‘லூசியா’ புகழ் இயக்குநர் பவன்குமாரின் ‘யூ டர்ன்’ #படம் எப்படி

சாலையில் செல்லும் போது நம்மை படாதபாடு படுத்துவது ஒன்-வேக்கள் தான். சில சாலைகளில் தவறாக சென்று விட்டால், 2 கிமீ வரை சென்று யூ-டர்ன் அடிக்க வேண்டியதிருக்கும். அதற்காக, அங்கு இருக்கும் சிறு கல்லை நகர்த்திவைத்துவிட்டு அதில் ஒரு சிறு யூ-டர்ன் அடித்து செல்வது தான் மக்களின் வழக்கம். அப்படி நகர்த்தி வைக்கப்படும் கற்களால் ஏற்படும் விபத்துக்களைப் பற்றி , நாம் ஒரு நாளும் கவலைப்பட்டதேயில்லை.

ஒரு தனியார் நாளிதழில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்க்கும் ரச்சனா, இப்படி செல்பவர்களின் வண்டி எண்களை குறித்து வைத்துக்கொண்டு , ஒரு விரிவான கட்டுரை ஒன்றை எழுத நினைக்கிறார்.ஆனால், வாழ்க்கை அவருக்கு யூ-டர்ன் அடிக்கிறது. அவரது டைரியில் இருக்கும் முதல் நபரின் வீட்டுக்கு செல்ல, அவர் தற்கொலை செய்திருக்கிறார்.  போலீஸ் ரச்சனா தான் கொலையாளி என்ற கோணத்தில் ஆரம்பிக்கிறது. ரச்சனாவின் டைரியில் இருக்கும் வண்டி எண்களை வைத்து, போலீஸ் மேலும் விசாரிக்க, டைரியில் இருக்கும் 10 நபர்களுமே தற்கொலை என பதில் வருகிறது. எல்லாமே தற்கொலையா?, ரச்சனா தான் கொலை செய்கிறாரா?, ஏன் இந்தக் கொலைகள் என்பதை ஹாரர் த்ரில்லராக கொடுத்து இருக்கிறார் லூசியா புகழ் பவன் குமார்.

த்ரில்லர் படம் என்பதால், படத்தில் பாடல்கள் என எதுவும் இல்லை. கன்னட மொழியில் இப்படி எல்லாம் எடுக்க தனி தில் வேண்டும். புதுமுக நாயகி ஷ்ரதா ஸ்ரீநாத் (ரச்சனா) அட்டகாசமாக நடித்து இருக்கிறார். தன் தாயாரிடம் திருமணம் பற்றிப் பேசும்போது, தன்னை யாரோ ஃப்ரேம் செய்து மாட்டிவிடுகிறார்கள் என பயப்படும் போது, அவை தற்கொலை அல்ல என போராடும் போது என பல காட்சிகளில் க்ளாஸ்!

பெங்களூருவில் இருக்கும் டபுள் ரோடு ஃப்ளைஓவர் தான் படத்தின் நாயகன்.

ஒரு வழக்கை விரைவாக முடிப்பதற்காக,  சந்தேக லிஸ்டில் இருக்கும் வழக்கைக் கூட தற்கொலை என மூடும் காவல்துறையின் கறுப்புப்  பக்கங்களையும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது யூ-டர்ன்.
முதல் பந்தில் சிக்ஸர் அடித்தவர்கள், அடுத்த பந்தில் 4 அடித்தால்கூட ரசிகர்கள் ஏமாற்றத்தோடு தான் பார்ப்பார்கள். அப்படியிருக்க, பவன் குமார், லூசியா மூலம் இந்திய அளவில் முதல் பந்திலேயே சதம் அடித்தவர். அவரின் மீது ஏற்பட்ட, அதீத எதிர்பார்ப்பு ஒன்று தான் , படம் சாதரண படமோ என நினைக்க வைக்கிறது.

படம் பார்த்து முடித்து,  வெளியில் வந்து பைக்கைச் செலுத்தும்போது, சாலைவிதிகளை மதிக்காமல், யூ-டர்ன் அடிக்க ஒரு கணம் யோசிப்பார்கள் என்பதே படத்தின் வெற்றி.

லூசியா மூலம் கனவுக்கதைகளை வேறு கோணத்தில் சொல்லி மிரள வைத்த பவன் குமார், இந்தமுறை சமூக விழிப்புணர்வு படம் எடுக்க முயற்சி செய்து இருக்கிறார்.பெங்களூரு டபுள் ரோடு ஃப்ளை ஓவரில் விதிமுறைகளை மீறி யூ-டர்ன் அடிக்கும் மக்களை படம் பிடித்தபடி படம் நிறைவு பெறுகிறது. சமீபத்திய பேட்டி ஒன்றில், " வேறு ஒரு படம் எடுப்பதாக இருந்தேன். அதற்கு பட்ஜெட் அதிகம் தேவைப்பட்டதால், இந்தப்படத்தை சின்ன பட்ஜெட்டில் இயக்கியுள்ளேன்" என கூறி இருந்தார் பவன்.

வி ஆர் வெய்ட்டிங் பாஸ்!
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!