Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பீலேவின் ‘ங்கா’வும்... ரஹ்மானின் ஜிங்காவும்..! #PeleMovie

பீலேவின் நிஜப்பெயர் Edson Arantes do Nascimento. அவரது அம்மா வேலை செய்யும் வீடு ஒன்றில் அவருடன் சென்று தரையைத் துடைத்துக் கொண்டிருக்கும்போது, அந்த வீட்டு இளைஞன் ஃபுட்பால் விளையாடிவிட்டு வந்து நண்பர்களோடு பேசிக் கொண்டிருக்க, ’நான் பீலே மாதிரி கோல் கீப்பிங்கில் நிப்பேன்’ என்கிறான் எட்சன். லோக்கல் ‘வாஸ்கோடகாமா’ டீமின் கோல் கீப்பர் Bile என்பவரின் பெயரை ‘பீலே’ என்று தவறாக இவன் உச்சரிக்க, இவனை ‘பீலே.... பீலே’ என்று அழைத்து அவமானப்படுத்துகின்றனர் அவர்கள். அந்தப் பெயரைக் கேட்டாலே கோவம் வருகிறது இவனுக்கு.

ஆனால், அந்தப் பெயரை உலகமே உச்சரிக்க வைத்து.. அவமானத்தை வென்று சரித்திரத்தில் நின்றதைச் சொல்கிற பயோகிராஃபி படம்தான் பீலே.

எல்லா ஸ்போர்ட்ஸ் படங்களின் டெம்ப்ளேட் வடிவத்தில்தான் பீலேவும் படமாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் மற்ற படங்களில் இருந்து பீலே தனித்து நிற்கக் காரணம் கதை மாந்தர்களின் நடிப்பும், உணர்வுபூர்வமாக நம்மை படத்தோடு ஒன்றச் செய்வதும்தான்.

இந்தியா என்ற தேசத்திற்கு என ஒரு நிறத்தை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியுமா? இந்தியாவில் காந்தியின் நிறத்திலும், காமராஜரின் நிறத்திலும், நேருவின் நிறத்திலும் என்று மனிதர்கள் வெவ்வேறு நிறங்களில் இருப்பார்கள். உலகில், காலணி ஆதிக்க நாடுகளில்தான் மனிதர்கள் வெவ்வேறு நிறங்களில் இருப்பதைக் காணலாம். அதேபோலத்தான் தென் அமெரிக்காவில் இருக்கும் பிரேசிலும் இருக்கிறது. போர்ச்சுக்கீசியர்களின் படையெடுப்பால், அங்கிருந்த மனிதர்களின் கலை, மொழி எல்லாம் அழிக்கப்பட்டது. இனவெறி தாக்குதலில் பிரேசிலின் தொன்மைக்கலையான ஜிங்காவை, போர்ச்சுகீசியர்கள் அழித்த நிகழ்வுகள் ஒரு சில நிமிடங்களே வருகிறது. பீலே, ஒரு கறுப்பு இனத்தவர் என்பதால், பல இடங்களில் எள்ளலுக்கு ஆளாகிறார். அதுவும், வெள்ளையர்கள் கோலோச்சிய கால்பந்தில், கறுப்பின பீலே வென்று அசத்தியதை 107 நிமிடங்களில் தொய்வில்லாமல் காட்டியிருக்கிறார்கள்.


பீலேவின் சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்த லியானர்டாவும், பதின்ம வயது கதாபாத்திரத்தில் நடித்த கெவினும் அசத்தியிருக்கிறார்கள். அவர்களைவிடவும் சிறப்பாக நடித்து இருப்பவர்கள் இருவர்.

பீலேவின் தந்தையாக வரும் சீ ஜார்ஜ் . 1950-ம் ஆண்டு ரேடியோவில் பிரேசில் தோற்றதைக் கேட்டு, கண்ணீரோடு புலம்பும்போது ஒரு ரசிகனாக வாழ்ந்திருக்கிறார். அதே, தன் மகன் பீலேவால் நாடு ஜெயிக்கும்போது, நாட்டுக்காக தன் மகன் ஈட்டிய வெற்றி என்று மகிழ்ந்து பெருமைப்படும்போது தந்தையாகவும், ஃபுட்பால் ரசிகனாகவும் முகத்திலேயே உணர்ச்சிகளைக் காட்டி நடித்த இடத்தில் கைதட்டல் அள்ளுகிறார். ஒரு காட்சியில் அவரது கிராமமே அங்கு இருக்கும் கடையில் குழுமி இருக்கிறது. அருகில் இருக்கும் தேனீர் குவளையை எடுக்கும் சமயம், பீலே வரும் காட்சி போய்விடுமோ என்கிற பயத்தில், அதை எடுக்காமலே காத்துக்கிடப்பார் . டக்கென அவர் குவளையை எடுக்க, பீலே தோன்றுவார். அந்த நொடியில் ஜார்ஜின் முக மின்னல்கள் அட்டகாஷ்!

