Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏந்துற கையை ஓங்குறானே இந்தப் ‘பிச்சைக்காரன்’?!- பைசா வசூல் விமர்சனம்

திருப்பூரின் பிரபல மில் முதலாளியான தீபா ராமானுஜத்தின் ஒரே மகன் விஜய் ஆண்டனி. ஆலை விபத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும், தாயைக் காப்பாற்ற என்னென்னவோ செய்தும் பலனில்லாமல் போக 48 நாள் கோடீஸ்வர வேஷம் கலைத்து பிச்சைக்காரனாக வாழத் தீர்மானிக்கிறார் விஜய் ஆண்டனி. அந்த 48 நாட்களிலும் தன்னை யார் என்று எந்தக் காரணம் கொண்டும், யாரிடமும் வெளிப்படுத்தக் கூடாது என்ற சுவாரஸ்ய முடிச்சை கோர்த்து வெளிவந்திருக்கும், ஒரு கலகல கமர்ஷியல் பேக்கேஜ்தான் ‘பிச்சைக்காரன்’.


 

’அம்மாவுக்காக பிச்சைக்காரனா மாறுற மகன்தான் ஹீரோ’ என்று ஒன்லைனர் சொன்னாலே ‘25 வருஷம் முந்திதான் இப்படிலாம் எடுக்க முடியும்’ என்று புறந்தள்ளிவிடக்கூடிய கதையை, அருமையான திரைக்கதை, அட்டகாசமான வசனங்கள் மூலம் சலிப்படையச் செய்யாமல் கொண்டு சென்ற இயக்குனர் சசிக்கு ஒரு எக்ஸ்ட்ரா லார்ஜ் சைஸ் பூங்கொத்து.

’என்னது? ஹீரோ பிச்சையெடுக்கறானா?’ என்று கேட்காமல், கதாபாத்திரத்தை ஏற்றுக் கொண்டு நடித்ததோடு, சென்டிமெண்ட் என்றெல்லாம் பீலா விடாமல் இந்தத் தலைப்பில் படத்தைத் தயாரித்தும் இருக்கும் விஜய் ஆண்டனிக்கு அதே சைஸில் இன்னொரு பூங்கொத்து.


விஜய் ஆண்டனி. ஹீரோவாக, சரியான திரைத் தோற்றம் வந்துவிட்டது மனுஷனுக்கு. ஆரம்ப காட்சியில் ஏர்போர்ட்டிலிருந்து வெளிவரும் காட்சியில் அச்சு அசல் பணக்காரத் தோரணை காட்டும் அவர், பின்னொரு காட்சியில் காதலியிடம் கையேந்தும்போதாகட்டும், ஃப்ளாட்பார்மில் வில்லன் தூக்கிப் போட்ட சாப்பாடை எடுத்துச் சாப்பிடும்போதாகட்டும் பிச்சைக்காரனாகவே உணர வைக்கிறார். அதன்பிறகு கேரவனிலிருந்து உடைமாற்றி வெளிவரும்போது.. கெத்து காட்டியிருக்கிறார். ஒரு தயாரிப்பாளராக, நடிகராக விஜய் ஆண்டனிக்கு இதுதான் இதுவரையிலான லிஸ்ட்டில் டாப் படம்.

நாயகி சாதனா டைட்டஸ். முதலில் சாதாரணமாக தோன்றும் இவர், போகப் போக தன் நடிப்பிலும், அழகிலும் ரசிகர்களைக் கவர்கிறார். அந்தக் கண்கள்... அழகு!

அம்மாவாக நடித்திருக்கும் தீபா ராமானுஜம், பெரியப்பாவாக நடித்திருக்கும் முத்துராமன் எல்லோருமே அவரவர் பாத்திரத்தைக் கச்சிதமாய் செய்திருந்தாலும், ஒட்டுமொத்த அப்ளாஸையும் பெறுபவர்கள் அந்தப் பிச்சைக்கார நண்பர்களும், வில்லன் குழுவில் இருக்கும் ‘சந்திரபாபு’ சாயல் ஆசாமியும்தான்.

அதும் யார் சார் அந்த ‘சந்திரபாபு’ சாயல் நடிகர்? வில்லனின் ‘ரைட்’ அடிவாங்கிய பிறகு சிரிப்பை அடக்கும் காட்சியில் தியேட்டரையே சிரிப்பை அடக்க முடியாமல் செய்துவிடுகிறார்.

