Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த இயக்குநர் - பெல்லி சூப்புலு’ படம் எப்படி?

தமிழில் பீட்சா, சூதுகவ்வும் படங்கள், அதற்கு முன் வந்த அத்தனை வழக்கமான பேர்ட்டன்களையும் உடைத்து ஒரு ஃப்ரெஷ் கொடுத்தது. அதே போல் தட்டத்தின் மறயத்து, உஸ்தாத் ஹோட்டல், பெங்களூர் டேஸ் தொடங்கி பல படங்கள் மூலம் மலையாள சினிமாவும் வெரைட்டி காட்டி மிரட்டிக் கொண்டிருக்கிறது. ஆனால் எப்போதும் ஹீரோக்கள் அடிதடி, பன்ச் வசனங்கள், கண் கூசும் கலரில் ட்ரெஸ் போட்டு கெட்ட ஆட்டம் போடுவது என வழக்கமான பாதையில் போய்க் கொண்டிருந்த தெலுங்கு சினிமா 'பெல்லி சூப்புலு' படம் மூலம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறது.

இவ்வளவு புகழக்கூடிய அளவுக்கு படத்தில் என்ன இருக்கிறது? முழுக்க ஒரு ரெஃப்ரஷிங் தெலுங்கு சினிமா அனுபவம் தருகிறது படம். ரொம்ப சிம்பிளான காதல் கதை. ஆனால், பிழிய வைக்கும் வசனங்கள், செயற்கையான பிரச்னைகள் என எதுவும் இல்லாமல் இயல்பாக ஒரு சினிமா என்பது தான் படத்தின் ஸ்பெஷல்.

பெண்பார்க்க வரும் பிரசாந்த் (விஜய் தேவரகொண்டா), தற்செயலாக மணப்பெண் சித்ரா (ரித்து வர்மா)வுடன் வீட்டில் ஓர் அறையில் மாட்டிக் கொள்ளும்படி ஆகிவிடுகிறது. எடுத்த எடுப்பிலேயே தனக்கு இந்தத்  திருமணத்தில் விருப்பம் இல்லை என சித்ரா சொல்ல, அதைத் தொடர்ந்து ஒருவருக்கொருவர் தங்கள் கதைகளை பகிர்ந்து கொள்கிறார்கள். பிரசாந்த் இன்ஜினியரிங் முடித்த ‘வி.ஐ.பி’. ஜாதகப்படி கல்யாணம் செய்து வைத்தால் நல்லது நடக்கும் என ஜோசியர் சொல்ல அவனது அப்பா பெண்பார்க்க அழைத்து வந்துவிட்டார் என பிரசாந்த் சொல்கிறான். சித்ராவின் அப்பா எப்படியாவது அவளுக்கு திருமணம் செய்து வீட்டை விட்டு அனுப்புவதில் தீவிரமாக இருப்பதாகவும், தன் காதல், எதிர்கால திட்டம் குறித்தும் சித்ரா பகிர்ந்து கொள்கிறாள். சட்டென கதவு திறக்கப்படுகிறது.

"நாம போக வேண்டியது பக்கத்து தெருவுல இருக்க பொண்ணு வீட்டுக்கு, நாம வீடு மாறி வந்துட்டோம்" என பிரசாந்தை அழைத்துச் செல்கிறார் அவனது அப்பா. அதற்குப் பிறகு நடக்கும் ரகளை சம்பவங்கள் இன்னும் சுவாரஸ்யம்.

பெண்பார்க்கப் போவதில் ஆரம்பிக்கும் கதை, ஓர் அறைக்குள் மாட்டிக் கொள்ளும் இருவரின் பேச்சிலேயே  ஃப்ளாஷ்பேக் போய் வந்த விதம்,  அதற்குள் இருந்த சின்னச் சின்ன இணைப்புகள், க்ளைமாக்ஸ் என அத்தனையும் தெலுங்கு சினிமாவுக்கு மிகப் புதுசு.

