Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

வாய்தா வைக்காம அசத்திட்டாரே இந்த வக்கீல்! - மனிதன் விமர்சனம்

சபாஷ் டைரக்டர் அஹமத்: ஒரு காட்சி திரையில் ஓடும்போது, மக்கள் கவனம் எங்கே செல்லுமோ அந்த கதாபாத்திரங்களை கவனமாக கையாண்டு அவர்களது உடல்மொழி, உடைகளிலெல்லாம் கவனம் செலுத்துவது ஒரு தேர்ந்த இயக்குநரின் சக்ஸஸ் ஃபார்முலா என்றால், அதைத் தாண்டி திரையில் அவ்வளவு தூரம் கவனிக்கப்படாத கதாபாத்திரங்களின் மீதும் கவனம் வைத்து இயக்குவதே அந்த இயக்குநரை அடுத்த படிக்குக் கொண்டு செல்லும். இந்தப் படத்தில் க்ளைமாக்ஸில் பிரகாஷ்ராஜ் கணீர் கணீரென்று வாதிட்டுக் கொண்டிருக்கும்போது - பத்தோடு பதினொன்றாக அமர்ந்திருக்கும் - குற்றம் சாட்டப்பட்ட ராகுல் திவானின் அம்மாவின் முகபாவத்தைக் கவனித்தீர்களானால் இயக்குநரின் ஸ்பெஷாலிட்டி தெரியும்.

ஒரு பாடல் காட்சியில், சங்கிலி முருகன் நடந்துவருவதைப் பார்த்ததும், உதயநிதி எழுந்து நிற்பார். சங்கிலி முருகன் அவரைக் கண்டுகொள்ளாமலே கடந்து செல்வார். அது ஏன் என்பது படம் பார்க்கும்போது உங்களுக்குப் புரியும். ஆனால், ஒரு பக்க வசனத்தில் விளக்கவேண்டிய வலியை ஒரு செகண்டில் கடத்தியிருப்பார் இயக்குநர். இப்படி, என்றென்றும் புன்னகையிலேயே கவனிக்க வைத்த அஹமத், இந்தப் படத்தில் பேசவைக்கிறார்.

சபாஷ் ‘தயாரிப்பாளர்’ உதயநிதி:
’நடிக்க வந்தாச்சு. நாயகனாக நான்கு படம் முடிந்தது. கண்டிப்பாக ஒரு ஹிட் கொடுக்க வேண்டும். தயாரிப்பு நாம்தான் என்பதால், எமி ஜாக்சன், நயன்தாரா என்று பெரிய ஆர்டிஸ்டுகளை வைத்து படமெடுத்தால் மட்டும் போதாது, கொஞ்சம் நல்ல கதைச் சூழலும் அதை சலிக்காமல் பார்க்க வைக்கிற திரைக்கதையும் ஒரு படத்துக்கு தேவை என்று உணர்ந்து ஹிந்தியில் ஹிட்டடித்த ஜாலி எல்.எல்.பி-யை தமிழுக்கு மொழிமாற்றம் செய்ய முடிவெடுத்தமைக்காக தயாரிப்பாளர் உதயநிதிக்கு ஒரு சபாஷ்! 

டபுள் செஞ்சுரி அடித்த கதாபாத்திரங்கள்: சிம்மக்குரலில், நீதிமன்றமே அதிர வாதாடிவிட்டு ஒரு நொடியில், ‘ஸாரி யுவர் ஆனர்’ என்று உடல்மொழியை மாற்றி சாந்தமாகத் தொடர்வதும், ‘என் பேமண்ட் எவ்ளோன்னு நான்தான் டிசைட் பண்ணுவேன்’ என்று தன் அறிவுத்திமிரை நாடி நரம்பிலெல்லாம் வெளிப்படுத்துவதுமாக செஞ்சுரி அடித்திருக்கிறார் பிரகாஷ்ராஜ். அதேபோலவே, ராதாரவியும்! அந்த அசால்ட் பாடிலேங்குவேஜைப் பார்த்து ரொம்ப நாளாச்சு ஜட்ஜய்யா. கண்ணாடியைக் கழட்டி, கண்ணைச் சுருக்கி, பேப்பரை கண்ணருகே கொண்டு வந்து படிப்பதும், கர்ச்சீப்பால் மூக்கைத் துடைத்துக் கொள்வதும், ‘கேஸ் இண்ட்ரஸ்டிங்கா போகுதுல்ல?’, ‘சாப்ட்டு வந்து பேசிக்கலாமா?’ ‘அவருக்கு டீ வேணாமாம்பா’ என்று கலகல மற்றும் கண்டிப்பு ஜட்ஜாக ஸ்கோர் செய்திருக்கிறார். இறுக்கமும் சிடுசிடுப்புமான நீதிபதி கதாபாத்திரங்கள் இடையே, சற்றே மனம் விட்டுப் பேசும் அந்த நீதிபதி கதாபாத்திரத்தின் காஸ்டிங்... சூப்பர்ப்!

