கும் செருப்புப் போடமாட்டேன்’ என்று சபதம் எடுக்கிறான். அந்த சபதத்தில் என்ன ஆகிறதென்றால்...

’அடிச்சதுக்கு பழிவாங்கற படமா? அப்ப ஆக்‌ஷன் படமா?”

இல்லை. அந்த ட்ரீட்மெண்டில்தான் இயக்குநரைப் பாராட்டித் தள்ளத்தோன்றுகிறது.

படம் ஆரம்பித்ததும் திரையில் காண்பிக்கப்படும் முதல் வஸ்து, செருப்பு.  ஆற்றில் குளிக்கையில் அதை கழுவி, சுத்தப்படுத்தி வைக்கிற ஹீரோவின் கேரக்டரும், அவன் சுத்தமானவன் என்று காட்ட செருப்பை ஏன் பயன்படுத்த வேண்டும் என்பதும் படத்தை தொடர்ந்து பார்க்கும்போதுதான் தெரிகிறது. வயதான அப்பாவுடன் வசித்துவருபவன் மகேஷ். தந்தை அந்தக் காலத்து ஃபோட்டோக்ராஃபர். வயதாகிவிட்டதால் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். இடுக்கியில், உறவினர் பேபிச்சானுடன் ஃபோட்டோ ஸ்டுடியோ வைத்திருக்கும், மகேஷுக்கு பள்ளித்தோழி சௌம்யாவுடன் காதல்.

வெளியூரில் இருக்கும் அவள், உறவினரின் மரணத்திற்காக வர, சௌம்யாவின் அப்பா அவளுக்கு வேறு வரன் பார்த்து முடித்து வைக்கிறார். இதற்கிடையில் ஒரு சாதாரண பெட்டிக்கடை சண்டையில், மகேஷ் தாக்கப்படுகிறான். ‘அவனை திருப்பி அடிக்காம நான் செருப்பப் போடமாட்டேன்’ என சபதமெடுக்கிறான்.
அந்த சபதத்தை நிறைவேற்றுகிறானா என்பதே படம் என்று வழக்கமாக ஒருவரியில் முடிக்கலாம் இந்த விமர்சனத்தை. ஆனால் அந்த சபதத்தை நிறைவேற்றுவதற்கிடையில் என்னென்ன சம்பவங்களைக் கோர்த்திருக்கார் அறிமுக இயக்குநர் திலீஷ் போத்தன்.

மகேஷின் காதலி, வேறொருவர் மனைவியாகிறார்.

மகேஷுக்கு இயல்பாக இன்னொரு காதல் உருவாகிறது

தன்னை அடித்தவனை, திருப்பி அடிப்பதற்காக குங்ஃபூ கற்றுக் கொள்கிறான் மகேஷ்

இவன் பழிவாங்க இருந்தவன் வேலைக்காக கல்ஃப் செல்வது,

இவன் காதலிப்பது, யார் என்று தெரியவந்தாலும் சளைக்காமல் ‘அவனை அடிக்கணும்’ என முடிவெடுப்பது..

இவை ஒவ்வொன்றையும் கொஞ்சமும் சுவை குறையாமல் பின்னியிருக்கிறார் இயக்குநர். இயக்குநராகத்தான் இவருக்கு முதல்படமே தவிர, மல்லுவுட்டில் நடிகராகவும், இணை இயக்குநாரகவும் பிரபலம்.

