அந்தப் பட்டியலில் இடம் பிடிப்பாரா இந்த நம்பியார்? - நம்பியார் விமர்சனம்

ஓம் சாந்தி ஓம், சவுக்கார்பேட்டை படங்கள் ஏமாற்றியதால், ஒரு ஹிட்டுக்காக காத்திருக்கிறார் ஸ்ரீகாந்த். அவர் நம்பிய படங்களில் முக்கியமானது “நம்பியார்”. எஸ்.எஸ்.ராஜ மெளலி, விக்ரமன் இருவரிடமும் இணை இயக்குநராக பணியாற்றிய கணேசா இயக்குநராக அறிமுகமாகியிருக்கிறார். நம்பியார் இந்த இருவருக்கும் ஹீரோவா... வில்லனா?

 ஐ.ஏ.எஸ். தேர்வுக்காக தயாராகிக் கொண்டிருக்கிறார் ஸ்ரீகாந்த். ஆனால், வழக்கமான வீட்டுக்கு அடங்காத அதே தமிழ் ஹீரோதான். தற்செயலாக ஸ்ரீகாந்தைச் சந்திக்கும் சுனைனா டூயட் பாடுவதற்காகவே காதலில் விழுகிறார். ஸ்ரீகாந்தின் மனசாட்சியாக வருகிறார் சந்தானம். அவர் ஸ்ரீகாந்திற்கு கெட்ட எண்ணங்களை ஏற்படுத்த அதனால் ஏற்படும் பிரச்னைகளும், விளைவுகளுமாக காமெடியாக.. அதிரி புதிரி.. ரகளையாக.. அட்டகாசமாக.. ஹலோ வெய்ட் பண்ணுங்க.. அப்படியெல்லாம் வந்திருக்க வேண்டிய படம்... ஹ்ம்..!  

ஸ்ரீகாந்துக்கும் அவரின் மனசாட்சி சந்தானத்துக்கும் ஒரே காஸ்ட்யூம். ஆனால் ஸ்ரீகாந்த் டீஷர்டில் Together சந்தானம் டிஷர்டில் To Get Her, Now Here - No Where என க்ரியேட்டிவாக யோசித்த இயக்குநர் கதையையும் கொஞ்சம் யோசித்திருக்கலாம். அதுவும் குறை சொல்லிக்கொண்டேயிருக்கும் மனசாட்சி என்றதும் சந்தானம் டைப் கவுன்ட்டர்கள் நிறைந்திருக்க வேண்டும். ம்ஹ்ம். “ஈஸியா உஷாரான பொண்ணும், இன்டர்வல்ல வாங்குன கோன் ஐஸூம் உடனே யூஸ் பண்ணனும்” போன்ற காதைத் தொட்டால் ரத்தம் பிசுபிசுக்கிற வசனங்களாகவே பேசி ஓய்கிறார். சந்தானமே சுனைனாவை காதலிக்க வைக்கிறார். பிறகு சண்டைபோடவும் வைக்கிறார். ஜாக்குவார் வேகமெல்லாம் வேண்டாமென்றாலும்.. ஜட்கா வண்டி ’வேகத்தில்’ படம் நகர்வது.. முடில பாஸ்!
        
ம்யூட்டில் வைத்தாவது படம் பார்க்கலாம். அவ்வ்வ்வளவு அழகு சுனைனா. நட்புக்காக, ஆர்யா ஒரு காட்சியில் வந்துபோவது காமெடி கலகல. சுனைனாவின் தந்தையாக டெல்லி கணேஷூம், ஸ்ரீகாந்தின் தந்தையாக ஜெயப்பிரகாஷூம் வழக்கமாகத்தான் என்றாலும் சிற்ற்ற்றப்பு.

’நான் ஹீரோவாயிட்டேனே மம்மி’ மோடிலேயே இருப்பதாலோ என்னமோ, ‘பாட்டெல்லாம் இவ்ளதான் பாஸ்’ என்கிறார் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. எடிட்டிங் விவேக் ஹர்ஷன், ஒளிப்பதிவு எம்.எஸ்.பிரபு என்று அவரவர் வேலையை செய்திருக்கிறார்கள்

ஹீரோவும், கெட்டகுணம் கொண்ட மனசாட்சியும் என்ற சுவாரஸ்ய ஒன்லைன். ஆனால், திரைக்கதையில் அந்த சுவாரஸ்யம் இல்லையே..!

சமீபமாக சில வருடங்களுக்கு முன் வெளியாகவேண்டிய படங்கள் தாமதமாக வெளியாகின்றன. அந்தப் படங்களின் ‘ரிசல்ட்’ பட்டியலில் “நம்பியார்” இடம் பிடிக்காமலிருக்குமா..!!!!!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!