வெளியிடப்பட்ட நேரம்: 10:47 (30/07/2016)

கடைசி தொடர்பு:16:01 (30/07/2016)

கனவுகள் இலவசம்! - ஸ்பீல்பெர்க்கின் The BFG - படம் எப்படி? #TheBFG

சோஃபிக்கு இரவில் சரியாக தூக்கம் வராத ‘இன்சோம்னியா’ வியாதி. தாய் தந்தை இல்லாத அவள், தான் இருக்கும் ஆதரவற்றோர் விடுதியில் படுத்து புத்தகம் படித்துக் கொண்டிருக்கும்போது 24 அடி உயர பிரம்மாண்ட உருவமொன்றைப் பார்த்துவிடுகிறாள். அந்த உருவம், ஜன்னலுக்குள் கைவிட்டு சோஃபியை, தன் தேசத்துக்கு எடுத்துச் செல்கிறது. என்னைப் போன்றவர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்ற ரகசியம் உனக்குத் தெரிந்துவிட்டதால், வேறு வழியில்லை.. உன் ஆயுட்காலம் முழுவதும் நீ இங்கேதான் இருக்க வேண்டும் என்கிறது.

சோஃபியால் BFG (Big Friendly Giant) என்றழைக்கப்படும் அந்த மாபெரும் உருவத்திற்கு, மனிதர்களின் கனவைக் கட்டுப்படுத்தும் சக்தி உண்டு. சோஃபிக்கு ‘இன்சோம்னியா’ என்பதால் அதை அவள் நம்பத்தயாராக இல்லை. ’நீ தூங்கியே ஆகணும். இல்லைன்னா,, மனுஷங்களை சாப்டற வேற பெரிய உருவங்கள் வந்து உன்னை சாப்டுடும்’ என்று பயமுறுத்துகிறது.

சோஃபி உறக்கம் வராமல் இருக்க, 24 அடி உயர BFG சொன்னது போலவே, அவரை விட மாபெரும் உருவமாக, 54 அடியில் ஃப்ளஷ்லம்பீட்டர் என்கிற மனிதர்களை உண்ணும் உருவம் இவரது இருப்பிடத்திற்கு வருகிறது. ‘என்னமோ மனுஷ வாடை அடிக்குதே’ என்று அது தேட BFG சோஃபியை ஒளிந்திருக்கச் சொல்லிவிட்டு அதெல்லாம் இல்லை என்று சமாளித்து அனுப்பிவிடுகிறது.


அதன்பிறகு BFG சோஃபிக்கு சில மாற்று உடைகளைக் கொடுக்க, அதில் அவள் சிகப்புச் சட்டை ஒன்றை அணிந்து கொள்கிறாள். அதைப் பார்த்ததும் ஒரு நொடி, BFGக்கு கண்கள் கலங்குகிறது. காரணம், ஏற்கனவே தன்னைப் பார்த்துவிட்டதால், இதே போல எடுத்துவந்த ஒரு சிறுவன் அணிந்திருந்ந்த சட்டை அது. அந்தச் சிறுவன் மனிதர்களை உண்ணும் கூட்டத்தால் பலியானதுதான் காரணம்.

ஒருநாள் BFG-யும் சோஃபியும் கனவுகளின் தேசத்துக்கு செல்ல தீர்மானிக்கிறார்கள். அங்கிருந்து நல்ல கனவுகளை எடுத்து வந்து, உறங்கும் குழந்தைகளுக்கு செலுத்தி வருவதே BFG அடிக்கடி செய்யும் பணி. ஆனால் அங்கே செல்லும் வழியில், ஃப்ளஷ்லம்பீட்டர் தலைமையிலான எட்டு ஒன்பது பேர் அடங்கிய மனிதர்களை உண்ணும் குழுவில் மாட்டிக்கொள்கிறது BFG. அவர்கள் BFGஐ கலாய்த்து, பந்தாய் எறிந்து,  உருட்டி விளையாடுகிறார்கள். சோஃபி அவர்கள் கண்ணில் பட்டுவிட்டால் காலி என்று BFG அதையும் இதையும் செய்து சோஃபியைக் காப்பாற்றி, அவர்களிடமிருந்து தப்பித்து கனவு தேசத்துக்குச் செல்கிறார்கள் இருவரும்.


‘நீ இப்டி அவங்களைக் கண்டு பயப்படாதே BFG. நாம எதாச்சும் செய்யணும்’ என்று திட்டம் தீட்டுகிறாள் சோஃபி. ‘நம்ம இங்கிலாந்து மகாராணிகிட்ட முறையிடுவோம். இந்த மனிதர்களை திங்கற கூட்டத்தை அவங்க கட்டுப்படுத்துவாங்க. அதுக்கு அவங்களுக்கு கனவைச் செலுத்தி நம்மளைப் பத்தி சொல்லணும்’ என்று ஐடியா கொடுத்து அதன்படி மகாராணியின் அரண்மனைக்குள் நுழைகிறார்கள்.