படத்தில் ஒரு காமெடி காட்சி வருகிறது. மிக மிக சாதாரணமான கற்பனை. ஒரு ரோட்டில் ஒரு மூட்டையுடன் போகும் ஒருவரை சைக்கிளில் வரும் ஒருவன் இடித்துவிட, அதிலிருந்த பழங்களெல்லாம் சிதறி ஓடுகிறது. ‘எடுத்து அடுக்கிக் குடுக்காம போனீன்னா அவ்ளதான்’ என அவர் சட்டையைப் பிடிக்கும்போது, அருகிலிருக்கும் பள்ளியிலிருந்து ஜனகனமண கேட்கிறது. இருவரும் டக்கென்று அட்டென்ஷனில் நிற்கிறார்கள். முடிந்தால் என்ன செய்யப்போகிறார்கள் என்று முழு தேசிய கீதத்தையும் அவ்வ்வளவு வயிறுவலிக்க கேட்டது இந்தப் படம் பார்க்கும்போதுதான். பாடல் முடியப்போகும்போது, நாமே சீட் நுனியில் வந்துவிடுவோம்.

ஃபகத் ஃபாசில். லவ் யூ மேன். அநாயாசமான நடிப்பு. ஹீரோயிசம் இல்லை. ஆனால் இருக்கிறது. கதையின் நாயகிகளும் அப்படித்தான். அப்பாவாக வருபவர் - அட்டகாஷ். ஆரம்பித்து முடியும் வரை ஒரு இடத்திலும் தொய்வே இல்லாத திரைக்கதை, உறுத்தாத கேமரா, மிகையில்லாத இசை என்று கம்ப்ளீட் மூவி.

கதை எழுதுபவர்களுக்கு சுஜாதா ஒன்று சொல்லுவார். ‘படிக்கறவனை, முதல் பாராலயே கதை எழுதற இடத்துக்கு இழுத்துட்டு வந்து உட்கார வை. கதை சென்னைல நடக்குதா, கோவையா, திருச்சியான்னு அவன் குழம்பிட்டான்னா, கதைக்குள்ளயே வரமாட்டான்’ என்று. இந்தப் படம் ஆரம்பிக்கும்போது இடுக்கி நகரைப் பற்றிய பாடலுடன் ஆரம்பிக்கிறது. அங்கேயே நீங்கள் படத்துக்குள் புகுந்துவிடுவீர்கள்.

இந்தக் கதையை தமிழில் யோசிக்கக்கூட முடியாது என்றே தோன்றுகிறது. அதையும் இதையும் மாற்றி மாற்றி, ‘தமிழ் ஆடியன்ஸுக்கு பிடிக்காதுங்க’ என்று கெடுத்துவிடுவார்கள். ஹீரோ முதலில் அடிவாங்கி, அவமானப்பட்டுப் போவது, காதல் தோற்பது, இன்னொரு காதல், செருப்பே இல்லாமல் கதையின் நாயகன் என்று பல மாற்றப்படலாம். வேண்டாம் பாஸ். நாம மலையாளத்துலயே பார்த்துக்கலாம்.

மகேஷிண்டே ப்ரதிகாரம் - மிஸ் பண்ணக்கூடாத படம்!

கடைசியாக ஒரு பகிர்தல்:

ஸ்டுடியோவில் வேலையில் சேர்வதற்காக ஒரு இளைஞன் (க்ரிஸ்பின்) வருகிறான், ஃபகத்தின் மாமா பேபிச்சனின் வீட்டிற்கு. பேபிச்சனின் மகள் மோகன்லால் படம் பார்த்துக்கொண்டிருக்கிறாள். ‘ஒக்காருங்க. அப்பா உள்ள இருக்கார்’ எனச் சொல்கிறாள்.

க்ரிஸ்பின் பேச்சுக் கொடுக்கிறான்.

“லாலேட்டன் ஃபேனா?”

“இல்ல.. மம்மூக்கா”
“நான் லாலேட்டன் ஃபேன். மம்மூக்கா என்ன ரோல்னாலும் பண்ற ஆளு. மரம் ஏர்றவன், டீக்கடைக்காரன். முட்டாள்னு. எங்க லாலேட்டன் இருக்காரே.. வர்மா, நாயர், மேனன். இதுமட்டும்தான். ஒன்லி ஹை க்ளாஸ்”

-இந்தக் காட்சியை தமிழில் வைக்க முடியுமா என்று யோசித்துப் பாருங்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!