டாஸ்மாக் லாபம், மழை சாபம்... கேள்வியெழுப்புகிறது கோ-2 - விமர்சனம் #ko2

முதலமைச்சர் பிரகாஷ்ராஜைக் கடத்துகிறார் பாபி சிம்ஹா. அவர்கள் இருக்கும் இடத்தை போலீஸூம், மீடியாவும் சுற்றிவளைத்துவிடுகிறது. பிரகாஷ்ராஜை மீட்கப் பேச்சுவார்த்தை நடத்துகிறார் உள்துறை அமைச்சர் இளவரசு. பாபிசிம்ஹா பிரகாஷ்ராஜை கடத்தியதற்கான காரணம் என்ன, அதன் பின் என்ன நடக்கிறது என்பதை சிற்சில கண்ணாமூச்சிகளுக்குப் பிறகு சொல்லியிருக்கிறார்கள்.

தேர்தலுக்கு சற்று முன்னர் ஒரு முழுநீள பொலிட்டிகல் த்ரில்லர். முதல்வரைச் சுற்றியிருக்கும் மோசடிப் பேர்வழிகள், 5 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்து அமைச்சராகும் முக்கியஸ்தர், மது விற்பனையால் லாபம் சம்பாதிக்கும் அரசு என டாபிக்கல் டச் ஏகம். ஆனால்,  லீகில் தோற்று வெளியேற பின், ஒப்புக்குச் சப்பாணியாய் ஒரு மேட்ச் போல எந்த வித தாக்கத்தையும் உண்டாக்காத காட்சியமைப்புகள்.

நிஜத்தில் முதல்வர் பிரசாரத்துக்கு வரும்போது நடக்கும் அலப்பறை அக்கப்போர்களே ஆஹா ஓஹோவென்றிருக்க, படத்தில் கடத்தப்பட்ட முதல்வர் இருக்கும் வீட்டுக்கு முன் சின்ன டெண்ட்,  இரண்டே இரண்டு போலீஸ், சில பத்திரிகையாளர்கள், பல கட்சிக்காரர்கள் என பட்ஜெட் சீரியல் போல ஒரு சிச்சுவேஷன்.

அதுவும் முதல்வரே கடத்தப்பட்டு களேபரமாகிக் கிடக்க, பாலசரவணன் சொல்லும் வழவழ, சவசவ ஃப்ளாஷ்பேக் காட்சிகள்  பொறுமையைக் கொல்கிறது. அதற்கான விளக்கம் பின்னர் இருந்தாலும், முன்பாதி அலுப்பு என்பதை மறுப்பதிற்கில்லை. பாபி சிம்ஹா யார், குமரன் யார், நாசருக்கு கதையில் என்ன இடம் என, பல அத்தியாயங்களை பின் பாதியில் போட்டு உடைக்கிறார்கள். இதெல்லாம் தெரிவதற்காக முன்பாதியை அவ்வளவு பொறுமையாகக் கடக்க வைத்திருக்கவேண்டுமா ப்ரோ? 

“கவர்மெண்ட் ஸ்கூல்ல 5 வருசம் படிச்சாதான் கவர்மெண்ட் வேலைனு சட்டம் போடுங்க!’’, “மழைங்ற வார்த்தையையே சாபமா மாத்திட்டீங்க” என ஆங்காங்கே ஷார்ப் &  சபாஷ் வசனங்கள். ஆனால், பல சமயங்களில் பேசிக் கொண்டே இருப்பதும்...ஆவ்வ்..!

காமெடியன் கருணா எமோஷனலாக கலக்க, காமெடி செய்யவேண்டிய பாலசரவணன் தேமே என இருக்க, டெரர் கமிஷனர் ஜான்விஜய் காமெடி செய்கிறார். நாசர், பிரகாஷ் ராஜ் நன்றாக நடித்திருக்கிறார்கள் என்று சொல்வதெல்லாம் வார்த்தை விரயம். பாபி சிம்ஹா பார்க்க கெத்தாகவே இருக்கிறார். ஆனால், "இதி ஷாதாரண விஷயம்" என சாதாரண வார்த்தைகளைக்கூட கடித்துக் கொண்டு பேசுவது ஏன் ப்ரோ?

அழுத்தமாகக் கொடுக்க வேண்டிய திரைக்கதையே பெரிதாக சோபிக்காத நிலையில் இசை, ஒளிப்பதிவு மட்டும் என்ன செய்துவிடமுடியும்?

நல்ல தலைவனாக இன்றைய அரசியல் தலைவர்கள் இருந்தாலும், அடுத்தக் கட்ட பதவியில் இருக்கும் சில அரசியல்வாதிகள் செய்யும் ஊழல்கள், தலைவரையும் சேர்த்தே பாதிக்கிறது. இதனால் மக்களுக்கு ஏற்படும் அநீதியை மெல்லிய கோடாக குறிப்பிட்டுச் செல்கிறது கோ 2.  இன்னும் அழுத்தமாக, மக்கள் குரலாக வெளிப்படச் செய்திருக்க வேண்டாமா?

கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலின் போது, வெளியானது கே.வி. ஆனந்த்தின் ‘ கோ’ படம். இப்போது அடுத்த தேர்தல்.  கோ-2 வெளியாகியிருக்கிறது.  கோ படத்தின் பிளஸ் பாய்ன்ட்களான கே.வி.ஆனந்த் இயக்கம், சுபா திரைக்கதை, ஜீவா-அஜ்மல்-கோட்டா சீனிவாசராவ்-பிரகாஷ் ராஜ் நடிப்பு, திரைக்கதையின் பரபர ட்விஸ்டுகள், ஹாரிஸ் ஜெயராஜ் இசை மற்றும் இன்ன பிற எல்லாவற்றையும் தவிர்த்து வெறும் தலைப்பை மட்டுமே எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். நடிகர்களில் பிரகாஷ்ராஜ் மட்டுமே இரண்டாம் பாகத்தில் இடம் பெற்றிருக்கிறார். கோ படத்தில்  காமெடி, காதலெல்லாம் கலந்து அரசியலைப் பேசியதை உறுத்தாத வண்ணம் அதே சமயம் அழுத்தமாகக் கொடுத்திருப்பார்கள். இந்தப் படம் அரசியலைப் பேசுகிறது என்று ஆரம்பம் முதலே விளம்பரப் படுத்திவிட்டு, அதையும் அழுத்தமாகக் கொடுக்கத் தவறிவிட்டார்கள். 

ஹிட் படத்தின் ஒன்-லைன் வைத்துக்கொண்டு கதை பண்ணலாம். தலைப்பை மட்டுமே வைத்துக்கொண்டு பண்ணினால் எப்படி இருக்கும்?

Don't miss this

Do you like the story?

Please Appreciate the Author by clapping!