மகாராணியை சந்தித்து, அரசின் உதவியோடு ஃப்ளஷ்லமீட்டர் உள்ளிட்ட மனித உண்ணிகளை அழிப்பது கடைசி க்ளைமாக்ஸ்!

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில், நேற்று வெளியான இந்தப் படம் 1982ல் Roald Dahl எழுதிய ’THE BFG’ என்கிற நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது. ஏற்கனவே 1989ல் அனிமேஷனாக தொலைக்காட்சியில் வந்தது. 25 ஆண்டுகளால பலர் எடுக்க ஆசைப்பட்ட நாவல்  இது.  E.T. the Extra-Terrestrial  படம் இயக்கியவர்  32 ஆண்டுகளுக்குப் பின் , குழந்தைகளுக்காக ஒரு படம் இயக்கி இருக்கிறார். ஜுராசிக் பார்க் போன்றவை எல்லாம் குழந்தைகள் படத்தில் சேர்த்தி இல்லை.
 

குழந்தைகளுக்கான படம் என்றாலும், எல்லோரும் ரசிக்க நிறைய காட்சிகள் உண்டு. அதில் முக்கியமாக BFGயாக வரும் மார்க் ரைலான்ஸின் நடிப்பு. சோஃபிக்கு எதுவும் ஆகிவிடக்கூடாதே என்று பதறுவதும், பாசம் காட்டுவதும் என எல்லா உணர்ச்சிகளையும் முகத்தில் கொண்டு வருகிறார். இந்த உலகம் என்பதே ஒரு BFG தான். இறுதியாக , BRAVE சோஃபி என சொல்லிவிட்டு இருவரும் செல்லும் இடமும் சரி, படம் நெடுக சோஃபியைக் காப்பாற்ற BFG எடுக்கும் முடிவுகளும் சரி, நம்பிக்கை தருகிறது. அந்த நம்பிக்கைக்கு, இன்னும் உயிர் ஊட்டுகிறது ஜான் வில்லியம்ஸின் இசை.


காட்சிகளை பார்வையாளனுக்குக் கொடுப்பதில் பல சவால்களை அசால்டாக கடந்திருக்கிறார்கள். சாதாரண மனித உருவமாக சோஃபி, 24 அடி உயர BFG, அதை விட மாபெரும் உருவமாக 54 அடி உயர மனித உயிர்களைத் தின்னும் ஃப்ளஷ்லம்பீட்டர் ஆகிய மூவரின் கோணத்திலும் பல காட்சிகள் வருகிறது. அதற்குத் தகுந்த மாதிரி ரசிக்க வைக்கிறார்கள். கீழே புகைப்படத்தில் இருக்கிற, ‘மகாராணி வீட்டில் உணவருந்தும் காட்சி’.. ஓர் உதாரணம்!

சபாஷ் ஷாட்ஸ், படத்தில் பல உண்டு. லண்டன் வீதியில் இரவு வந்துவிட்டு திரும்பும்போது, மற்றவர்கள் கண்ணுக்குப் படாமல் இருக்க, வாகனங்கள் எதிர்வரும்போது சுவரில் ஒண்டிக் கொள்வது, கண்டெய்னர் லாரியில் படுத்துக்கொள்வது என்று பார்க்க அதகளமாக காட்சி அது. அதே போல, லாரியை ஸ்கேட்டிங் ஷூ போல பயன்படுத்தும் மனித உண்ணி அரக்கர்கள், நீருக்குள் இருக்கிற கனவுலகம், மகாராணியின் அரண்மனையில் BFGயின் விஜயம் என்று பல. ' I IS HAPPY' , HUMAN BEANS,  I IS YOUR HUMBACK SERVANT என BFG சொல்லும் ஒவ்வொரு தவறான ஆங்கில வார்த்தைகளுக்கு சோஃபியோடு நாமும் சிரித்துக்கொண்டே இருக்கலாம். ஆர்ட் டைரக்‌ஷனும் ஆஹா சொல்ல வைக்கிறது. BFG வீட்டு சமையலறையில் கத்தி வைக்கும் ஸ்டாண்டாக டெலிஃபோன் பூத், BFG சாப்பிடக் கொடுக்கும் பெரிய ஸ்போர்க் என்று கவனித்து ரசிக்க நிறைய அம்சங்கள்.

’நாவலை சிதைக்காமல் படமாக்கிய விதத்திற்காக ஸ்பீல்பெர்க்குக்கு பாராட்டு குவிகிறது. அதைப் போலவே விஷுவல் எஃபெக்ட்ஸ், இசை எல்லாமே ஆஹா தான். ஆனால் ஸ்பீல்பெர்கின் படங்களிலேயே மிக குறைந்த ஓபனிங் கலெக்‌ஷன் இந்தப் படத்திற்குதான். ஏனோ விளம்பரங்களோ, ப்ரமோஷன்களோ அந்த அளவுக்கு காணோம்.  இந்தியில் அமிதாப்பும், தமிழில் நாசரும் BFGக்கு குரலுதவி செய்து இருக்கிறார்கள்.

படத்தின் ட்ரைலர் தமிழில்..

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்