Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அருள்நிதியின் சினம் ஆறியதா? - ஆறாது சினம் - விமர்சனம்

துடிப்பான காவல்துறை அதிகாரி ஒருவர், சொந்தவாழ்வில் ஏற்பட்ட சோகம் காரணமாகத் துறையைவிட்டு ஒதுங்கி வாழ்கிறார். நகரில் நடக்கும் அசாதாரண நிகழ்வுகள் காரணமாக அவர் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பும் சத்ரியன் காலத்துக்கதை. அதில் அதில் அந்நியனின் கருடபுராணத்துக்குப் பதிலாக பைபிளை வைத்து திரைக்கதை அமைத்து சினமேற்றியிருக்கிறார்கள்.

காவல்துறைஅதிகாரி வேடத்துக்கு அருள்நிதியின் உயரமும் மிடுக்கும் சரியாகப் பொருந்தியிருக்கிறது. அவர் விரைப்பாகத் திரிவதைவிட மது குடித்துவிட்டு தொய்ந்துபோய்க் கிடக்கும் காட்சிகள்தாம் அதிகம். தன்னுடைய வேடத்துக்கு மிகநியாயமாக நடந்துகொண்டிருக்கிறார் அருள்நிதி. முந்தைய படங்களைக் காட்டிலும் அவர் நடிப்பில் மெருகேறியிருக்கிறதெனலாம்.

இந்தப்படத்தில் கதாநாயகிக்கு பெரிதாக ஒன்றும் வேலை இல்லை. ஒரு பாடல், நான்கு காட்சிகளில் வந்துபோகிறார் என்கிற இலக்கணத்துக்கு அட்சரம் பிசகாமல் இருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். நான்கென்றால், நான்கே காட்சிகளில் மட்டும் வருகிறார். அதனால் ஐஸ்வர்யா தத்தா என்கிற இன்னொரு நடிகை சில காட்சிகளில் வந்து நாயகி இல்லாத குறையை நிவர்த்தி செய்யப்பார்க்கிறார்.

அருள்நிதியின் அம்மாவாக துளசி, காவல்துறை உயரதிகாரியாக ராதாரவி, அமைச்சராக ஆர்என்ஆர்.மனோகர், வில்லனாக நடித்திருக்கும் கௌரவ்நாராயணன், அனுபமாகுமார், போஸ்வெங்கட், மற்றும் ஐந்துமாணவிகள் ஆகியோர் அவரவர்க்குண்டான வேலையை செய்து, நடித்திருக்கிறார்கள்.

படத்தில் நகைச்சுவை வேண்டுமென்பதற்காக மற்றொரு காவல்துறைஅதிகாரியாக நடித்திருக்கும் ரோபோசங்கரைப் பயன்படுத்த நினைத்திருக்கிறார் இயக்குநர். அது பயன்படவில்லை, படுத்துகிறது.

கல்லூரிமாணவிகளின் விளையாட்டுத்தனமும் அறிவற்ற கோபமும் எவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை இந்தக்கதையின் மூலம் சொல்ல விழைந்திருக்கிறார் கதாசிரியர் ஜீத்துஜோசப். மன்னிக்கும் பண்பை முதன்மையாகக் கொண்ட இயேசுவின் பைபிள் வரிகளைக் கொண்டு தண்டனைகள் வழங்கியிருப்பதை எப்படி எடுத்துக்கொள்வதெனத் தெரியவில்லை.
 
இயேசு தமிழ் இந்து என்று சொல்லிக்கொண்டிருக்கிற இந்த நேரத்தில் இந்தப்படத்தில் இயேசு பேசியது அராமிக் மொழி என்று சொல்லியிருக்கிறார்கள். அவர் மொழி எது என்பது அவருக்கே வெளிச்சம். ஏற்கெனவே மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற மெமரீஸ் படத்தைத்தான் அப்படியே எடுத்திருக்கிறார்கள் என்றாலும் தமிழுக்கேற்ப சிற்சில மாற்றங்களைச் செய்திருக்கிறார் இயக்குநர் அறிவழகன். ஈரம், வல்லினம் ஆகிய படங்களை இயக்கிய அதே அறிவழகனா என்று யோசிக்க வைக்கிறது இந்தப் படத்தின் இயக்கம்.

அருள்நிதி மதுவுக்கு அடிமையாகி அலைவதையே முதல்பாதி முழுக்கக் காட்டியிருக்கிறார்கள். காட்சிகள் மிகவும் மெதுவாக நகர்ந்து சோதிக்கின்றன. அருள்நிதி மீண்டும் பழைய பன்னீர்செல்வமாகத் திரும்ப வந்ததும், படம் வேகமெடுக்கிறது. திரும்பி வந்தவுடன் ஒரேயடியாகப் பாயாமல், எதிரியை ஓடிப்போய்ப் பிடிக்க முடியாத அளவு பலவீனமாக இருக்கிறார் என்பதை வெட்கப்படாமல் ஒப்புக்கொண்டு படிப்படியாக முன்னேறுவது பொருத்தமாக இருக்கிறது.

தமனின் இசையில் தனிமையே பாடல் கேட்க இனிமையாக இருக்கிறது. பின்னணி இசையும் பரவாயில்லை. அரவிந்த்சிங்கின் ஒளிப்பதிவு கதைக்குத் தேவையான அளவு அமைந்திருக்கிறது.

ஆறுவதுசினம் தான் நல்லது என்பதை இந்த ஆறாதுசினம் மெய்ப்பித்திருக்கிறது. ஒரிஜினலான மலையாளம் ‘மெமரீஸ்’ பார்க்காதவர்கள், இதைப் பார்க்கலாம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்