பிரகாஷ்ராஜ், ராதாரவி போன்ற நடிப்புத் திமிங்கலங்களுக்கு நடுவே விறால் மீனாகத் துள்ளுகிறார் உதயநிதி. நிறைய க்ளோஸப் காட்சிகளில் நடிப்பில் முந்தைய படங்களுக்கு தேறியிருக்கிறார். இவர்களுக்கு முன் நான் என்ன செய்ய என்று நினைத்தாரானால், அதுதான் இல்லை. படத்தில் வேறு இரண்டு கதாபாத்திரங்கள் வெறும் சில நிமிட நடிப்பில் டபுள் செஞ்சுரியே அடித்திருக்கிறார்கள். ஒன்று: அந்த ராயல் ஃபேமலி திவான். பிரகாஷ்ராஜை க்ளோஸப்பில் மிரட்டும் காட்சியில் பிரகாஷ்ராஜே மிரண்டிருக்க வேண்டும். அப்படி ஒரு நடிப்பு முகத்தில். அதுவும் பார்வையிலேயே ஒரு பதற்றத்தைக் கடத்திவிட்டு, அதை பிரகாஷ்ராஜ் உணர்ந்ததும், ‘அந்தப் பயம் இருக்கணும் ஆதிசேஷன்!’ என்று புன்முறுவல் பூப்பது... சிம்ப்ளி க்ளாஸிக்! அந்த மாற்றுத் திறனாளி கமலக்கண்ணன் கேரக்டர், குரலுடைந்து அத்தனை நீள சாட்சி சொல்லும் ஷாட்டில் அவர் அடித்திருப்பதும் டபுள் செஞ்சுரிதான்!

Related Article: பேய் இருக்கா... இல்லையா...? - ‘களம்’ விமர்சனம்..!Click To Read

 

ஒலி-ஒளி கெமிஸ்ட்ரி: மதியின் ஒளிப்பதிவு... சான்ஸே இல்லை. பெரும்பாலும் நீதிமன்றத்திலேயே நகரும் காட்சிகளில் ஒவ்வொரு முகத்துக்கும் ஜம்ப் அடிக்கும் ஆங்கிள்கள், ஆரம்ப சேஸ் ரேஸ் விரட்டல், சில நொடிகளென்றாலும் ’அழகழகா” பாடலில் ராட்டினத்தோடு இணைந்து தலைகீழாகச் சுழலும் கேமரா, காரின் லோகோவோடு நீதிமன்ற எண்ட்ரி என ஸ்கோப் குறைச்சலான திரைக்கதையிலும் செம ஸ்கோர் அடித்திருக்கிறது. புறாக்கள் பறக்க உதயநிதி நடக்கும் ஒரு ஷாட்.. ‘வாவ்’ ரகம்.

பாடல்களில் சந்தோஷ் நாராயணன் தாளமிட வைத்ததைவிட, பின்னணி இசையில் சிம்ப்ளி சூப்பர்ப். பிரகாஷ்ராஜ் வாதாடும் போது ஒலிக்கும் ஒரு வித பின்னணி இசை, உதயநிதி வாதாடும்போது சடாரென்று மாறி கதாபாத்திரத்தன்மையை இசையிலேயே உணர்த்துகிறது. இளையராஜாவின் ஸ்பெஷாலிட்டியான ‘பின் டிராப் சைலன்ட்’ மந்திரத்தையும் சில இடங்களில் நிகழ்த்தியிருக்கிறார். ஹன்சிகாவும் உதயநிதியும் சந்திக்கும்போதெல்லாம் பின்னணியில் ஒலிக்கும் ‘அழகழகா’ பாடலின் தஜோம் தஜோம் ஐஸ்க்ரீமின் செர்ரிப்பழம்.

