Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘போனோமா-சிரிச்சோமா-வந்த உடனே மறந்தோமா’ வகையில் அடுத்த படம் ‘முத்தின கத்திரிக்கா’ - விமர்சனம்

 


ஒரே ஆளாய் கட்சி ஆரம்பித்து, ஒரே ஆளாய் அதை ஒப்பேற்றிக் கொண்டிருக்கும் சுந்தர்.சிக்கு நாற்பது வயதாகியும் திருமணமாகவில்லை. பூனம் பாஜ்வாவைப் பார்த்து காதலில் விழும் அவருக்கு, பெண் கேட்கப் போன இடத்தில் அதிர்ச்சி. அதோடு மட்டுமல்லாமல்,  ‘கவுன்சிலராகக் கூட வக்கில்ல’ என்று பூனம் பாஜ்வாவின் அப்பா ரவி மரியா சொல்லிவிட, எம்.எல்.ஏ. ஆக ஐடியா செய்கிறார். பழைய பாட்டு புத்தகத்தில் போட்டிருக்கிற மாதிரி.. ‘மீதியை வெள்ளித்திரையில் காண்க!’

பேய்ப் படங்கள், ஆர்ட் படங்கள் என்று மாறி மாறி ட்ரெண்டில் இருக்கும் தமிழ் சினிமாவில் இப்போது காமெடி படங்களின் காலம். படத்தில் ஒரு காட்சியில் ‘இன்றோரு தேர்தல் பிரசாரம் முடிந்துவிட்டது’ என்று பேசிக் கொள்கிறார்கள். அன்றைக்கு இரவே சதீஷ் அடிவாங்கியதைக் காட்டி ஜீப்பில் பிரசாரம் செய்வார்கள். ’அதெப்படி பிரசாரம் முடிஞ்சுச்சு  என்று சொன்ன அன்னைக்கு நைட்டே பிரசாரம் பண்றாங்க?’ என்று லாஜிக்கெல்லாம் பார்க்காமல் ‘போனோமா-சிரிச்சோமா-வந்த உடனே மறந்தோமா’ படங்களின் வரிசையில் இந்த வாரம் வந்திருக்கும் படம் முத்தின கத்திரிக்கா. பிஜூ மேனன் - நிக்கி கல்ராணி நடிப்பில் மலையாளத்தில் வந்த வெள்ளி மூங்ஙா (மூக்கில் படிக்கவும்) படத்தின் ரீ மேக்.

ஒரு பக்கம் கேரன்டியான வசூல் படங்களை இயக்கிக் கொண்டு வெற்றிகரமான இயக்குநராக, தயாரிப்பாளராக வலம் வரும் சுந்தர்.சி இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல், இமேஜ் பார்க்காமல் தனக்குப் பொருந்திப் போகிற ஒரு வேடத்தை ஏற்று நடித்ததற்கு சபாஷ். சதீஷ் கதாபாத்திரம் அவருடனே வந்து, அவரையும் கலாய்த்துக் கொண்டே இருக்கிறது. அவரது காமெடிகள் சிரிக்கவைத்தாலும், ஓவியரை வைத்து வரைந்ததுபோல அந்த விபூதிப்பட்டையும் லிப்ஸ்டிக்கும் ஒட்டவே இல்லை ப்ரோ.

பூனம் பாஜ்வா அலட்டலில்லாத நடிப்பால் கவர்கிறார். கவர்ச்சிப்பதுமை என்றெல்லாம் இல்லாமல், படத்திற்கு தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்.

படத்தில் ஒவ்வொரு கேரக்டரும் தங்களுக்குள் கொடுக்கும் கவுன்டர் டயலாக்குகள் க்ளாப்ஸ் அள்ளுகின்றன. சிங்கம் புலி, விடிவி கணேஷ், கிரண், ரவி மரியா, யோகிபாபு, ஸ்ரீமன் என்று காமெடி பட விதிகளின் படி நட்சத்திரப்பட்டாளம்.  

‘ஏண்டா.. அவனான்னு பாருங்கடான்னா அவனே வந்து பார்க்கற வரைக்கும் பார்ப்பீங்களாடா?’ என்பது போல கிச்சுகிச்சு வசனங்கள் படத்தைத் தொய்வில்லாமல் கொண்டு போகின்றன. அரசியல் சம்பந்தப்பட்ட காட்சிகள் படத்தில் பாதிக்கு மேல் இருந்தாலும், இன்னும் இறங்கி வசனத்தில் காமெடி பண்ணியிருக்கலாம் என்பதை மறுப்பதற்கில்லை. சித்தார்த் விபினின் இசை ‘இந்தப் படத்துக்கு இது போதும்’ ரகம்.

பூனம் பாஜ்வா, கிரண் சம்பந்தப்பட்ட காட்சிகளில் என்ன காமெடி செய்தாலும் ஆபாசமாவே மாறுகிற அபாயம். ஆனாலும் ஒன்றிரண்டைத் தவிர மற்றவை ரசிக்கவே வைக்கிறது.

சமீபகாலங்களில் பார்க்கிற காமெடி ஜானர் படங்களின் குறையே ஞாபகம் வைத்துக் கொள்வது போன்ற காட்சியமைப்புகள் குறைவாக இருப்பதுதான். மிகவும் கஷ்டமான விஷயம் சிரிக்க வைப்பது என்பதும் உண்மை. ஆனால், தற்போதைய படங்களை கவனிக்கும்போது ஒன்று தெரிகிறது. சில வருடங்கள் கழித்து ஒரு காட்சியைச் சொல்லி ‘எந்தப் படம்’ என்றால் பத்து படங்களாவது மனதில் வந்து போகும். அப்படி இல்லாமல் காட்சியமைப்பில் வித்தியாசமாக, மனதில் நிற்கிற மாதிரியாக இருக்கவேண்டுமென்று சிரமப்பட்டு முயன்றால் அந்தப் படம் கொஞ்சமாவது பேசப்படும்.

முத்தின கத்திரிக்கா - பி&சி மார்க்கெட்களில் விலைபோகும்.


 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்