வெளியிடப்பட்ட நேரம்: 15:04 (26/09/2016)

கடைசி தொடர்பு:15:38 (26/09/2016)

அதே டெய்லர்... அதே வாடகை... புது டீமில் என்ன சொல்ல வருகிறான் செவன் சாமுராய். #The Magnificent Seven படம் எப்படி?

அகிரா குரோசவா இயக்கத்தில் 1954ல் ஜப்பானிய மொழியில் வெளியான “செவன் சாமுராய்”  1960-ஆண்டு வெஸ்டெர்ன் சினிமாவாக மறு ஆக்கம் செய்தது ஹாலிவுட். தற்போது அதை மீண்டும் மறு ஆக்கம் செய்து இருக்கிறார்கள்.அது தான் இந்த வாரம் வெளியாகி இருக்கும் “தி மெக்னிபிசென்ட் செவன்”.   

கதை 1879களில் நடக்கிறது. கைகளில் துப்பாக்கி, தலையில் வட்டத்தொப்பி என்று, அமெரிக்காவில் “கவ் பாய் “ கலாச்சாரம் இருந்த நேரம். ஒட்டு மொத்த கிராமத்தையும் அடிமையாக தன் கைக்குள் வைத்திருக்கிறார் பாகி. இவனின் அராஜகத்தால் தன் தன் கணவனை இழக்கும் எம்மா , பக்கத்து கிராமத்திலிருந்து உதவிக்கு யாரையாவது அழைத்துவர செல்கிறார். அந்த நேரத்தில் தப்பு செஞ்சா சுட்டுத்தள்ளும் சாமை சந்திக்கிறார். அவரிடம் உதவி கேட்க, சாம், தன்னுடன் ஆறு பேரைச் சேர்த்துக்கொண்டு இந்த கிராமத்திற்கு வருகிறார். இந்த ஏழு சூப்பர் ஹீரோக்களூம் சேர்ந்து, கிராம மக்கள் உதவியுடன் வில்லன் பாகியைக் கொன்று கிராமத்தை மீட்டார்களா என்பதே தி மெக்னிபிசென்ட் செவன். 

செவன் சாமுராய் படத்தில், கிராமத்திற்கு வந்து கொள்ளையடித்து, விவசாயிகளின் பொருளை சுரண்டும் கொள்ளை கூட்டத்தை ஒழிக்க, ஏழு பேர் சண்டையிடவதாக கதை நகரும். 207 நிமிடம் கொண்ட மிக நீளமான சினிமாவை, கதையை மட்டும் மையமாக கொண்டு 133 நிமிடத்தில் சுறுங்க சொல்லி சிக்ஸர் அடித்து இருக்கிறது இப்படம். 

செவன் சாமுராய் படத்தில் கையாளப்பட்ட பின்னணி இசையுடன், மார்டன் இசையையும் கலந்து கொடுத்திருப்பது படத்திற்கு புதுவித அனுபவத்தைக் கொடுக்கிறது. ஒவ்வொரு காட்சிக்கும் தனித்தனியே பின்னணி இசையில் மிரளவைக்கும் ஜேம்ஸ் ஹார்னர் (James Horner), சிமோன் (Simon Franglen) இசை படத்திற்கு பக்கா மேட்ச். படம் ஆரம்பிப்பதற்கு முன்னரே இசைக்குறிப்புகளை படத்திற்காக எழுத ஆரம்பித்துவிட்டாராம் படத்தின் இசையமைப்பாளர் ஜேம்ஸ் ஹார்னர். பின்பு அவர் இறந்துவிட, சைமன் ஃப்ராங்க்லென் மீதி படத்துக்காக இசையமைத்து இருக்கிறார்.வெஸ்டர் கலாச்சாரத்தை படத்தில் ஒரிஜினலாக கொண்டு வந்திருக்கும் விதத்திலும், மேக்கிங்கிலும் ஸ்கோர் செய்கிறார் இயக்குநர் Antoine Fuqua.  

இந்த ஏழு பேருக்கும் தலைவனாக சாம் கேரக்டரில் நடித்திருப்பவர் டென்செல் வாஷிங்டன்.எதற்கும் கவலைப்படாமல் ஜாலியாக சுட்டுத்தள்ளும் கிறிஸ் பிராட். எவ்வளவு தொலைவென்றாலும் சுட்டுத்தள்ளும் குட்நைட். இவர்களுடன் இன்னும் நான்கு பேர்.... இவர்களே மெக்னிபிசென்ட் செவன் ஹீரோஸ். ஒவ்வொருவரும் தனக்கான கதாபாத்திரத்தில் கச்சிதமாக சுடுகிறார்கள்.

துப்பாக்கி சண்டை, மேற்கத்திய கலாச்சாரம் என்று கமர்ஷியல் படமாக ஆச்சரியப்படுத்தினாலும், செவன் சாமுராய் போன்ற கிளாசிக் படங்களை ரீமேக் செய்யும் போது அதீத கவனமும் தேவை. அந்த இடத்தில் சமயங்களில் குறி தப்பிவிட்டதோ என்று தோன்றுகிறது 
செவன் சாமுராய் படத்தின் முதல் ரீமேக் வெர்ஷன் 1960களில் வெளியானது. அதற்கும் இந்தப் படத்திற்கும் எந்த வித்தியாசமும் பெரிதாக தெரியவில்லை. தவிர, இப்படத்தில் புதிதாக எதுவும் சொல்லவில்லை என்பது படத்திற்கு மைனஸ். விஷூவல் ட்ரீட் கிடைக்கும் என்று நம்பிச்செல்லும் ரசிகர்களை ப்ச்ச்ச்... சொல்ல வைக்கிறது. 

இப்படம் பக்கா கமர்ஷியல் பாக்கேஜ். ஜாலியா கவ் பாய் சண்டையை பார்க்கவேண்டும் என்று நினைத்தால் தாராளமாக செல்லலாம். இல்லையென்றால் குழந்தைகளை டெலிவரி செய்துவரும் ஸ்டார்க்ஸ் அனிமேஷன் படத்திற்குள் நுழையலாம். 

தி மெக்னிபிசென்ட் செவன் டிரெய்லருக்கு: 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்