Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஹாட்ரிக் வெற்றியைத் தொட்டிருக்கிறாரா கார்த்திக் சுப்புராஜ்? - இறைவி விமர்சனம்

“யாரோ வந்து சுதந்திரம் கொடுக்க நீயோ அடிமை இல்லையடி உன் மனதில் உன் சுதந்திரம் உண்டு நீயே உணர்ந்து கண்டுபிடி"  என்ற வரியை மிக அழுத்தமாகச் சொல்கிற படம்தான் “இறைவி”. தலைமுறைகள் கடந்தாலும், நவீன உலகினுள் புகுந்தாலும் இன்றும் ஆண்களை சகித்துக்கொண்டு வாழும் பெண்களுக்காக, அவர்கள் தினந்தோறும் சந்திக்கும் உடல் ரீதியான கஷ்டங்கள்,  மன வேதனைகள், வலிகள்  இதனை பிரதிபலிப்பதற்காக,  பெண்மைக்காகவென்றே ஒரு படம் இயக்கியிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.

குடிகார கணவனால் மனரீதியில் வேதனைப்படும் கமலினிமுகர்ஜி, கோபப்பட்டு உணர்ச்சிவசத்தால் தவறுசெய்யும் கணவனால் தன் சின்னச் சின்ன ஆசைகளையும் கனவுகளையும் நனவாக்க முடியாமல் துடிக்கும் அஞ்சலி,  கணவனின் ஆணாதிக்கத்தால் கோமாவிற்குச் செல்லும் வடிவுக்கரசி, கணவனை இழந்து தன் வாழ்க்கையைத் தானே செதுக்கிக் கொள்ளும் பூஜா தேவரியா என்று சில பெண்களுக்கான வாழ்க்கையைச் சுற்றிச் சுழலும் கதையும், அவர்கள் சார்ந்த ஆண்களால், அந்தப் பெண்கள் எடுக்கும் முடிவுகளுமே இறைவி.

குடிகாரனாகவே குடித்தனம் நடத்தியிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. தன் படத்தை வெளியிட மறுக்கும் தயாரிப்பாளருடன் சண்டையிடுவதாகட்டும், மனைவியை இழந்துவிடுவோமோ என்ற விரக்தியில் புலம்புவதாகட்டும்  நடிப்பு அவ்வளவு லாவகமாக கைவருகிறது அவருக்கு. குடிகாரனாகவே இருந்து விட்டு, ஒரு காட்சியில் குடிக்காமலே குடிகாரனைப் போல நடிப்பார்.. அப்போது உண்மையாகவே குடித்துவிட்டு வந்ததற்கும், குடித்ததாய் நடிப்பதற்கும் உள்ள வேறுபாட்டைக் காண்பித்திருப்பார். அதே போலவே அந்த க்ளைமாக்ஸ் காட்சியில் வசனம் பேசும்போது, முகம் முழுவதும் நடிக்கிறது.  நடிப்பு மட்டுமல்ல, நடனம், பாடல் என்று பன்முகத்தன்மையை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்தப் படத்தில், கதைக்கடுத்த நாயகன் - நீங்கள்தான்! ஹாட்ஸ் ஆஃப் ப்ரோ!

விசுவாசத்திற்காக உணர்ச்சிவசப்பட்டு பொங்குகிற கேரக்டரில் சரிவரப் பொருந்தியிருக்கிறார் விஜய்சேதுபதி. வழக்கம் போலவே அவர் டயலாக் மாடுலேஷனும் கைகொடுத்திருக்கிறது. ஆனால், இனி வேறுபாடு காண்பிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது விஜய்சேதுபதிக்கு. பாபிசிம்ஹாவைப் பார்க்க மனமின்றி ஒதுங்கிச் செல்லும் காட்சியில் - வெரிகுட் வாங்குகிறார்.

கமலினி முகர்ஜி, அஞ்சலி இருவரது நடிப்பும் மிகச்சரியாக அவர்கள் கதாபாத்திரத்தைப் பிரதிபலிக்கிறது. ஒரு பெண்ணுக்காக எதையும் செய்யத் துணியும் பாபிசிம்ஹா,  சில காட்சிகளே வந்தாலும் கெத்து காட்டியிருக்கும் பூஜா தேவரியா, ராதாரவி, கருணாகரன் என்று ஒவ்வொரு கேரக்டர் தேர்வும் அதன் நடிப்பில் அவர்கள் பொருந்திய விதமும் சிறப்பு. 


