Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வக்கீல் அஞ்சலி... வெட்டி ஆபிஸர் விமல்! மாப்ளசிங்கம் விமர்சனம்

தேனிமாவட்டத்திலுள்ள ஓர் ஊரில் இரண்டு குழுக்களிடையே பரம்பரைப்பகை, அதனால் அந்த ஊரில் மாவட்ட ஆட்சித்தலைவர் உள்ளிட்டோர் சமாதானம் பேசியும் தேர் இழுக்க முடியாத நிலை. பகையாளிகள் குடும்பத்துக்குள் காதல் வந்தால்? ஹைதர் காலத்துக் கதையை நகைச்சுவை முலாம் பூசிக் கொடுத்திருக்கிறார்கள்.

வெள்ளை வேட்டிசட்டை தேவர்மகன்கமல் போல மீசை வைத்துக்கொண்டு புதியதோற்றம் காட்டியிருக்கிறார் விமல். அநியாயம் செய்வதையே நியாயமாக வைத்திருக்கும் அவருடன் சூரி, காளிவெங்கட் மற்றும் இதுவரை தமிழ்சினிமாவில் இல்லாத மாதிரி ஒரு வெள்ளைக்காரர் ஆகியோர் இருக்கிறார்கள். விமல் தனக்குக் கொடுக்கப்பட்ட வேடத்தைச் சரியாகச் செய்திருக்கிறார். நடனமாடுவதிலும் முந்தைய படங்களைக் காட்டிலும் வேகம் இருக்கிறது. வந்தாரு வந்தாரு மாப்பிள்ள சிங்கம் என்கிற பாடலில் விமலை காமராசு, ஜோதிபாசு என்றெல்லாம் புகழ்ந்திருக்கிறார் பாடலாசிரியர் யுகபாரதி.

விமலின் பெரியப்பா ராதாரவி பேரூராட்சித்தலைவராக இருப்பதால் விமல் அன் கோ ஊரைச்சுற்றுப் பஞ்சாயத்து செய்வதையே வேலையாக வைத்திருக்கிறார்கள். பெண்களை அதிகம் படிக்கவைக்கக்கூடாது என்கிற கருத்துடைய பெரியப்பாவின் வழகாட்டுதலில் வளருகிற விமலும் ஊரில் யார் காதலித்தாலும் பிரித்துவிடுகிறார்.

சினிமா வழக்கப்படி ராதாரவியின் மகளே காதலில் விழுகிறார். அவரைக் காதலிப்பவரின் வீட்டுக்குப் போய் மிரட்டப்போனால் அங்கிருக்கும் அஞ்சலியைப் பார்த்ததும் மயங்கிப்போகிறார் விமல். கண்டதும் காதல்.

துணிச்சல்காரரான அஞ்சலிக்கு வழக்குரைஞர்வேடம். விமல் அன்கோவுக்காகவே ஒரு வழக்கில் வாதாடி வெற்றி பெறுகிறார். மிடுக்கான வழக்குரைஞர் வேடத்துக்குப் பொருத்தமாக இருக்கிறார் அஞ்சலி. எல்லாவற்றையும் அலட்சியமாகப் பார்ப்பதிலேயே பாஸ்மார்க் வாங்கிவிடுகிறார். சில இடங்களில் கொஞ்சம் எடை குறைத்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.

கிராமத்துப்படங்களுக்கென்றே படைக்கப்பட்ட கேரக்டர்கள் பெரும்பாலும் இந்தப்படத்திலும் இருக்கின்றனர். அஞ்சலியின் அப்பாவாக ஜெயப்பிரகாஷ், விமலின் அப்பாவாக ஞானசம்பந்தம், மாவட்டஆட்சித்தலைவராக வருகிற பாண்டியராஜன், ராதாரவியின் மகள் மதுமிளா ஆகியோர் கவனிக்கவைக்கிறார்கள்.

புதுஇயக்குநர் ராஜசேகர், நகைச்சுவையாக ஒரு படத்தைக் கொடுக்கவேண்டும் என்று முடிவுசெய்து படத்தை எடுத்திருப்பதால் மற்ற விசயங்களில் கூடுதல் கவனம் செலுத்தவில்லை. எதிர்தரப்பைப் பழிக்குப்பழி வாங்கவேண்டுமென்பதற்காக, ராதாரவி, அவங்க வீட்டுப்பொண்ண தூக்கிட்டு வந்து தாலி கட்டுடா என்று விமலிடம் சொல்லுமிடத்தில் திரையரங்கம் சிரிப்பால் அதிர்கிறது.

ஊராட்சிமன்றக்கூட்டத்தில் வெளிப்படையாகவே, எங்க ஆளுக்குத்தான் டென்டர்கொடுப்போம் என்றெல்லாம் பேசுகிறார்கள். இது வாட்சப் யுகம் என்பதை இயக்குநர் கணக்கிலேயே எடுக்காமல் இருந்திருப்பதற்கு இது ஒருசோறு.

ஒரு வெள்ளைக்காரர் வேடத்தை வைத்துக்கொண்டு நம்முடைய வேண்டாத பழக்கவழக்கங்களைக் கேள்விகேட்டிருப்பது புத்திசாலித்தனம். ஆனால் கடைசியில் அவர்களை வைத்துத் தேரிழுக்க வைக்க நினைத்ததெல்லாம் ஏற்றுக்கொள்கிற மாதிரி இல்லை.

ரகுநந்தனின் இசையில் எதுக்கு மச்சான் காதலு உட்பட பாடல்கள் கேட்கும்படி இருக்கின்றன. பின்னணிஇசையும் ஓகே.

தருண்பாலாஜியின் ஒளிப்பதிவு கதைக்குத் தேவையான அளவில் இருக்கிறது. கோவிலில் முதல்மரியாதை வேண்டுமென்பதற்காக கலவரம் நடப்பதை கடவுள் பார்த்துக்கொண்டிருப்பது போலக் காட்சிப்படுத்தியிருப்பது சிறப்பு.

இன்னும் கொஞ்சம் அலங்கரித்திருந்தால், இந்த மாப்ளை சிங்கம், கர்ஜித்திருக்கும்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

விகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது? விஜய்யிடம் என்ன பிடிக்கும்? - விஷால்