நட்பு, கிட்நாப், சசிகுமார், மெசேஜ்! - வெற்றிவேல் விமர்சனம்

தன் வாழ்நாள் முழுவதையும் நட்புக்காகவும், நண்பனோட காதலுக்காகாகவும் அர்ப்பணித்து வாழும், சசிகுமார்  இந்தமுறை சொந்த தம்பியின் காதலுக்காக பொண்ணைக் கடத்தியிருக்கும் படம்தான்,  காட்சிகள் மாறாத  கிராமத்து மசாலாவான “வெற்றிவேல்”.

அவரது படங்களின் கதைகளில், டிஃபால்ட் செட்டிங்க்ஸில் உள்ளபடி அப்பா பேச்சைக் கேட்காத அண்ணனாக சசிகுமார், திட்டினாலும் மகன்களின் சந்தோஷத்துக்காகவே வாழும் அப்பாவாக இளவரசு, பையனுக்கும் அப்பாக்கும் தூதுபோய் இரண்டு பேருக்காகவும் உருகும் அம்மா ரேணுகா , அண்ணனை தியாகி ஆக்கவென்றே  பிரச்சினையை லீசுக்கு வாங்கிவரும் தம்பி ஆனந்த் என கதாபாத்திரங்கள்.

வாத்தியார் இளவரசுவின் பத்தாவது பாஸ் பண்ணாத மகன்தான், உரக்கடை சசிகுமார். கூட்டமான பஸ்ஸில் தெரியாமல் சசிகுமார் காலை மிதித்துவிடும் மியாஜார்ஜ் மீது காதலில் விழுகிறார். இதற்கிடையில் கல்லூரி படித்துமுடிக்கும் சசிகுமாரின் தம்பி, பக்கத்து ஊர் பிரசிடெண்ட் பிரபுவின் மகளைக் காதலிக்கும் விஷயத்தைச் சொல்ல அவனுக்கு உதவ 'சம்போ.. சிவ சம்போ'வெனக் கிளம்பும் சசிகுமாருக்கு என்ன ஆனது.. அவர் காதலுக்கு என்ன ஆனது, அப்பா மகன் சண்டை என்ன ஆனது, பிரபுவுக்கு என்ன ஆனது, பிரபுவுக்கும் அவர் தங்கைக்கும் ஆன சண்டை என்ன ஆனது, பிரபு ஆக்சுவலாக தன் மகளுக்குப் பார்த்துவைத்திருந்த சம்பந்தம் என்ன ஆனது என்பதையெல்லாம் சொல்லி படம் பார்க்கப்போன நமக்கு என்ன ஆனது என்பதில் முடியும் படம்தான் வெற்றிவேல்.

படத்தில் ஆறுதலாக தம்பி  ராமையா. ஒத்தாசையாக டெய்லர் கதாப்பாத்திரத்தில் வருகிறார் தம்பிராமையா. ஒத்தாசை அவர் பெயர்.  இவரின் மனைவி வாடாமல்லியை பார்ப்பதற்காகவே, வீட்டை சுற்றி எப்போதும் நான்கு பேர் படம்முழுவதும் வசனமே இன்றி அங்கங்கே கிச்சுகிச்சு மூட்டுகிறார்கள்.  ‘வீட்டுக்குப் போய் சும்மாதான  இருக்கபோற’ என்று ராமையாவைப் பார்ப்பவர்கள் எல்லாரும் கலாய்க்க,  வருகிற ஒவ்வொரு காட்சியிலும் எக்ஸ்ப்ரஷனிலேயே நம் மனதை லைட்டாக்குக்கிறார் தம்பி ராமையா. படம் முழுவதும் அவரை கலாய்த்துவிட்டு கடைசியில், அவரிடமே ‘பொண்டாட்டிய சந்தேகப்படாதே’ என்று மெசேஜ் சொல்கிறார் சசிகுமார். சந்தேகப்படவெச்சதே நீங்கதானே சாமி!

படம் ஆரம்பித்து வெகுநேரமாகி, ’எப்ப சார் படம் போடுவீங்க’ என்று தோன்றும்போது சமுத்திரக்கனி எண்ட்ரி கொஞ்சம் குஷிப்படுத்துகிறது. அதே நாடோடிகள் டீம் (இங்கே சசிகுமாருக்கு பதில் சமுத்திரக்கனி) பெண் கடத்தப் புறப்படுவதும், ‘இப்பல்லாம் ரிஸ்க் எடுக்கறதில்ல.. இதோ கிட்நாப் கிட்’ என்று ஹைடெக்கில் கிளம்புவதும் ரசிக்கவைக்கிறது. ஆனால் அந்த கிட்நாப் கேங்கையும், சசிகுமார் கல்யாணத்தின்போது தலைகுனிய வைத்துவிட்டார்கள்.

சசிகுமார் அவரது வழக்கமான நடிப்பை வழங்கியுள்ளார். எக்ஸ்ட்ராவாக ‘இந்தா வெச்சுக்கோங்க’ என்று தன் ரசிகர்களுக்காக ஓபனிங் சாங்கில் பரதமெல்லாம் ஆடியிருக்கிறார். மியாஜார்ஜ், நிகிலா என இரு நாயகிகள். பஞ்சாயத்து தலைவராக வருகிற பிரபு, சாதிக்காக கெளரவம் பார்ப்பதும், மகளுக்காக இறங்கி வருவதும் என நடிப்பில் கண்ணியத்தை காட்டியிருக்கிறார். பழிவாங்க துடிக்கும் விஜி சந்திரசேகர், பையனுக்காக பொண்ணு கேட்டு செல்லும் இளவரசு என்று துணை நடிகர்களே படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.  

“மண்ணு உரத்துல ஆரம்பிச்சி, மலையாளம் பேசுறவரைக்கும் போய்ட்டேன்’, ‘உன் லவ்வையும் என் லவ்வையும் ஒரே பேக்கேஜா சொல்லிடலாம்னு நினைச்சேன்’ என்று ஒரு சில நல்ல வசனங்கள் இருந்தாலும் பாக்கியெல்லாமே அரதப்பழைய சீரியல்டைப்.  பாடல்களும் பெரிதாக கைகொடுக்கவில்லை. பட டைட்டிலை நாடோடிகள், சுந்தரபாண்டியன் என்று மாற்றி வெளியிட்டாலும் யாருக்கும் வித்தியாசம் தெரியுமா என்பது சந்தேகமே. 

காலில் மிதித்து லவ் வருவது, தாலியை பாக்கெட்டிலேயே வைத்துக்கொண்டு ரோட்டில் வைத்து தாலி கட்டுவது, கல்யாணம் பண்ணி மூன்று நாளாகியும் புருஷன் பெயர்கூட தெரியாமல் இருப்பது என்று காட்சிகள். படத்திலேயே ஒரு வசனம் வருகிறது... “நீங்கள்லாம் எந்தக் காலத்துல அண்ணே இருக்கீங்க?”....

Do you like the story?

Please Appreciate the Author by clapping!