இன்னொருவர்.. பயிற்சியாளராக வரும் வின்சென்ட். முதலில் ‘உங்க குரங்குச் சேட்டையெல்லாம் வேண்டாம்’ என்று கண்டிப்பு காட்டி, இறுதியில் ‘உங்க ஸ்டைல்லயே விளையாடுங்க’ என்று ஊக்கப்படுத்துகிற இவர், தன் தேர்ந்த நடிப்பால் கெத்து டெம்போ சேர்க்கிறார். குறிப்பாக, போட்டிகளின்போது, பெருமிதத்தை முகத்தில் காட்டிக் கொண்டே அணியை வழிநடத்தும் இடங்களில் சபாஷ் போட வைக்கிறார்.

அணியே, தொய்வாக இருக்க.. அவர்களை உற்சாகப்படுத்த ஹோட்டலுக்குள்ளேயே ஃபுட்பால் விளையாட அழைக்கிறார் பீலே. தூரத்தில் இருக்கும் ஒரு லைட் ஹவுஸை காட்டி, ‘அங்க கோல் அடிக்கணும்’ என்கிறார். ஹோட்டல் முழுவதும் பறந்து பறந்து விளையாடிக் கொண்டிருக்க.. அங்கங்கே இருப்பவர்கள் ‘என்ன இது தொந்தரவு பண்ணிகிட்டு’ என்று முகம் சுளிக்கிறார்கள். அப்போது தேநீர் அருந்திக் கொண்டிருக்கும் ஒருவரின் சர்க்கரைக் கிண்ணத்தில் பந்துபட்டுவிட, பீலே “ஸாரி.. ஸாரி’ என்று மன்னிப்பு கேட்க, முதுகுகாட்டி அமர்ந்திருக்கும் அவர் திரும்பிச் சிரிக்கிறார். அவர் ஒரிஜினல் பீலே!


’நிஜ’ பீலேவுடன் ஏ.ஆர்.ரஹ்மான்

கால்பந்து போட்டிகளின், பின்னணி இசையில் ஏ.ஆர்.ரஹ்மான் பின்னியிருக்கிறார். அதுவும் தோற்பது போல போகும் போட்டியின் நிலை மாறி, பிரேசில் கைக்கு வந்ததும் பீட்களில் டெம்போ கூட்டி அதகளம் காட்டியிருக்கிறார். இணையத்தில் ஹிட்டடித்த, ஏ.ஆர்.ரஹ்மான் நடித்துப் பாடிய இந்தப் படத்தின் ‘ஜிங்கா ஜிங்கா’ பாடலை முடிவில் போடுவார்கள் என்று எதிர்பார்த்தால்.. ம்ஹும். பின்னணியில்தான் ஒலிக்க விட்டிருக்கிறார்கள். இந்தியாவில் மட்டுமாவது போட்டிருக்கலாமே பாஸ்!

படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளர் பீலே! ஓர் இடத்தில் கூட அவரது தந்தையை விட்டுக்கொடுக்கவில்லை. தாயைத் தேடும் சிசு ‘ங்கா...ங்கா..!’ என சிணுங்குவதைப் போல, பீலே தன் அப்பா மீது வைத்திருக்கும் ‘ங்கா’ பாசத்தை ஒவ்வொரு ஃப்ரேமிலும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். படம் முடிந்து பீலேவின் சாதனைகள் எண்டு கிரெடிட்ஸில் ஓடும். பீலேவின் பல சாதனைகள் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘ஜிங்கா ஜிங்கா’ பாடல் பின்னணியில் ஒலிக்க திரையில் ஒளிரும். அப்போது ஒரு நொடி.. பீலே முறியடிக்காத ஒரே சாதனை ‘ஒரே போட்டியில், ஐந்து கோல்கள் அடிப்பது’ என்று வரும். அடுத்த நொடி.. அந்தச் சாதனையை கைவசம் வைத்திருப்பவர் Dondinho டண்டின்ஹோ என்று வரும்.

அவர்...

பீலேவின் தந்தைதான்!

.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்