Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘இக்கட தம்மு டன்னுல் டன்னுல் உந்திங்க்கா!’ - சரைய்நோடு விமர்சனம்

தெலுங்கு மசாலாப்படங்களைப் பார்ப்பதென்பது ஆய கலைகளைத் தாண்டிய 70-வது கலை. 15 வறமிளகாயுடன், 20 பச்சை மிளகாயும் அரைத்து செய்யப்பட்ட கரைசலைக் குடித்துவிட்டு, 50 டிகிரி செல்ஷியல் கொதித்த வெந்நீரைக் குடித்து, 45 டிகிரி செல்ஷியல் வெயிலில் நடந்துபோய் வெறித்தனமாக பார்க்கத் தயாராய் திரைக்கு முன் உட்கார நீங்கள் தயாராக இருக்கவேண்டும். அப்படிப் போய் உட்கார்ந்ததும், படம் பார்க்கும் உங்கள் காது மூக்கெல்லாம் ரத்தம் வர, தலையில் மடார் மடார் என்று அடி இடிமாதிரி விழ கைகள் முறுக்கேறி பக்கத்தில் படம் பார்ப்பவர்களைக் கடித்துக் குதறவைக்குமளவு வெறித்தனமான வயலன்ஸ் திரையில் ஓடும்.

அப்படி ஒரு படம்தான் சரைய்நோடு. தமிழில் சொன்னால் ‘சரியான ஆளு’. சூப்பர் மேன், ஹீமேன், ஹல்க், பேட்மேன், ஸ்பைடர்மேன், மஹாவிஷ்ணு, எந்திரன், சிவன் இவர்களை எல்லாம் மிக்ஸியில் அரைத்து ஒட்டுமொத்தமாய் உருவாக்கிய ஒருவரை விடவும் இரண்டுமடங்கு பலம் வாய்ந்தவர்கள் தெலுங்குப்பட ஹீரோக்கள். அவர்களை விட ஒருபடி அதிக பலம் வாய்ந்தவரான ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன், ‘எல்லை பாதுக்காப்பாத்தான் இருக்கு, ஊருக்குள்ள தான் பாதுகாப்பு இல்லை’ என்று ராணுவ வேலையை விட்டுவிட்டு ஹைதராபாத்தில் குடும்பத்துடன் செட்டிலானவர். அண்ணன் ஸ்ரீகாந்த் வக்கீல். நீதிமன்றத்தால்கூட தட்டிக்கேட்க, தண்டிக்கமுடியாத அநீதிகளை தன் தம்பி அல்லு அர்ஜூன் ‘தட்ட’,  அண்ணன் கேட்கிறார். சீஃப் செகரெட்டரி அப்பா ஜெயபிரகாஷின் நண்பரான, சாய்குமாரின் மகள் ராகுல் ப்ரீத்தைப் பெண் பார்க்கப் போன இடத்தில் ஒரு அநியாயத்தைத் தட்டிக் கேட்கிறார். அதனால் அந்த கிராமமே வில்லன் ஆதியின் பிடியில் சிக்கிச் சீரழிந்து, சின்னாபின்னமாகி, கன்னாபின்னாவென்றாகிறது.

இங்கே, தான் காதலிக்கும் எம்.எல்.ஏவான கேத்தரின் தெராசவைக் கைபிடிக்க தயாராகிக் கொண்டிருக்கிறார் அல்லு அர்ஜூன். ‘இந்த போராட்ட குணத்தையெல்லாம் விட்டுடு’ என்று கேத்தரின் சொன்னதைக் கேட்டு, ஒரு கோவில்முன் குடும்பமாகப் போய் சத்தியம் செய்யப் போகிறார்கள். அங்கே வில்லனின் ஆட்களின் துரத்தலிலிருந்து தப்பித்து வருகிறார் ராகுல் ப்ரீத். அவரையும் காப்பாற்றி, டிஜிபி சுமன் உதவியுடன் வில்லனையும் அல்லு அர்ஜுன் அழித்து தான் சரியான ஆளுதான் என்று நிரூபிப்பதே சரைய்நோடு படத்தின் கதை.

