Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'அட்ரா சக்க' விஜய் சேதுபதி, 'ஆஹா' தமன்னா..! - 'தர்மதுரை' விமர்சனம் #Dharmadurai

சீனு ராமசாமி -விஜய் சேதுபதி கூட்டணியின் மூன்றாவது படம். வெளியானதில் இரண்டாவது படம். ”இடம் பொருள் ஏவல்” இன்னும் ரிலீஸுக்கு காத்திருக்க, முந்தி வந்திருக்கிறான் தர்மதுரை.

நான்கு அண்ணன் தம்பிகள். அதில் மற்ற மூவரும் தொழில், பணம் என கருத்தாய் இருக்க, பாரும் பீருமாக சுற்றுகிறார் விஜய் சேதுபதி. அம்மா ராதிகாவுக்கு விஜய் சேதுபதி மீதுதான் அக்கறை அதிகம். அண்ணன் தம்பிகள் செய்யும் தொழிலுக்கு விஜய் சேதுபதி தொல்லை கொடுக்க, சொந்த தம்பியையே ‘சம்பவம்’ செய்யத் தயாராகிறார்கள். இது தெரிந்த ராதிகா, விஜய் சேதுபதியை தப்பித்து போகச் சொல்கிறார். விஜய் சேதுபதி எடுத்துச் செல்லும் பையில் சீட்டுப்பணம் 8 லட்சம் இருப்பது அவருக்குத் தெரியாது. விடிந்ததும் ஊர்மக்கள் பணம் கேட்க, விஜய் சேதுபதிதான் திருடிச் சென்றுவிட்டதாக முடிவுக்கு வந்து விடுகிறார்கள்.

ஊரை விட்டுச் செல்லும் விஜய் சேதுபதி போவது மதுரை மருத்துவ கல்லூரிக்கு. அங்கே தொடங்குகிறது ஃபிளாஷ்பேக். அங்கே தமன்னா, சிருஷ்டி டாங்கே என மகிழ்ச்சியாக இருந்திருக்கிறார் விஜய் சேதுபதி. அப்படி நல்ல மாணவனாக இருந்த விஜய் சேதுபதி குடிகாரர் ஆனது ஏன், கல்லூரி முடிந்ததும் அவர் நண்பர்களுக்கு என்ன ஆனது, அண்ணன், தம்பிகள் பணப் பிரச்னையை எப்படிச் சமாளித்தார்கள் என எட்டுத் திசைகளிலும் பரவியிருக்கும் முடிச்சுகளை பொறுமையாக அவிழ்க்கிறார் இயக்குநர் சீனு ராமசாமி.

ஸ்டெதஸ்கோப் கையில் பிடிக்க கொஞ்சம் தடுமாறினாலும், மற்ற ஏரியாக்களில் சொல்லி, எகிறி அடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. அலப்பறை கொடுப்பதில் இருந்து அழுது ஊரைக் கூட்டுவது வரை எந்த எமோஷனுக்கு இறங்கி ஆடுகிறார். அதுவும் அந்த ஓப்பனிங் குத்துப்பாடல், மாஸ் ஹீரோக்கள் பாடலில் இருந்து வித்தியாசமானது. ஆனால், தொப்பை குலுங்க அவர் ஆடுவதை மயங்கி ரசிக்கிறது தியேட்டர்.

தமன்னா, சிருஷ்டி டாங்கே, ஐஸ்வர்யா ராஜேஷ் என மூன்று நாயகிகள். வெள்ளந்தியான கிராமத்து பெண்ணாக பச்சக்கென ஒட்டிக்கொள்கிறார் ஐஸ்வர்யா. இரண்டாம் பாதியில் தனித்துத் தெரிகிறார் தமன்னா. “இனி நான் நடிக்க போறேன்ப்பா” என கோடம்பாக்கத்துக்கு செம அறிவிப்பு தந்திருக்கிறார் தமன்னா. வெல்டன் கேர்ள்ஸ்!

மற்ற நடிகர்களில் அம்மா ராதிகாவும், அந்த வீட்டோட மாப்பிள்ளையும் கவனிக்க வைக்கிறார்கள். கஞ்சா கருப்பு என்ன சொன்னாலும் சிரிக்கத் தூண்டுகிறது. காரணம்... மிக மெதுவாகப் பயணிக்கும் ஸ்க்ரீன்ப்ளே.

உணர்ச்சிகளை சரியாக கடத்துவதில் வெற்றி பெற்றிருக்கிறார் சீனு ராமசாமி. ஹெலிகேம் ஷாட்களில் தேனி மலைகளின் அழகை இன்னும் அழகாய் படம்பிடித்திருக்கிறார். கிராமத்தில் இருந்து தொடங்கும் கதை மெல்ல வேகமெடுக்கும் போது தொடர்பே இல்லாமல் நகரத்து ஃப்ளாஷ்பேக்குக்கு போகும்போது சுவாரஸ்யம் குறைகிறது. விஜய் சேதுபதியின் நடிப்பு மட்டுமே அதன்பின் படம் பார்க்க வைக்கும் மாய மந்திரம்.

எந்தக் காலத்தில் கதை நடக்கிறது என்பதில்... ஏக குழப்பம். மெடிக்கல் காலேஜ் முடிக்கும் நண்பர்கள் ஒருவருக்கொருவர் மொபைல் நம்பரையோ, ஃபேஸ்புக் ஐடியையோ கூட பகிர்வதில்லை. ஆள் காணவில்லை என அண்டார்டிகா வரை தேடுகிறார் விஜய் சேதுபதி. 1990களில் மெடிக்கல் காலேஜ் படித்தார்களோ? ஆனால், இரண்டாம் ஆண்டு படிக்கும் போதே சிருஷ்டி டாங்கே ‘வேதாளம்’ அஜித் ஸ்டில்லை அறையில் ஒட்டி வைத்து “தல ஃபேனாக்கும்” எனப் பேசுகிறார். நண்பர்கள் யாரும் அவர்கள் திருமணத்துக்கு கூட யாரையும் அழைப்பதில்லை. பணத்தைக் காணவில்லை என கம்ப்ளையண்ட் தந்தவர்கள் போலீஸ் ஸ்டேஷனிலே காத்துக் கொண்டிருக்க, விஜய் சேதுபதியோ தமன்னாவை தேடிக் கண்டுபிடித்து, ஆல்கஹால் அடிகஷனில் இருந்து மீண்டு, வித்ட்ராயல் சிம்ப்டம்ஸுக்கு தமன்னா கையால் ஊசிப் போட்டுக்கொள்கிறார். குடித்து.. குடியைவிட்டு என்று அத்தனை காலகட்டத்திலும் பையில் இருக்கும் எட்டு லட்சத்தை பைக்குச் சொந்தக்காரரான விஜய் சேதுபதியோ, தமன்னாவோ யாருமே பார்க்கவேமாட்டார்களா?

கேட்டுப் பழகிய தெம்மாங்கு மெட்டுதான் பாடல்களுக்கு. ஆனால், பின்னணி இசையில் பல புதிய முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார் யுவன். சுகுமாரின் கேமரா நுழையாத இடமே இல்லை. ஒவ்வொரு ஃப்ரேமும் கவிதை பாடுகிறது.

காட்டுக்குள் விழுந்த விமானத்தை தேடிக்கண்டுபிடிப்பது போல, பல சிக்கலுக்கு நடுவில் கதையை தேடிக்கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. ஆனால், அதற்கு ஒரு கூகுளாய் இருக்கிறார் விஜய் சேதுபதி!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்