ஆனாலும், ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அறிமுகப்படுத்தி கதைக்குள் நாம் வருவதற்கே சில நிமிடங்கள் ஆகிவிடுகிறது.  விஜய் சேதுபதியின் சித்தப்பாவுக்கும், பூஜா தேவரியாவுக்குமான பெண் கேட்டுச் செல்லும்போது நடக்கும் உரையாடல் காட்சி உட்பட சில காட்சிகளில்,’அட, செம..’ என்று நினைத்து சீட்டின் நுனியில் அமரும் போதெல்லாம், அடுத்த காட்சி சூடுபிடிக்க  மறுக்கிறது. குடி, சிற்பம், சினிமா, குடும்பம், போதை மறுவாழ்வு மையம் என்று காட்சிகள் தனித்தனியாக கைதட்ட வைத்தாலும், அதைக் கோர்வையாக்குவதில் கொஞ்சம் தடுமாறியிருப்பது தெரிகிறது.   

படத்தில் வரும் சந்தோஷ் நாராயணன் பாடல்கள் சில என்றாலும், படம் ஆரம்பிக்கும்போது ‘தானத்தந்தந்த’ என்று தென்றல் வந்து-வில் ஆரம்பித்து இளையராஜாவின் பாடல்கள் பத்து இருக்கலாம். சந்தோஷின் பின்னணி இசையுடன் கைகோர்த்துப் பயணிக்கிறது ராஜாவின் பாடல்கள்.

க்ளைமேக்ஸில் படம் முடியும் என்று பார்த்தால், மீண்டும் படம் ஆரம்பிக்கிறது. ‘படம் முடிஞ்சுடுச்சே’ என்று நினைக்க வைக்கிற இடங்கள் ஒன்றிரண்டு வருகிறது.  க்ளைமாக்ஸ் இப்படி என்கிற பட்சத்தில் படத்தில் கொஞ்சம் கத்திரி வைத்திருக்கலாம். ’பாடினாலே இப்பலாம் ஆர்ட் இல்ல.. கமர்ஷியல்ங்கறாங்க’ என்று படத்தில் அவர்களே சொன்னபடி, வலிந்து திணிக்கப்பட்ட பாடல்களைக் குறைத்திருக்கலாம். ஆரம்ப பாபி சிம்ஹா, காலேஜ் குழுவினர் இழுவை ஃபைட்டைத் தூக்கியிருக்கலாம். இப்படி..

வசனங்கள் - நிச்சயம் குறிப்பிடவேண்டியதாகிறது. ‘கருவுல இருக்கற குழந்தையை தள்ளி வெச்சுட்டு இன்னொரு குழந்தை பெத்துக்குவியா?’ என்று படைப்பாளியின் வேதனையை, ‘எனக்கு ஒரு குழந்தை இருக்கு. ஆனா யாரும் என்கிட்ட லவ்வை சொன்னதில்ல’ என்று திருமணமான பெண்ணின் மன உணர்வை, ‘பொறுத்துக்கறதுக்கும்.. சகிச்சுக்கறதுக்கும் நாம என்ன பொம்பளையா... ஆம்பளை” என்று ஆணாதிக்கத்தை குத்திக் கிழிக்கும் வசனங்கள் இப்படி பல.

முதல் காட்சி மழையுடன் தொடங்கி, இறுதிக்காட்சியும் மழையிலேயே முடிகிறது. முதல் காட்சியில் கமலினி முகர்ஜி, அஞ்சலி, வடிவுக்கரசி மூன்று பேருமே அந்த மழையில் நனைய ஆசைப்படுகிறார்கள். இறுதிக்காட்சியில் வடிவுக்கரசி, எண்ணமேதுமற்ற கோமாவில் இருப்பார். கமலினி முகர்ஜி, ‘நனையலாமா’ என்று  கேட்கும் குழந்தையிடம்  ‘நனைந்தால் ட்ரெஸ் நனைஞ்சுடுமே, வேணாம்’ என்பார். அஞ்சலி, தன் குழந்தையுடன் இறங்கி மழையில் நனைவார்.

மழையில் நனைய எல்லோருக்கும் ஆசையிருக்கும், அதை பெண்ணின் மனநிலையோடு பொருத்தி, சமுகத்திற்கான கருத்தையும் சில வுமன்களை வைத்து வெளிப்படுத்திய விதத்திலும், முந்தைய இரண்டு படங்களிலிருந்து வேறு பட்ட கதையைத் தேர்வு செய்ததிலும் இயக்குநர் கைதட்டல் பெறுகிறார். படத்தில் வன்முறை, குடி, மெதுவாக நகர்தல், நீ...ளமான க்ளைமாக்ஸ் என சில மைனஸ் இருந்தாலும், படம் முடிந்தவுடன் அனிச்சையாக மனைவிக்கோ அல்லது காதலிக்கோ தொலைபேசுகிறோம். அதில்தான் இந்த இறைவி வெற்றி பெறுகிறாள்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

விகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது? விஜய்யிடம் என்ன பிடிக்கும்? - விஷால்