படத்தை தன் புஜபலபராக்கிரமத்தால், ஓங்கி அடித்துத் தாங்கிப் பிடிக்கிறார் அல்லு அர்ஜூன். அவரது உடற்கட்டும், ஸ்டைலும் ‘இன்னும் 50 பேர் வந்தாலும் அடிப்பார்யா’ என்றுதான் நினைக்க வைக்கிறது. ‘இக்கட தம்மு டன்னுல் டன்னுல் உந்திங்கா’ என்று கெத்து காட்டுவதாகட்டும், ‘எம். எல். ஏ’ கேத்தரின் தெரசாவை லவ்வும்போது உருகுவதாகட்டும், அண்ணனுக்கு ஆபத்து வரும்போது பாசம் பொழிவதாகட்டும் தன் ரசிகர்களுக்கு வயிராற ஆந்திரா மீல்ஸ் பரிமாறியிருக்கிறார். அசால்டாக அடியாட்களை அடித்துவிட்டு, சட்டையை கீழே இழுத்து விடும்போது ஸ்டைலிஷ் ஸ்டார் என்ற பெயருக்கு நியாயம் கற்பிக்கிறார். அந்த ஆர்ம்ஸ்.... வாவ்!

ராகுல் ப்ரீத்தை விட, கேத்தரின் தெரசாவுக்கு படத்தில் நிறைய வாய்ப்பு. நிறைவாய் செய்திருக்கிறார். இப்படி ஒரு அழகான எம்.எல்.ஏ என்றால் கொள்கையாவது, கட்சியாவது என்று ஓட்டுபோடலாம் எனுமளவு அழகாய்க் காட்டியிருக்கிறார்கள். இவர்கள் போக, ஜெய்ப்ரகாஷ், சாய்குமார், தேவதர்ஷினி, வித்யுலேகா, கிட்டி என்று ஏகப்பட்ட கதாபாத்திரங்கள்.சிம்ஹா, லெஜண்ட் என்று பாலையாவின் படங்களை இயக்கிய போயப்பட்டி சீனுதான் இயக்குநர். பத்து பேரரசு, ஐந்து ஹரி சேர்ந்து உருவாக்கிய கலவை அவர்.  இடைவேளைவரை ஒரு படமும், இடைவேளைக்குப் பின் இரண்டாவது படமும் பார்ப்பதைப் போல ட்ரீட் தருவார் போயப்பட்டி சீனு. அவர் ஸ்பெஷலே, இந்த தடாலடி அதிரடிதான். அதை பக்கா மாஸாக செய்திருக்கிறார். திரைக்கதையை பரபரவென்றே அமைத்திருக்கிறார். தமன் இசையில் வழக்கமான பாடல்கள் கடுப்பேற்றினாலும், அல்லுஅர்ஜூனின் நடனம் நிச்சயம் மனதிற்கு ஆறுதலைத்தரும். ஆக்‌ஷனைப் போலவே நடன ஸ்டெப்ஸ்களிலும் ஒரு கலக்கு கலக்குகிறார் ஸ்டைலிஷ் ஸ்டார். அஞ்சலி வேறு ஒரு பாடலுக்கு வந்து ஆடிவிட்டுப் போகிறார்.

காமெடி படத்திற்கு வேண்டும் என்ற மூடநம்பிக்கைக்காகவே பிரம்மானந்தாவைப் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர். அவரும் அவர் பங்குக்கு ‘பொண்டாட்டி டிவி மாதிரி, சின்ன வீடு மல்ட்டிப்ளக்ஸ் தியேட்டர் மாதிரி, பொண்டாட்டி பூஜை ரூம், சின்னவீடு ஹாலிடே ரிசார்ட்’ என்று ஏதேதோ முயல்கிறார்.

தெலுங்குப் படங்களின் ஸ்பெஷாலிட்டியே, கத்தி வயிற்றைக் கிழித்து குடல் வெளியே வந்தாலும் ஹீரோவுக்கோ, அவரைச் சார்ந்தவர்களுக்கோ எதுவும் ஆகாது. அதனால் நீங்கள் பயமே இல்லாமல், ரிலாக்ஸாகப் படம் பார்க்கலாம். இதிலும் அப்படியே. இரண்டு நிமிடத்தில் மருத்துவமனைக்குக் கொண்டுபோய்க் காப்பாற்ற வேண்டிய அண்ணனை, இரண்டு மணி நேரம் சண்டை போட்டு கொண்டு போய்க் காப்பாற்றிவிடுகிறார். இதேபோல பூமார்க்கெட் தொடங்கும் அளவுக்கு பூக்களைக் காதில் சுற்றி அனுப்புகிறார்கள். ‘அட.. இதுக்கெல்லாம் அசருவமா?’ என்ற மனோபாவத்தில் பார்க்கத் தயாரென்றால் பார்க்கலாம்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

விகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது? விஜய்யிடம் என்ன பிடிக்கும்? - விஷால்