Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

ஒரே ஒரு காட்டுக்குள்ள... ஒரே சிவப்பு பூ..! - ஜங்கிள் புக் விமர்சனம்

1894-ம் ஆண்டில் வெளியான புத்தகம் தான் ஜங்கிள் புக் என்றாலும், நம்மில் பலருக்கும் ஜங்கிள் புக் பரிச்சயம் ஆனது தூர்தர்ஷனில் தான். ‘ வசனமாடா முக்கியம் ‘ என இந்தியில் ஓடும் ஜங்கிள் புக்கை வாய் பிளந்து பார்த்து இருப்போம். மௌக்லி பார்த்தவர்கள் ஒரு காலம் என்றால், அதற்குப்பின் சக்திமான்,கேப்டன் பிளேனட், ஸ்வாட் கேட்ஸ் என ஒவ்வொரு காலத்திலும் சிறுவர்களுக்கான கார்ட்டூன்கள் வந்துகொண்டே தான் இருந்தன. ஆனால், எல்லோருக்கும் பரிச்சயமான பெயர் ஜங்கிள் புக்.

எழுத்தாளர் ருட்யார்ட் கிப்ளிங் இந்தியாவில் சில வருடங்கள் இருந்ததால், இந்தியக்காடுகளில் தான் கதை நடப்பதுபோல ஜங்கிள் புக் எழுதியிருப்பார். இந்தியாவில் இன்று ரிலீஸாகியிருக்கும் ஜங்கிள் புக்கை, அமெரிக்கர்கள் காண இன்னும் ஒரு வாரம் காத்திருக்கவேண்டும். ஏனென்றால் இந்தியாவில் நடக்கும் கதையென்பதால் அமெரிக்காவில் ரிலீஸாவதற்கு ஏழு நாட்கள் முன்னரே இந்தியாவில் ரிலீஸாகியிருக்கிறது ஜங்கிள் புக்.

அப்படி என்ன தான் கதை!

சிறுவயதிலிருந்தே ஒநாய்களோடு வளரும் குட்டிப் பையன் மௌக்லியை, ராக்‌ஷா என்ற பெண் ஓநாய், தன் மகனாகவே வளர்க்கிறாள். வறட்சி காலத்தில்,அனைவருக்கும் பொதுவான குளத்தில், மௌக்லியும் தண்ணீர் அருந்த வர, பல விலங்குகள் முதல் முறையாக மௌக்லியைப் பார்க்கிறார்கள். ஷேர்கான் என்ற புலியோ , அன்றே மௌக்லியை கொல்ல வேண்டும் என முடிவெடுக்கிறது. கருஞ்சிறுத்தை பகீரா உதவியுடன் மௌக்லியை தப்பிக்க வைக்கின்றன ஓநாய்கள்.

மனித இனத்தைச் சேர்ந்த குட்டிப்பையன் என்பதால் என்றாவது மிருகத்திற்கு இறையாகிவிட வாய்ப்பிருப்பதால், மனிதர்கள் வாழும் பகுதியில் மெளக்லியை விடுவதற்காக பகீரா அழைத்துச்செல்கிறது. அதன்பிறகு மெளக்லி காட்டிலிருந்து வெளியேறினானா? அவனுக்கான இடம் எதுவென்பதே ஜங்கிள் புக்!  இந்த பயணத்தில் மெளக்லி சந்திக்கும் பாம்பு, கரடி, ஓரங்குட்டான், குரங்கு கூட்டம் என்ற காட்டுக்குள் நம்மை ஜாலியாக ஒரு ட்ரிப் அடிக்க வைக்கிறது இந்த 3டி படம்.

ஸ்பெக்டர் படத்தில் ஜேம்ஸ் பாண்டின் கிஸ் காட்சிகளைக்கூட வெட்டிய தணிக்கைத்துறை, தி ஜங்கிள் புக் படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கி இருக்கிறது. படம் பார்ப்பதற்கு முன், பலர் இணையங்களில் தணிக்கை துறை தலைவரான நிஹலானியை  கிண்டல் செய்திருந்தனர். ஆனால், படம் பார்த்த பின் U/A நியாயமாகவே படுகிறது. நம்நாட்டில் U/A என்பது 12 வயதுக்கு குறைவானவர்கள் மட்டும் பெற்றோருடன் பார்க்க வேண்டும் என்பதே. படத்தின் CGI எவ்வளவு அட்டகாசம் என்பதற்கு U/A தான் சான்று . ஆண் ஓநாய் அகெலாவை ஷேர் கான் தூக்கி எறியும் காட்சி, ஷேர் கான் பப்பரப்பே என 3டியில் நம் கண்முன் நிற்கும் காட்சி,லைட்டாக ஜெர்க் அடிக்கவே வைக்கும். நல்ல திரை அரங்கில் படத்தைப் பார்த்தால், நீங்கள் பார்ப்பது ஒரு அனிமேஷன் படம் என்கிற எண்ணம் கூட நமக்கு வராது. அந்த அளவிற்கு CGI, 3டி, விசுவல் எஃபெக்ட்ஸ் என்று மிரட்டி இருக்கிறார்கள்.

