ராமானுஜம் பெருமை, ஹாலிவுட்டுக்கு தெரிஞ்சிருக்கு! - #The man who knew infinity விமர்சனம் | The Man Who Knew Infinity Movie Review

வெளியிடப்பட்ட நேரம்: 13:10 (30/04/2016)

கடைசி தொடர்பு:14:45 (30/04/2016)

ராமானுஜம் பெருமை, ஹாலிவுட்டுக்கு தெரிஞ்சிருக்கு! - #The man who knew infinity விமர்சனம்

சின்ன சின்ன கூட்டல், கழித்தல் கணக்கிற்குக் கூட கால்குலேட்டரைத்தேடும் இளைய தலைமுறை நிச்சயம் இவரைப் பற்றி தெரிந்திருக்கவேண்டியது அவசியம். லட்சம், கோடி எண்களைக்கூட எளிதில் கூட்டிக்கழித்துவிடும் கணித மேதை ஸ்ரீநிவாச ராமானுஜனின் வாழ்க்கை வரலாறை மற்றுமொரு படமாக, “தி மேன் ஹு ந்யூ இன்ஃபினிட்டி” (The Man Who Knew Infinity) ஹாலிவுட் படம் வெளியாகியிருக்கிறது.

கோவிலே சொர்க்கம் என்று தன்னுடைய கணிதவியல் பயிற்சிகளை மேற்கொள்ளும் ராமானுஜர்  திருமணத்திற்குப் பிறகு, மனைவிக்காக வேலை தேடி திரிகிறார். சென்னையில் வேலைகிடைத்ததும், தன் மனைவியை அழைத்துவரும் ராமானுஜர், அவர் எழுதிவைத்திருக்கும் கணக்கின் சில சாம்பிள்களை மட்டும் லண்டன் ட்ரினிட்டி கல்லூரியில் (கணிதவியல் கல்லூரி) உள்ள பேராசிரியர் ஒருவருக்கு அனுப்புகிறார். பதில் கடிதத்தில் லண்டன் வருமாறு அழைப்பும் வருகிறது. லண்டனில் ராமானுஜர் பணியாற்றிய காலம் தொட்டு, அவரது இறப்பு வரை நடந்த சம்பவங்கள், ஒரு இந்தியனாக லண்டனில் ராமானுஜம் எதிர்கொண்ட பிரச்சினைகள், அவமானங்கள், இறுதியில் அவரின் திறமைக்கு கிடைத்த பரிசும், இழப்புமே  “தி மேன் ஹு ந்யூ இன்ஃபினிட்டி” திரைப்படம்.

நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தாலும், திரைக்கதைக்கென நிறைய மாற்றி இருக்கிறார்கள். கடவுளை நம்பாத மேதை ஹார்டி, கடவுள் தான் எல்லாம் என நினைக்கும் ராமானுஜர் இவர்களுக்குள்ளான முரண்பாடான கொள்கையினால் கிடைக்கும் கணக்கியல் போராட்டத்தின் விடையை படத்தில் அழகாகச் சொல்லியிருக்கிறார்கள்.

லண்டலில் ஓர் இந்தியனான தன்னை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயங்கும் இடங்களிலும், உதாசீனப்படுத்தும் போதும், பேசுவதற்கே தடுமாறும் நிலைகளிலும் என்று ஒவ்வொரு காட்சியிலும் தனக்கான நடிப்பை வழங்கியிருக்கிறார் தேவ் படேல் . இருப்பினும் சில காட்சிகளில் சிவாஜி, ஜோதிகாவை எல்லாம் மிஞ்சும் அளவுக்கு ஓவர் ஆக்டிங்கும் இருக்கிறது. ராமனுஜர் மனைவி ஜானகியாக தேவிகா, ராமானுஜத்தை லண்டன் அழைக்கும் பேராசிரியர் ஹார்டியாக ஆஸ்கர் விருது வென்ற ஜெரெமி ஐயர்ன்ஸ் ஆகியோரின் நடிப்பு குறிப்பிடத்தகுந்த சிறப்பு. 