குறைகள் என்று பார்த்தால், போகப் போக ஸ்பீட் எடுத்தாலும், படத்தின் ஆரம்ப காட்சிகள், ‘ப்ச்.. என்னடா இது’ என்று தோன்ற வைக்கிறது. கதாநாயகி அறிமுகக் காட்சி, அவரை சமூக சேவகியாகக் காட்டுவதெல்லாம் நிஜமாகவே ரொம்பப் பழைய ஸ்கிரிப்டோ என்று எண்ண வைக்கிறது. அதே போல, அங்கங்கே நீள நீளமாய் விஜய் ஆண்டனியின் அட்வைஸ் மழைகள். லைட்டாக... ஓவரோ என்று தோன்றுகிறது. ஆங்கில மருத்துவம், ஆயுர்வேதம் எல்லாம் கைவிட்ட நோயாளியை சாமியார் சொல்லும் உபாயம் காப்பாற்றுவதெல்லாம்.. என்ன பாஸ் இது? பெரியப்பாவே வில்லனாக இருக்கையில், சென்னையில் ஒரு கேங் அது போக மனநலக் காப்பகம் நடத்தும் வில்லன் என்று எதிரிகளைச் சேர்த்துக் கொண்டே போனதும் ஏன் என்று தெரியவில்லை.

பாடல்கள் ஸ்பீட் ப்ரேக் என்று நினைத்தால், காட்சிகள்மூலம் அதை சரிக்கட்டி விடுகிறார் சசி. பின்னணி இசை சில இடங்களில் ஓவர் டோஸ். ஆனால் அந்த, ‘பிச்சைக்க்க்க்க் காஆஆஆரன்’ பிஜிஎம்-ஐ ரசிகர்கள் மனதில் விதைத்துவிட்டார் என்பது அந்த இசை வரும்போது தியேட்டரில் வரும் ரியாக்‌ஷனிலிருந்தே தெரிகிறது.

படத்தில் நகைச்சுவைக்குப் பஞ்சமே இல்லை, இன்ஷ்யூரன்ஸ் இல்லாமல் வரும்போது பிடிக்கும் போலீஸிடம் விஜய் ஆண்டனி தான் ஒரு பிச்சைக்காரன் என்று நிரூபிக்கும்போது, பிச்சைக்காரனிடம் அடிவாங்கியதை சொல்லாமல் இருக்க வில்லன் ஆட்கள் சக நண்பனுக்கு சரக்கு வாங்கித் தரும் காட்சி, வில்லனின் ஆட்களும் விஜய் ஆண்டனியைக் கண்டுபிடிக்க பிச்சைக்காரர்களாகத் திரியும்போது நடக்கும் சம்பவங்கள் என்று படத்தோடு ஒட்டிய நகைச்சுவை.. நம்மைக் கட்டிப்போடுகிறது

எல்லாவற்றையும் சொல்லிவிட்டு, படத்தின் ஆகச்சிறந்த பலத்தைச் சொல்லாவிட்டால் எப்படி? சசியின் வசனங்கள். ரசிகர்கள் கைத்தட்டிக் கொண்டாடியது வசனங்களைத்தான்.

விஜய் ஆண்டனி பிச்சைக்காரனாய் உட்காரும்போது, சக பிச்சைக்கார நண்பர் கொடுக்கும் அட்வைஸ் - (மொதல்ல அவங்கள உள்ள போய்ப் பிச்சை எடுக்க விட்டுட்டு, வெளில வர்றப்பதான் கேட்கணும்), ரேடியோ ஜாக்கி ஒஃபிலியாவிடம் பிச்சைக்காரர் மூர்த்தி,   பொருளாதாரத்தை உயர்ந்த கொடுக்கிற அறிவுரை, டாஸ்மாக்கில் வில்லனின் அடியாட்கள் ‘எண்ட காதலி நிண்டே மனைவி ஆகலாம்’ வசனத்தை சொல்வது. (எதற்குச் சொல்கிறார்கள் என்பதில்தான் சசி தெரிகிறார்) என்று பல இடங்களில் வசனங்கள் தெறி மாஸ்.

எல்லாவற்றிலும் அல்டிமேட் வில்லன் இவன் பிச்சைக்காரன் இல்லை என்பதற்கு சொல்லும் வசனம்தான்:- ‘ஏந்தற கைக்கு, ஓங்கற பழக்கம் வராது’ - சல்யூட் சசி!

பகிர்ந்து கொண்டால், வெகு சாதாரணமாகப் பேசப்படக்கூடிய கதை, அனுபவம் வாய்ந்த இயக்குநர் கையாண்டால் எப்படி ரசிகர்களை எங்கேஜ்டாக வைக்கக்கூடிய கதையாக மாறுகிறது என்பதற்கு உதாரணம் பிச்சைக்காரன்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

விகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது? விஜய்யிடம் என்ன பிடிக்கும்? - விஷால்