ஆங்கிலத்தில் ஸ்கார்லெட் ஜொஹான்சனும், இந்தியில் பிரியங்கா சோப்ராவும் குரலுதவி செய்து இருக்கும், கா என்ற பாம்பு கதாப்பாத்திரம் சில நிமிடங்களே வந்தாலும், ” ட்ரஸ்ட் மீ “ என ஹிஸ்ஸி வாய்ஸீல் சொல்லிக்கொண்டே மௌக்லியை தன் உடலை வைத்து நெருக்கும் காட்சி என எல்லாம் திகில் ரகம்.

ஆங்கிலத்தில் இருக்கும் எல்லா வார்த்தையும் பேசத்தெரிந்த மிருகங்கள் ஏனோ நெருப்பை மட்டும் சிவப்பு பூ என இன்னமும் சொல்லிக்கொண்டு இருப்பது, சின்னத்தம்பி படத்தில் பிரபுவுக்கு தாலி என்றால் மட்டும் என்னவென தெரியாது என்பது போல் தான் இருக்கிறது என்றெல்லாம் யோசிக்காமல் குழந்தைகளுக்கான படத்தை, குழந்தைகளாகவே மாறிப்பாருங்கள், நெருப்பு என்ற வார்த்தையை விட சிவப்பு பூ நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும்.

“எனக்கு நான் எப்படியோ, அதே மாதிரித்தான் நீயும், திரும்பி வந்துடு” என பாசமாக சொல்லும் ராக்‌ஷாவும்,  “நீயும் நானும் நண்பர்கள் எல்லா இல்ல, இங்க இருந்து கிளம்பு” என போலியாக கோபித்துக்கொள்ளும் பலூ என்ற கரடியும், கண்களில் லைட்டாக ஈரப்படுத்துகின்றன. அனிமேஷன் படங்களும், குழந்தைகள் படங்களும் பெரும்பாலும், பெரியவர்கள் கண்களில் கண்ணீரை எட்டிப்பார்க்க விடுவதில்லை. அதையும் தாண்டி, இப்படம் வெற்றி பெற்று இருப்பதற்குக் காரணம், தி ஜங்கிள் புக்கின் வரலாறு தான். அதை வெற்றி பெற செய்ததில் இயக்குநர் ஜான் ஃபௌரீக்கும் (Jon Favreau), இசையமைப்பாளர் ஜான் டெப்னிக்கும், CGI டீமும் கடுமையாக உழைத்து இருக்கிறார்கள். இவர்கள் எல்லோரையும் காலி செய்துவிடுகிறான் மௌக்லியாக நடித்து இருக்கும் நீத் செத் என்ற சிறுவன். 

ஜங்கிள் புக் என்ற புத்தகத்தை, தன் மகள் ஜோஸ்பினுக்காக 1894-ம் ஆண்டு வெளியிட்டார் ருட்யார்ட் கிப்ளிங். 1899-ம் ஆண்டு ருட்யார்டின் மகள் ஜோஸ்பின் இறந்து போனாள் . அவள் மகளுக்காக எழுதிய இந்தக் கதை, அவள் மகளைத் தவிர உலகமே படித்துக் கொண்டிருக்கிறது. இன்னமும் பல ஆண்டுகளுக்கு நிலைக்கப்போகும் கதைகளை கிப்ளிங் எழுதவைக்க தூண்டிய ஜோஸ்ஃபீனுக்கு நன்றிகள். ஆம். 2018-ல் ஜங்கிள் புக் மறுபடியும் வெளிவர இருக்கிறது.

 


மனிதர்களின் கால்தடம் பதியாத அடர்காடுகளில் வாழும் மிருகங்களின் வாழ்கையை கற்பனையில் நம் கண்முன் கொண்டுவரும் இந்த ஜங்கிள்புக் கண்டிப்பாக இக்கால குழந்தைகளுக்கும், அக்கால குழந்தைகளுக்கும் பிடிக்கும். 

ஜங்கிள் புக் தமிழ் டிரெய்லருக்கு:

 

 

.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement