Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

துப்பாக்கி மிலிட்டரியை ஓவர்டேக் செய்திருக்கிறதா 'தெறி' போலீஸ்..?! - தெறி விமர்சனம் #theri


கேரளாவில் பேக்கரி நடத்திக்கொண்டு தன் மகள் நைனிகாவுடன் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் விஜய். நைனிகாவின் பள்ளி டீச்சரான எமி ஜாக்சன், ஒரு சின்ன விபத்தின்போது, இடித்தவர்கள் மீது காவல்துறையில் புகார் செய்துவிட, ’எந்தப் பிரச்னையும் வேண்டாம்’ என்று புகாரை வாபஸ் செய்ய விஜய் செல்ல, அங்கே விஜயைப் பார்க்கும் ஒரு ‘பேட்ச் மேட்’ மூலம் ’ஜோஸப் குருவிலா என்று தன்னை சொல்லிக் கொள்ளும் இவர் யார்?’ என்ற கேள்வி எமி ஜாக்சனுக்கு எழுகிறது. அதற்கான விடையை, கமர்ஷியல் ஐஸ்க்ரீமில், செண்டிமெண்ட் டாப்பிங் கலந்து தந்திருக்கும் படம்தான் ‘தெறி’

நடிப்பிலும் சரி அழகிலும் சரி விஜய்க்கு சொல்லிக் கொள்ளும்படியான படம். ஜோஸப் குருவிலாவாக அமைதி காட்டும்போதும் சரி, அதே ஜோஸப்பாக எதிரிகளை பந்தாடும்போதும் சரி வேறு வேறு லெவல் நடிப்பு காட்டுபவர், அந்த கேரளா சேட்டனிடம் பேசிவிட்டு வரும் சீனில் அண்டர்ப்ளே செய்ததன்மூலம், மாஸ் காட்டியிருக்கிறார். DC விஜய்குமாராக வரும்போது ஒரு மாதிரியும், அதே கேரக்டரில் காதல் / குடும்ப காட்சிகளில் ஒரு உடல்மொழி என்று ஃப்ளாஷ்பேக்கிலும் இரண்டுவிதமாக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

 

எமிஜாக்சன், மகேந்திரன்  (விஜய் அறிமுகத்தைவிட, மகேந்திரனின் அறிமுகம் கலக்கல்!), ராதிகா எல்லோருமே தத்தமது நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.  சமந்தா, கத்தி படத்தில் போல் அல்லாமல் நடிப்புக்கு நிறைய வாய்ப்பு கிடைத்து, அதில் ஸ்கோரும் செய்துள்ளார்.

எல்லாரையும் ஓவர் டேக் செய்துவிடுகிறார் தெறிபேபி நைனிகா... செம்ம க்யூட் பேபி. இந்த வாரம் முழுவதும் அம்மா மீனா சுற்றிப் போட்டுக்கொண்டே இருக்கவேண்டிவரும். நைனிகாவின் நடிப்புக்கும், க்யூட்னஸுக்கும் அட்லி-ரமண கிரிவாசன் கூட்டணியின் வசனங்கள் கை கொடுக்கின்றன. அதே போலவே குறிப்பிட்டு சொல்ல வேண்டிய இன்னொருவர் மொட்டை ராஜேந்திரன். படம் முழுவதுமே விஜயுடன் வந்தாலும் வெறும் காமெடி கதாபாத்திரமாக இல்லாமல், குணசித்திரமாகவே வந்து வரும் காட்சிகளிலெல்லாம் ரசிக்க வைக்கிறார். அந்த ‘நீங்களே பெட்டரா யோசிச்சு வெச்சிருப்பீங்க’ வசனத்தின்போது அவரது நடிப்பு... வெல்டன் ஜி.. வெல்டன் ஜி!


இரண்டாவது படமே மாஸ் ஹீரோவா இவருக்கு  என்பதற்கு அட்லி தன் இயக்கத்தில் பதில் சொல்லிவிட்டார். சமந்தா-ராதிகா சந்திப்பு, விஜய் - சமந்தா குடும்பம் சந்திப்பு என்று கொஞ்சம் பெரிய உரையாடல்கள் நடக்கும் காட்சிகளை, இப்படியான ஒரு கமர்ஷியல் படத்தில் வைத்து ரசிகனை சலிப்படையாமல் உட்காரவும் வைத்திருக்க அட்லி - ரமணகிரிவாசன் கூட்டணியின் வசனம் பெரிதும் கைகொடுத்திருக்கிறது. இந்த செண்டிமெண்ட் + கமர்ஷியல் பேக்கேஜை அட்லி சரியாகப் புரிந்து கொண்டு, கலவையாக கொடுத்திருக்கிறார். அந்த ‘சாக்லேட் காவோ’ காட்சிக்கு.. ஸ்வீட் எடுத்துக்கோங்க அட்லி! வழிய வழிய காதலிக்கும் காதலி,  பாசக்கார அம்மா, அரசியல்வாதி வில்லன், அழகான மகள், நண்பனாக கூடவே வரும் ஒரு கேரக்டர் என்று ஒரு சினிமாவுக்கான டிபார்ட்மெண்ட் ஸ்டோர் மொத்தமாக ஒரே படத்தில்! சாக்லேட் காவோ, சாத்தானே அப்பால போ என மீம் க்ரியேட்டர்களுக்கு நிறைய தீனி.  

ஜி.வி.பிரகாஷ்குமார் பிஜிஎம், பாடல்கள் இரண்டிலும் சோடைபோகாமல் கொடுத்திருக்கிறார். ஜார்ஜ் வில்லியம்ஸின் கேமரா கேரளா, சென்னை, லடாக் என்று ஒவ்வொன்றையும் விதவிதமாய் படமாக்கியிருக்கிறது. விஜய் வீட்டு காட்சிகளின்போது கேமரா எக்ஸ்ட்ரா எனர்ஜி பூஸ்டர் போட்டிருக்கிறது. அவ்வளவு நேர்த்தி.


இடைவேளைக்கு முன் வரை ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் படம், இடைவேளைக்குப் பிறகு கொஞ்சம் தடுமாறுகிறது. விஜய் ஸ்கூலுக்குள் பாடம் சொல்லி அடியாட்களை பயமுறுத்துவதெல்லாம் நம்பும்படியாக இல்லை. அழகம்பெருமாளைக் கொலை செய்வதை நியாயப்படுத்த லேபர் ஸ்டிரைக் பிரச்னையெல்லாம் கொண்டுவந்து... ஆவ்வ்வ்வ்! ஸ்கூல்வேன், ஆற்றுக்குள் விழுந்து, விஜய் நூறடி ஓடிவந்து குதித்து கரைக்கு வருவதற்குள் மெடிகல் கேம்ப், மீட்புப்படை, காவல்துறை என்று எல்லாரும் அசெம்பிள் ஆவது அக்மார்க் விட்டலாச்சார்யா மேஜிக். அவ்வளவு தூரம் க்யூட் பேபியாக காட்டிவிட்டு, கடைசி பாட்டில் அந்தக் குழந்தைக்கு, எமி ஜாக்சனுக்கு இணையான கவர்ச்சி உடை போட்டிருப்பது அபத்தம். 
 

வழக்கமான பழிவாங்கல் கதைதான். கொடுத்த விதத்திலும், நைனிகா, மகேந்திரன் என்று கதாபாத்திரத் தேர்விலும் வெரைட்டி காட்டியதால் ஜெயித்திருக்கிறார் இயக்குநர். கில்லி, துப்பாக்கி அளவுக்கெல்லாம் இல்லை என்றாலும் குடும்ப ஆடியன்ஸையும், விஜய் ரசிகர்களையும் நிச்சயம் ஏமாற்றாது. விஜய்க்கு பேர் சொல்லும் படியான ஒரு மாஸ் படத்தில், தன் ப்ராண்ட் வேல்யூவுக்காக க்ளாஸும் கலந்து அட்லி கொடுத்திருக்கும் தெறி, ஓகே பேபி!

 

இதையும் படிங்க! 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

விகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது? விஜய்யிடம் என்ன பிடிக்கும்? - விஷால்