Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எல்லாஞ்சரி.. க்ளைமாக்ஸ் மட்டும் ஏன் இப்படி? #லீலா (மலையாளம்) விமர்சனம்

இலக்கியங்களை சினிமாவாக மாற்றுவது சாதாரணமான விஷயமல்ல. எழுத்தில் புனையப்பட்ட சாராம்சம் குறையாமல், எந்தமாற்றமுமின்றி சினிமாவாக உருவாகியிருக்கும் 101 நிமிட மலையாளப் படமே லீலா.

சப்பகுரிசு, முன்னறியிப்பு, சார்லி போன்ற பல புகழ்பெற்ற படங்களின் திரைக்கதை, வசனகர்த்தாவான, கேரளாவின் புகழ்பெற்ற எழுத்தாளர் R. உண்ணியின் பின்நவீனத்துவ சிறுகதையே லீலா. விமர்சனங்கள் நிச்சயம் எழும் என்று தெரிந்துமே சினிமாவாக எடுக்க துணித்ததற்காகவே இயக்குநர் ரஞ்சித்தை பாராட்டலாம்.

வாழ்க்கையில் எந்தவித நோக்கமுமின்றி ஜாலியாக சுற்றித்திரிகிறார்கள் குட்டியப்பனும் (பிஜூ மேனன்) அவனது நண்பர்களும்.  லீலா (பார்வதி நம்பியார்) என்ற பெண்ணின் வாழ்க்கையும், குட்டியப்பனின் வாழ்க்கையும் ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கும் போது நிகழும் அதிர்ச்சிகரமான சம்பவமே ‘லீலா’ படத்தின் அடிநாதமாக இருக்கிறது.

குட்டியப்பன் என்கிற சுவாரஸ்யமான கதாபாத்திரத்தை நிச்சயம் இங்கே விவரித்தே ஆகவேண்டும், 24 மணிநேரமும் பிஸியாகவே இருப்பார், ஆனா ஒருவேலையும் கிடையாது, படத்தின் முதல் காட்சியிலேயே குடித்துவிட்டு குதிரையில் சென்று போலீஸையே மிரள வைப்பது, ‘தினமும் மாடிப்படியேறி  வந்துதானே காபி கொடுக்கற? இனி ஏணியில் ஏறிவந்து ஜன்னல் வழியா எழுப்பிவிடு’ என்று அம்மாவை ஏணியில் ஏறச்செய்வது என்று குட்டியப்பனின் ஒவ்வொரு காட்சியிலும் சுவாரஸ்யம் நிறைந்திருக்கும். இவைமட்டுமில்லாமல் விபச்சாரியை அழைத்து வந்துவிட்டு, நான் செத்ததுபோல நடிக்கிறேன், நீ அழு என்கிறார். வயதான விபச்சாரப் பெண்களுக்கு ரிட்டையர்மெண்ட் விழா எடுக்கிறார். இப்படி அந்தக் கதாபாத்திரத்தையே சுவாரஸ்யமாக வடிவமைத்திருக்கிறார் கதாசிரியர்.

குட்டியப்பன் அப்படி ஒரு ஜாலிமேன் என்றால், லீலாவோ, நேரெதிர். வாழ்க்கை முழுதும் அதிர்ச்சிகளையே சந்தித்தவள்.  குடிகாரத்தந்தையால் கர்ப்பமாக்கப்படும் மகள் லீலா, வறுமையினால் தன் தந்தையாலேயே விபச்சாரத்திற்கு கொண்டுவரப்படுகிறாள், வசனங்களின்றி ஒவ்வொரு காட்சியிலும் மெளனத்தாலேயே ஸ்கோர் செய்கிறார் பார்வதி.  

பிஜூ மேனனுக்கு மனதில் குழப்பம் என்றால், இரவில் காந்திசிலை முன்னாடி மன்றாடுவது, ‘பிரச்னைக்கான தீர்வை இப்போ சொல்லாதீங்க..  கனவில் வந்து சொல்லுங்க ’என்பது, யானை வாங்கவேண்டும் என்று ஒவ்வொரு இடமாக திரிவது,  பிஜூமேனனுடன் கதைமுழுவதும் பயணிக்கும் விஜயராகவனின் நடிப்பு, ஏஞ்சலாக வரும் முதியவர் கதாபாத்திரம் என்று படமே சிரிப்புக்குப் பஞ்சமில்லாத காட்சிகள், ஆனால் அந்தச் சிரிப்புக்கெல்லாம் நேரெதிராக மலையாளப்படங்களுக்கே உரித்தான க்ளைமேக்ஸ் டிராஜடி  ‘எந்தா சேட்டா இங்ஙன?’  என்று கேட்கவைக்கிறது.

பிஜூபாலின் இசை நிச்சயம் படத்திற்கான வலிமையை கூட்டியிருக்கிறது, மேலும் ஒளியமைப்பும், காட்சிகளின் கோர்வையும் நிச்சயம் படத்தை கண்சிமிட்டாமல் பார்க்கத்தோன்றும், லீலாவுக்கு கடைசியில் நிகழும் கொடூரமான, விவாதத்திற்குரிய இறுதிக்காட்சி மட்டுமே படத்தை புரிவதில் சிக்கலை ஏற்படுத்துகிறது.

இந்தப் படத்தில் குறியீடுகளால் நிறைய விஷயங்களை தொகுத்து வழங்கியிருக்கிறார் ரஞ்சித். இயற்கையே வலிமையானது, நாம் நினைக்கும் விஷயங்கள் அடுத்த நொடியில் கூட மாறிவிடலாம், அதற்கு இயற்கை மட்டுமே காரணகர்த்தா என்பதே படத்தின் முடிவு, அதற்காக கையாண்டிருக்கும் க்ளைமேக்ஸ் காட்சிகள் உங்களுக்கு பிடிக்கலாம், பிடிக்காமல் போகலாம், உங்களுக்கு ஒரு பாடத்தை கற்பிக்கலாம், அல்லது முகம் சுழிக்கவைக்கலாம், உங்களுக்காக கேள்வியை மட்டும் தூவிவிட்டு, விடை உங்களிடமே இருக்கிறது தேடிக்கொள்ளுங்கள் என்கிறார் இயக்குநர்.

அந்த விடைக்கான தேடலே இந்த லீலா.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

விகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது? விஜய்யிடம் என்ன பிடிக்கும்? - விஷால்