வாரே வாவ் வசனங்கள்: நீதிமன்ற வாதாடும் காட்சிகள் நிறைந்த ஒரு படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்க வேண்டியது வசனங்கள்தான். அதன் முக்கியத்துவம் உணர்ந்து, ஒவ்வொரு வசனத்தையும் கூர் தீட்டியிருக்கிறது அஜயன் பாலா, அஹமத் கூட்டணி. ‘யூனிஃபார்ம் போட்டவங்களே கை நீட்டும்போது, சட்டையே இல்லாதவங்க என்ன பண்ணுவாங்க’ எனும் வசனம் சின்ன சாம்பிள்.

ஹன்சிகா, உதயநிதி ஜோடிக்கு இரண்டாவது படமென்பதால் கெமிஸ்ட்ரி கூடியிருக்கிறது. ஊடல் முடிந்து இருவருமாக சமாதானமாகும் காட்சிகளும், ‘நான் எப்படிடா உன்னை லவ் பண்ணினேன்’ எனக் கேட்டு தோளில் சாய்வதும்... இயல்பும் ஈர்ப்புமான பிரியம். அதுவும் சினிமா மினுமினுப்பு இல்லாத பாண்டி பஜார் காஸ்ட்யூம்களில் கன்னம் குழியச் சிரிக்கும் ஹன்சிகா சுளீர் வெயிலின் ஜிலீர் மழைச்சாரல். காக்கா முட்டை சேரி அம்மா சாயலை, ஜீன்ஸ், டாப்களில் துவம்சம் செய்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

விமர்சனத்துல கதையே சொல்லலையே என்கிறீர்களா? தன் காதலி ஹன்சிகாவின் பப்ளிக் ப்ராஸிக்யூட்டர் அப்பாவின் குட்புக்கில் இடம்பிடிக்க வேண்டி, பொள்ளாச்சியிலிருந்து சென்னை வருகிறார் மொக்கை வக்கீல் உதயநிதி. வழக்கெதுவும் கிடைக்காமல் அல்லாடும் அவர், தன்னை நிரூபித்துக் கொள்ள பிரபல வழக்கான ‘ப்ளாட்ஃபாரவாசிகள் - கார் ஆக்சிடெண்ட்’ வழக்கை கையிலெடுத்து ‘வக்கீல் ஆதிசேஷன்’ பிரகாஷ்ராஜை எதிர்க்கிறார். என்ன ஆகும் என்பதெல்லாம் வழக்கம்தான்... அதைக் கொடுத்திருக்கும் முறையில்தான் கவனம் ஈர்க்க வைக்கிறார் கதாசிரியர் சுபாஷ் கபூர். 

ஸ்பெஷல் மென்ஷன்: 2002ல் மும்பையில், பாலிவுட் நடிகர் சல்மான்கான், லேண்ட் க்ரூஸர் வாகனத்தை ஓட்டிச் சென்று பிளாட்ஃபாரவாசிகள் மீது செலுத்தி, ஒருவர் இறக்கிறார். நால்வர் படுகாயமடைந்தார்கள். இந்த வழக்கு 2015 மே-யில் தீர்ப்பாகி சல்மானுக்கு ஐந்தாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அந்த வழக்கு நடந்து கொண்டிருக்கும் சமயத்தில், அவர் சார்ந்த பாலிவுட் துறையிலேயே அதை வைத்து ’ஜாலி எல்.எல்.பி’ என செம சினிமாவாக்கினார் கதாசிரியர் சுபாஷ் கபூர். அந்த தில் பாலிவுட் ஸ்பெஷல்.

ஃபைனல் பஞ்ச்
:  முன்பாதி மிகவும் சம்பிரதாயம். காதலுக்காக தன்னை நிரூபிக்க நினைக்கும் உதயநிதியின் நடவடிக்கைகள் அவ்வளவு அழுத்தமாக முன்பாதியில் தைக்கவில்லை. ஒரு பப்ளிக் ப்ராஸிக்யூட்டர் மருமகன் வாடகை கொடுக்க சிரமப்படுவது நெருடல் போன்ற குறைகள் இருப்பினும், ஒரிஜினலின் வீரியம் குறையாமல் உள்ளூர் சாயம் சேர்த்து, அதை விறுவிறு சினிமாவாக்கியதில்.... தீர்ப்பை தனக்கு சாதகமாக்கிக் கொள்கிறான் இந்த ‘மனிதன்'!

 

.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement