வெளியிடப்பட்ட நேரம்: 16:22 (31/05/2016)

கடைசி தொடர்பு:16:43 (31/05/2016)

கண்ணாடிக்குள் புகுந்தால் கற்பனை உலகம்! - Alice Through the Looking Glass

நார்நியா, ஹாரிபாட்டர் போன்ற மாயாஜால தொடர் படங்களின் வரிசையில் வந்து இருக்கும் மற்றுமொரு படம் தான்  "அலைஸ் த்ரூ தி லுக்கிங் கிளாஸ்" (Alice Through the Looking Glass).

லூயிஸ் கரோல் 1865-ம் ஆண்டு எழுதிய "அலைஸ் இன் ஒண்டர்லேண்ட்” குழந்தைகள் புத்தகத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட முதல் படம் 2010-ல் வெளியாகி அதிரி புதிரி ஹிட் அடித்தது. படம் இரு ஆஸ்கர் விருதுகளையும் தட்டிச் செல்ல, இரண்டாம் பாகமான “அலைஸ் த்ரூ தி லுக்கிங் கிளாஸ்” படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியது.

மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக கப்பலிலேயே குடித்தனம் இருக்கும் அலைஸ் சீனாவில் இருந்து லண்டனுக்கு திரும்பும்போது,  அவருக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது.  “கப்பலைத் திருப்பிக் கொடுத்துவிட்டு, வீட்டின் பத்திரத்தை வாங்கிக்கொள்” என பயமுறுத்துகிறான் ஹமிஷ் அஸ்காட். முந்தைய பாகத்தில், குழியில் விழுந்து பாதாள உலகத்திற்கு செல்லும் அலைஸ், இந்த பாகத்தில் கண்ணாடியில் நுழைந்து பாதாள உலகத்திற்கு செல்கிறார். அங்கு வெள்ளை ராணி (அன்னா ஹேத்தவே), ஹேட்டர் (ஜானி டெப் ) ஆகியோரை சந்திக்கிறார்.

தன் குடும்பம் இன்னமும் உயிருடன் இருப்பதாக நம்பும் ஜானி டெப், அலைஸ் அவர்களை மீட்டுக் கொண்டுவந்தால் தான், உடல் நலம் பெற்று குணமாவேன் என அசைன்மென்ட் கொடுக்கிறார். டைமிடம் (அது ஒரு ஆள் பாஸ்) இருக்கும் க்ரோனோஸ்பியரை அபேஸ் செய்து டைம் ட்ராவல் செய்து , ஜானி டெப்பின் குடும்பதைக் காப்பாற்றினாரா, டைம் என்ன ஆனார், வில்லி சிவப்புராணி (ஹெலெனா பொன்ஹாம் கார்ட்டர் ) திருந்தினாரா என முடிகிறது கதை.

குள்ள இரட்டையர்கள், மறையும் பூனை, வெள்ளை முயல், டைமின் வேலை ஆட்கள், டைம் என பலருக்கும் காமெடி ஒன்லைனர்களை எழுதி சிரிப்பு மூட்டுகிறார் லிண்டா வூல்வெர்டன். டைமை உட்கார வைத்து ஜானி டெப்பின் அணி செய்யும் காட்சிகள் எல்லாம் காமெடி சரவெடி.

டைம் ட்ராவல் செய்து நாம் எவ்வளவு பின்னோக்கிச் சென்றாலும், நிகழ்வுகளின் முடிவை மாற்ற முடியாது. ஆனால், அதன் மூலம் நாம் பாடம் கற்கலாம் என்ற தத்துவத்தை சொல்கிறது படம். பெரிய சைஸ் மண்டையை வைத்துக்கொண்டு, முதல் பாகத்தைப் போலவே டெரர் வில்லியாக கத்தி கூச்சலிடுகிறார் ஹெலெனா பொன்ஹாம் கார்ட்டர்.  50 வயதினைக் கடந்த ஹெலெனாவும், ஜானி டெப்பும் மேக்-அப் , நடிப்பு என இரண்டிலும் கலக்கி இருக்கிறார்கள்.

ஜானி டெப், ஹெலெனா பொன்ஹாம் கார்டர், அன்னா ஹேத்தவே , சச்சா பாரொன் கொஹென் போன்ற அட்டகாசமான ஸ்டார் காஸ்டிங் இருந்தும் , படத்தை நகர்த்தும் விதமாக காட்சிகள் இல்லாததால், படம் எதிர்பார்த்த அளவுக்கு ஹிட் ஆகவில்லை. ஃபேன்டஸி, டைம் ட்ராவல், காமெடி ஒன்லைனர்கள் என அசத்தினாலும், முதல் பாகமான அலைஸ் இன் வொண்டர்லேண்ட் அளவிற்கு கூட, இந்தப்படம் இல்லாதது ரசிகர்களை கொஞ்சம் ஏமாற்றி இருக்கிறது.

“எது கனவு, எது நிஜம் என்பதை நாம் தான் தீர்மானிக்கிறோம்” என ஜானி டெப் கடைசியாக சொல்லும் பன்ச் வசனத்தை நினைவில் வைத்து, படத்தை கனவாக நினைத்து மறப்பது தான் முதல் பாகத்திற்கு நாம் செய்யும் நன்றி. இறுதியில், சிவப்பு ராணி, வெள்ளை ராணியின் தவறை ஏற்று, மனம் திருந்துவதால், அடுத்த பாகம் இருக்காதென நம்புவோம். 

படத்தைப் பார்த்து ஆங்கிரி ஆவதற்குப் பதில், ஆங்கிரி பேர்ட்ஸ் படம் பார்க்கலாம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்