Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தப் பேய்கிட்ட ஒருவாட்டி பேசுங்க! #ஹலோ நான் பேய் பேசுறேன்

 

குல்ஃபி ஐஸில் மயக்க மருந்து கொடுத்து வீட்டுக்குள் போய் திருடுவது உட்பட பல திருட்டுக்களை டைம் டேபிள் போட்டுத் திருடி வாழ்ந்து கொண்டிருக்கும் வைபவிற்கு உதவப்போய், மாட்டிக் கொண்டு பிறகு காதலில் விழுந்துவிடுகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.


ஒரு விபத்தின்போது, தெறித்துவிழுந்த மொபைல் ஃபோனை, நைஸாக திருடிக் கொண்டு வந்து வீட்டில் வைத்திருக்கும் வைபவிற்கு, அந்த ஃபோனிலிருந்து பேயாய் வந்து தொல்லை கொடுக்கிறார், விபத்தில் இறந்த ஓவியா. வைபவைக் காப்பாற்ற அவர் வீட்டுக்குப் போகும், ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் விடிவி கணேஷ், அசிஸ்டெண்ட் சிஙக்ப்பூர் தீபன் இருவரையும் தன் டிரீட்மெண்டில் புரட்டி எடுத்து மிரட்டுகிறது அழகான ஓவியா பேய். இவர்களுக்கு என்னவாயிற்று என்று பார்க்க வரும் ஐஸ்வர்யா ராஜேஷுக்குள் புகுந்துகொண்டு, ‘எனக்கு நான் காதலிச்ச ஆள் வேணும்’ என்று கருணாகரனைக் கூட்டிக் கொண்டுவரச்சொல்கிறது.

கூட்டிக் கொண்டு வந்தார்களா, ஐஸ்வர்யா ராஜேஷ் தப்பித்தாரா... ஓவியாவின் முடிவு என்ன ஆனது என்பது நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கும் படம்தான் ‘ஹலோ நான் பேய் பேசுறேன்’

படம் ஆரம்பிக்கும்போது, சாதாரணமாய் ஆரம்பித்து திரையில் யோகிபாபு வந்ததுமே கியர் மாற்றி வேகமெடுக்கிறது. ஐஸ்வர்யாவிடம் எங்கே வைத்து காதலைச் சொல்வது என்று அவர் ‘கத்தி’ ஸ்டைலில் மேப் போடுவதும், ‘கோயிலாண்ட சொன்னியா, அங்கல்லாம் காலமிதிச்சுட்டு சாரிதான் சொல்லணும். காதலையெல்லாம் சொல்லக்கூடாது’ என்று கலாய்க்க ஆரம்பித்ததும் சரவெடி தமாஷ்.


ஐஸ்வர்யா காதலை ஒப்புக்கொண்டதும், அவரது அண்ணனிடம் மாட்டும் வைபவுக்கு ‘சொர்க்கவாசல் நாட்டியாலயா’ என்று சாவுக்கு குத்தாட்டம் போடும் க்ரூப் வைத்திருக்கும் விடிவி கணேஷ் சவால் வைக்கிறார். ‘உன்னால எத்தனை குத்தாட்டம் போடமுடியுமா?’ என்று. அந்த சவாலை (?) ஏற்று ஏழுநாட்களுக்குள் கத்துக்கொண்டு வந்து டம்ளர் குத்து, பக்கெட் குத்து, டபரா குத்து என்று பலவகைக் குத்துகளைப் போட்டு ஆடி அவர் சம்மதத்தையும் பெறுகிறார் வைபவ்.

வைபவ், ஃபோனைத் திருடியபிறகு பேய் கதைக்குள் வர, கதை அடுத்த கீரில் பறக்கிறது. கலகலப்பு கலந்த திகில் என்பதால் தியேட்டர் முழுவதும் சிரிப்புக்கு பஞ்சமில்லை. வசனங்களும் அதற்கு ஈடு கொடுக்கிறது. அந்த எமதர்மனைக் கும்பிடும் சொர்க்கவாசல் நாட்டியாலயா க்ரூப்ஸ், ‘பாடினா மூணு நிமிஷத்துல ஃப்ளாஷ்பேக் முடிஞ்சுடும்’ என்று கருணாகரன் பாட்டிலேயே தன் கதை சொல்வது, சரக்கு மிக்ஸிங் ஐடியா என்று பல இடங்களில் இயக்குநர் ஜொலிக்கிறார். அதுவும் க்ளைமேக்ஸில் பேயை என்ன செய்திருக்கிறார் என்பது.. பாஸ்.. எப்டி இப்டில்லாம்!!!!!

வைபவ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஓவியா என்று எல்லாருமே தங்கள் பங்கை சிறப்பாகவே செய்திருந்தாலும் ஓவர்டேக் செய்வது விடிவி கணேஷ் நடிப்புதான். முகத்தில் பயத்தையும் காட்டிக்கொண்டு, பேயிடமே கவுண்டர் அடித்து கிச்சுகிச்சு மூட்டுகிறார்.

இசை, சித்தார்த் விபின். படத்தின் வேகத்தைக் கொஞ்சமும் குறைக்காத பாடல்கள். டைட்டில் பாடலான மஜ்ஜா.. மல்ச்சோம் விஜய் சேதுபதி குரலில் செம்மயா... சூப்பரா, நச்சுன்னு.. நறுக்குன்னு ஈர்க்கிறது. சில்லாக்கி டும்மா பாடலும், ஐஸ்வர்யா ராஜேஷ் குத்தாட்டமும்.. ம்ம்ம்ம்! . கருணாகரன், தன் ஃப்ளாஷ்பேக்கை பாடும் பாடல்.. செம்ம ஐடியா சாரே!

இந்தப் பேய்கிட்ட நீங்களும் ஒருவாட்டி, ஜாலியாப் போய் பேசிட்டு வரலாம். சிங்கம்புலி மந்திரவாதியாக வரும் காட்சிகள் எக்ஸ்ட்ரா லக்கேஜ். ஐஸ்வர்யா ராஜேஷ் வேலைக்கு உலை வைக்கும் ஆரம்ப காட்சிகளும் கொஞ்சம் இழுவை. அதையெல்லாம் கொஞ்சம் பட்டி டிக்கரிங் பார்த்து மெனக்கெட்டிருந்தால், நீங்க மட்டுமில்லாம இந்த பேய் பேசும் படத்தை, ஊரே இன்னும் சிறப்பா பேசியிருக்கும்! 
  

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்