Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மோகினி பேய்க்கே மூடு வர வைப்பாங்களாம்! டார்லிங் - 2 விமர்சனம்

எந்த சீசனும் ஓய்ந்துவிடும், ஆனால் இந்தப் பேய் பட சீசன்கள் மட்டும் ஓயவே ஓயாது என்ற பாணியில் இந்த வாரமும் இரண்டு பேய் படங்கள். அதில் ஒன்று தான் டார்லிங் 2.

கட்டிப்பிடித்தால் வரும் பழி வாங்கும் பேய், காமெடிக்கு கருணாஸ், கசகசா, குல்ஃபியாக இரண்டு நாயகிகள், எல்லாவற்றிற்கும் மேல் ஜி. வி.பிரகாஷின் முதல் ஹீரோ எண்ட்ரீ என உடன் வெளியான ஐ, ஆம்பள படங்களையே பின்னுக்குத் தள்ளிவிட்டு கமர்ஷியல் ஹிட்டடித்தது முதல் பாகமான டார்லிங். சரி இந்த பாகம் எப்படி என்ற கேள்வியோடு போய் சீட்டைப் பிடித்து உக்கார்ந்தோம்...

கதை இதுதான்:

ஊரிலிருந்து வரும் ஒரு பெண்ணுக்கு பேய் பிடிக்க கதை ஆரம்பிக்கிறது. கட் செய்தால் மச்சான் கண்டிப்பா இந்த தடவ நாம ட்ரிப் போறோம். வால்பாறை என ஜாலியாக கலையரசன், ஜானி, ரமீஸ், காளிவெங்கட் , அர்ஜுன் என ஐந்து நண்பர்கள் கூட்டணி பிளான் போட்டு கிளம்புகிறார்கள். செத்துப்போன நண்பன், அவனது துரத்தும் ஆவி, என கூடவே கூட்டிச் செல்கிறார்கள். வழக்கம் போல் பப்பரப்பா பங்களா, காட்டுப்பகுதி என பேயாட்டம் ஆரம்பம், ஏன் இதெல்லாம், முதலில் பேய்ப் பிடித்தப் பெண் யார், என்னும் கேள்விகளுக்கு பதிலும், திகில் திருப்பங்களும் தான் படத்தின் க்ளைமாக்ஸ்...

கொஞ்சம் நடிங்க பாஸ்:

படத்தின் முதலும் முக்கியஸ்தருமான கலையரசன், மெட்ராஸ் படத்தில் அப்படி ஒரு நடிப்பைக் கொடுத்து விட்டு, இந்தப் படத்தில் கொஞ்சம் அடக்கி வாசித்து விட்டார். அவர் மட்டுமல்லாமல் காளி வெங்கட், முனிஸ்காந்த், என அனைவருமே கொஞ்சம் பொறுமையாக சொல்லிய வேலையை மட்டும் செய்துள்ளனர். என்னதான் கலையரசன் ஹீரோ என்றாலும் வேலை என்னமோ அறிமுக நடிகர் ரமீஸ்க்கு தான். என்ன, நடிப்பு தான் மனிதருக்கு தண்ணிப் பட்டப் பாடு. ஒரு வேளை அவரது நடிப்பு தூக்கலாக தெரியவே மற்றவர்கள் கொஞ்சம் அளவாக நடித்தார்களோ என்ற சந்தேகமும் எழுகிறது. ஒரே நாயகியாக மாயா பல பெரிய படங்களில் நாம் ஹீரோயின்களுக்கு தோழியாக பார்த்துப் பழகிய முகம் தான் என்றாலும் டார்லிங் என்று சொல்லும் அளவுக்கு இந்தப் படத்தில் அழகு, அழகான நடிப்பும் கூட.

என்ன ஸ்பெஷல்:

உண்மையைச் சொன்னால் காமெடி களேபரம் செய்து பேய் படத்தையை காமெடி கலாட்டாவாக்கிய முதல் பாகத்தைக் காட்டிலும் இந்தப் படம் கொஞ்சம் பயமுறுத்துகிறது. சில காட்சிகள் உண்மையில் பயமுறுத்துகின்றன. எல்லாவற்றிற்கும் மேல் படம் ஆரம்பித்தவுடன் வரும் கப்போர்டு காட்சி , அடக்கடவுளே ஹாலிவுட் பாணியில் இந்தப் பேயும் கப்போர்டுக்குள் தான் இருக்குமோ என நினைப்பதற்குள் நல்லவேளை மாற்றிவிட்டார்கள். கண்ணாடியில் அசையாமல் நிற்கும் பிம்பம், கருப்பா ஒரு உருவம் போகுது இப்படி சினிமா பாணிகளை சற்றே தவிர்த்து விட்டிருக்கிறார்கள். மெட்ராஸ் படத்தில் சதா பேசிக்கொண்டேயிருக்கும் ஜானி இந்தப் படத்தில் திக்கு வாயாக , சிப்சுக்கு அலையும் காட்சிகளும் , பேய் பயத்திலும் சிப்ஸை தண்ணீரீல் தொட்டு சாப்பிடுவதும் என அப்ளாஸ் அள்ளுகிறார். ”நாங்களாம் மோகினி பேய்க்கே மூடு வர வெச்சு விரட்டின ஆளுக”.....”வால்பாறை வரதன்’னு என்னோட பேர நானே கூப்ட யோசிப்பேன்” இப்படி எதார்த்தமான வசனங்கள் அங்கொன்றும், இங்கொன்றுமாக தென் படுகிறது.

பேயிடம் அடி வாங்கிவிட்டு ”கயிற ரைட் ஹேண்ட்ல கட்றதுக்கு பதிலா லெஃப்ட்ல கட்டிட்டேன், திருப்பிக் கட்ட தான் டைம் ஆச்சு” என பீலா விட்டு நிற்கும் முனிஸ் காந்த் காமெடிக்கு கொஞ்சமாக பயன் பட்டிருக்கிறார்.

கண்களை சிவப்பு நிறத்தில் உருட்டி, ”நான் தான் டா உன் ஃப்ரண்ட்” என நிற்கும் இடைவேளை ப்ளாக் அருமை.

தொழில்நுட்பம்:

படத்தில் உண்மையில் மிரள வைப்பது பின்னணி இசை தான். மெல்லிய ஹாரர் இசை, தாயம் உருட்டும் ஓசை, கொஞ்சம் மெனக்கெட்டிருக்கிறார்கள். ஆனால் சம்மந்தமே இல்லாமல் ஏன் தாயம் என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது. டைட்டில் ஆரம்பிப்பதற்குள் ரதனின் இசையில் ஹஸ்கி வாய்ஸ் ”காற்றில்” பாடல் நமக்குள் பேய் பட உணர்வை ஆரம்பத்திலேயே கொடுத்துவிட்டதற்கே வாழ்த்துகள் சொல்லலாம். ’சொல்லட்டுமா” பாடல் இனிமை மற்ற பாடல்கள் கடந்து செல்கின்றன. பேய்ப்படத்திற்கு தொழில்நுட்பங்கள் தான் முதல் ஹீரோ என்பதில் சந்தேகமே இல்லாமல் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் சதிஷ் சந்திரசேகர்.

விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவில் ஹாரர் காட்சிகளில் பயமுறுத்தியும், சொல்லட்டுமா பாடல் காட்சிகளில் மயிலிறகாக வருடியும் கண்களுக்கு விருந்து படைக்கிறது. சில ஓவர் க்ளோசப் காட்சிகளை தவிர்த்திருக்கலாம். அபரிமிதமாகத் தெரிகிறது..

என்ன ஆச்சு:

என்ன ஆச்சு , என்ன ஆச்சு என ஹீரோயின் கலையரசனிடம் திரும்பத் திரும்ப கேட்பது போல் படத்தில் சில, இல்ல பல ஃப்ளஷ்பேக் காட்சிகள் மீண்டும் மீண்டும் படையெடுப்பதும், துரோகம், துரோகம்னு சொன்னீங்களே அது என்ன என க்ளைமாக்ஸ் வரை கணமான காரணம் வைக்காததும் நெருடல். ஒவ்வொரு வசனங்களையும் நிறுத்தி நிதானமாக பேசும் இடங்கள் யாருக்கு வெயிட்டிங் ரகம். உதாரணத்திற்கு ”டேய் அவன் பேய் டா”, என்றதும் அடுத்த டயலாக்கான ”இருந்தாலும் அவன் நம்ம ஃப்ரெண்டுடா” என கேப்புகளுக்குப் பிறகு வசனங்கள் பேசுவதும் என்ன ஆச்சு பாஸ் என நமக்குக் கேட்கத் தோன்றுகிறது.

படம் எப்படி?

நீளமான காட்சிகளை தவிர்த்திருக்கலாம். வால்பாறையா அட! நமக்கு செம லொகேஷன் வேட்டை என நினைத்தால் ஒரே பங்களா , செக் போஸ்ட் என முழு படமும் கடந்து விடுகிறது. எனினும் ஆயிரம் பேய் படங்கள் வந்தாலும் திகில் உணர்வுகளை சில படங்கள் தான் தருகின்றன. அந்த வகையில் கொஞ்சம் பயமுறுத்த முயற்சித்திருக்கிறது டார்லிங் 2..

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்