பிரசாந்த் கதாபாத்திரத்தில் நச் என நடித்திருக்கிறார் விஜய். முதலில் விருப்பமில்லாமல் கால்சென்டர் வேலை, யூ-ட்யூப் வைரல் வீடியோ  என்று ரவுண்டடித்து ‘ஒரு கோடி வரதட்சணை வாங்கிக் கொண்டு ஹாயாக உட்கார்ந்து சாப்பிடலாம்’ என திட்டம் போடும் கலகல இளைஞர் கதாபாத்திரத்தில் கச்சிதமாய்ப் பொருந்தியிருக்கிறார்.

'ஐ டோன்ட் வாண்ட் திஸ் மேரேஜ்' என தில்லாக சொல்லுவதில் ஆரம்பித்து, பிறகு விஜயை வேலை வாங்குவது. காதலை சொல்லாமல் ஈகோ காட்டுவது என எம்.பி.ஏ. பெண்ணாக அத்தனைக்கும் அப்ளாஸ் அள்ளுகிறார் ஹீரோயின் ரித்துவர்மா.

ஹீரோவின் இரண்டு நண்பர்களோடு சேர்த்து படத்தில் மொத்தமே பத்து பிரதான கதாபாத்திரங்கள் மட்டுமே. குறைவான கேரக்டர்களுடன், ஒவ்வொரு காட்சியிலும் காமெடியில் ஸ்கோர் செய்கிறது திரைப்படம். குறிப்பாக, படத்தின் இயக்குநரில் தொடங்கி நடிகர்கள் வரை பலரும் புதுமுகங்களே.. “வெல்கம் பாஸ்”... 

ஹீரோ நண்பனாக வரும் பிரியதர்ஷி நடிப்பு அசத்தல். சாம்பிளாக ஒரு சீன்...

அங்கிள்: நீ என்ன பண்ற?

பிரியதர்ஷி: ஐ'ம் குட் அங்கிள்.

அங்கிள்: என்ன வேலைனு கேட்டேன்?

பிரியதர்ஷி: புக் எழுதிட்டிருக்கேன் அங்கிள்.

அங்கிள்: சூப்பர், என்ன புக்?

பிரியதர்ஷி: 'என்னோட சாவ நான் செத்துக்குறேன். உனக்கு எதுக்கு?'ன்னு ஒரு புக்.

இந்த வசனத்துக்கு தியேட்டரே ரகளையானது. பெரிய நடிகர்கள் இல்லை, எந்த தொழிநுட்பக் கலைஞர்கள் யாரும் இல்லை, ஆனால், முழுக்க முழுக்க சூப்பரான ஸ்க்ரிப்டின் மூலம் கவனம் கவர்ந்திருக்கிறது படம்.

இருப்பினும்,  விஜய், சித்ரா இருவரும் தொடங்கும் பிஸினஸால் ஒரே மாதத்தில் ஃபேமஸாகிறார்கள். டிவி, ரேடியோவில் பேட்டி எடுக்கும் அளவிற்கு செலிஃபிரிட்டியாகிவிடுறார்கள். ‘எப்டி பாபா!’ என்றுதான் கேட்கத் தோன்றுகிறது!

விவேக் சாகரின் பின்னணி இசை படத்திற்கு வேற லெவல் ஃபீலை கொடுக்கிறது. காட்சிகளுக்கு இடையூறு இல்லாமலும், மெல்லிய இசையுடனும் படத்தோடு இணைகிறது பாடல்கள். மற்றும் படத்தின் முக்கால் காட்சிகள் நேச்சுரல் லைட்டிலேயே ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். இன்டோர் காட்சிகளை விட வெளிப்பகுதியில் எடுக்கப்பட்ட காட்சிகளை நச் ஒளிப்பதிவில் தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் நாகேஷ்.

உய்யால ஜம்பாலாலா', 'ஊஹலு குச குசலுடே' என புது ரசனைகளை தெலுங்கில் புகுத்திக் கொண்டிருப்பவர்கள் பட்டியலில் புதுமுக இயக்குநர் தருண் பாஸ்கர் 'பெல்லி சூப்புலு' மூலம் இணைந்திருக்கிறார். தெலுங்கு திரையுலகிற்கு அழகுசேர்க்கும் ஓர் எதார்த்த சினிமா இந்த பெல்லிசூப்புலு.

செம என்டர்டெய்ன்மெண்ட்! மிஸ் பண்ணாதீங்க...!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்