ராமானுஜர் ஒவ்வொரு முறையும், தன் கணிதவியல் தேற்றங்களைப் பற்றி சொல்லும் போது ஹார்டியும், லிட்டில்வுட்டும் ‘கமல் படத்தைப்’ பார்ப்பது போலவே பார்க்கிறார்கள். ராமானுஜரின் முதல் கணிதவியல் புத்தகத்தையே வெறித்துப் பார்க்கும் ஹார்டி, “இதற்கான முடிவை கணக்கிடுவதற்கே வாழ்நாளை செலவழிக்க வேண்டுமே” என்று சொல்லும் நேரத்தில், இதோ ஹேராம்-2 என அடுத்த புத்தகத்தை நீட்டுகிறார் ராமானுஜர். அவர்களுக்கு தேவையெல்லாம் முடிவுகள் அல்ல, விளக்கங்கள். ஆனால், ராமானுஜரிடம், எல்லையில்லா முடிவுகள் இருந்தன. தான் இறந்துவிடுவோம் என்பதும்கூட ராமானுஜருக்கு முன்னரே தெரிந்து இருக்கலாம். அதனால் கூட கணிதத்தில் அவ்வளவு வேகமாக சாதித்துக்கொண்டே இருந்தார்.

முதல் உலகப்போர், சைவ உணவு கிடைக்காமல் அவதி, மனைவியை பார்க்க முடியாமல் போவது போன்ற காரணங்களால் அவரது உடல்நிலை மோசமாகிறது. காசநோயால் அவர் பாதிக்கப்படுகிறார். இறுதியாக அவருக்கு லண்டன் ட்ரினிட்டி கல்லூரில் அங்கீகாரம் அளிக்கப்படும் வேளையில் நோயின் தீவிரத்தால் மருத்துவமனையில் இருக்கும் காட்சிகள், ராமானுஜத்தின் திறமையை வெளிக்கொண்டுவர போராடும் ஹார்டியின் நடிப்பு எல்லாமே க்ளாஸ் ரகம்.

இருப்பினும் உண்மைத்தன்மையில் இருந்து கதை பல இடங்களில் விலகி செல்கிறது. ராமானுஜர் முதலில் வேலை பார்க்கும் இடத்தில், அவரை இங்கிலாந்திற்கு அனுப்ப ஏற்பாடு செய்ய, ராமானுஜரின் தாயார் இதற்கு மறுக்க, அவர் ராமானுஜரிடம், “மட்ராஸ் அப்படிங்கற வார்த்தையே மட்ராஜா என்ற வார்த்தையில் இருந்து தான் வந்தது முட்டாள்களின் கூட்டம் என வன்மமாக  நகைச்சுவை செய்கிறார். நாவலைப் படித்தவரை இது போன்ற எந்தவிஷயமும் இல்லை.

அதே போல் அந்தக் கால கட்டங்களில், பேப்பரின் விலை மிகவும் அதிகமாக இருந்ததால் தான் தேற்றங்களின் முடிவுகளை மட்டும் குறிப்பெடுத்து வந்தார் ராமானுஜர். ஆனால், “ படத்தில் தேவ் பட்டேல் ஒவ்வொரு முறையும் ‘மந்திரத்த தூவினேன் , ஜான் குள்ளமாகிட்டேன் என்பது போல்’ , “ கடவுள் கனவில் தான் கணிதவியல் விடைகளைச் செல்கிறார்” என்று கூறுகிறார்.

கணிதம் போன்ற வறட்சியான பாடங்களைப் பற்றிய வரலாற்றுப் படங்களில், காட்சிகள் தான் ரசிகர்கள் ஈர்க்கும். ஆனால், இதில் பார்ட்டிசன், 1729 கியுபிக்கள், ப்ரைம் நம்பர்கள் போன்ற விஷயங்கள் பேசும் போதெல்லாம், ரசிகர்களும் சற்றே ஹார்டி போல் விழிபிதுங்கிறார்கள். கணிதம் உங்களுக்கு பிடிக்குமெனில் ராமானுஜர் உங்களை  நிச்சயம் ஈர்ப்பார். 8+9க்குக்கூட கால்குலேட்டர் பயன்படுத்துபவர் எனில், பக்கத்து ஸ்கிரீனில் வேற படத்துக்கு புக் செய்து கொள்வது உசிதம்.

இறுதியாக, கணிதத்தைத் தவிர பிற பாடங்களில் ராமானுஜர் சோபிக்கவில்லை. ஆனால், இவற்றை ஈடுகட்டும் அளவுக்கு ’கணித’வளம் அவரிடம் கொட்டிக்கிடந்தது. அதுதான் ராமானுஜர். அவர் இறந்து 100 ஆண்டுகள் ஆகப்போகிறது. இன்னமும் நம் கல்விமுறை அப்படியே இருப்பது தான் கவலைக்கிடம். இந்தமாதிரியான படங்கள் நிச்சயம் மாணவர்களுக்கான பாடம். கணிதம் மட்டுமின்றி உங்களுக்குப் பிடித்தமான துறைகளில் சாதிக்க நிச்சயம் ராமானுஜத்தின் விடாமுயற்சி துண்டுகோலாக இருக்கும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்