தனுஷின் முதல் முறை இரட்டை வேடம் இதற்குத்தானா? - 'கொடி' விமர்சனம்

அரசியல் பரமபதத்தில் ஏணியே பாம்பாக மாறுவதும், பாம்பு ஏணியாக மாறுவதும் சகஜம். இந்த விறுவிறுப்பு விளையாட்டே கொடி.

இரட்டைக் குழந்தைகளில் அண்ணன் தனுஷுக்கு (கொடி) அரசியல் ஆர்வத்தை விதைக்கிறார் அப்பா கருணாஸ். தந்தை தன் அபிமான கட்சிக்காக உயிர் துறப்பதால் அந்த ஆசை மகனுக்குள் ஆழமாக வேர்விடுகிறது. எஸ்.ஏ.சந்திரசேகரின் கட்சியோடே சேர்ந்து வளர்ந்து அடிபொடித் தொண்டனில் இருந்து இளைஞர் அணி அமைப்பாளராக வளர்கிறார் தனுஷ். ஆளும் கட்சியைச் சேர்ந்த ருத்ராவும் (த்ரிஷா) தனுஷும் "பர்சனல் வேற பாலிடிக்ஸ் வேற" என்ற பாலிசி காதலர்கள். இதற்கு இடையில் தம்பி அன்புக்கும் (ரெட்டை தீபாவளி), அனுபமா பரமேஷ்வரனுக்கும் காதல். 

மூடப்பட்ட தொழிற்சாலை ஒன்றால் ஏற்படும் பாதரச பாதிப்பு பற்றிய ஆதாரம்  தனுஷிடம் வருகிறது. அதில் சம்பந்தப்பட்ட கைகள் அதை மறைக்க தனுஷுக்கு எம்.எல்.ஏ சீட் கொடுத்து நிறுத்துகிறார்கள், அவருக்குப் போட்டியாக த்ரிஷா. இந்த அரசியல் சடுகுடு என்னென்ன செய்கிறது, தொழிற்சாலை என்ன ஆனது, யாருக்கு யார் வில்லன், யார் ஜோடி, தனுஷுக்கு ஏன் அவ்வளவு பெரிய தாடி என மெதுவாக பறக்க ஆரம்பிக்கிறது கொடி.

’உங்கூட நடிச்சுட்டு இருந்த கருணாஸ் எல்லாம், உனக்கே அப்பாவ நடிக்க ஆரம்பிச்சுட்டார்.நீ இன்னும் அப்படியே இருக்க ' என்ற ரீதியில் இருக்கிறார் தனுஷ்.முதல் முறையாக டபுள் ரோல். தாடியோடு வரும் கொடிக்கு தான் அதிக காட்சிகள், அதிக முக்கியத்துவம். இரண்டு கதாப்பாத்திரங்களுக்கும் வித்தியாசம் காட்ட பெரிய மெனக்கெடல் எதுவும்  செய்ய அவசியமில்லை. க்ளீன் ஷேவ் பண்ணா காலேஜ் புரொஃபசர் அன்பு, வேட்டி சட்டை,  கண்ணாடி, தாடி என்றால் கொடி. சமகால தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகரின் முதல் இரட்டை வேடம் இப்படியா இருக்க வேண்டும்? ஆனாலும் நடிப்பில் தன் கடமையை சரியாகவே செய்திருக்கிறார் தனுஷ்.

 சொழலி, அழகி, எறலி, கலகி என அத்தனை வார்த்தைகளுக்கும் பொருத்தமாக இருக்கிறார் அனுபமா. த்ரிஷா இருக்கும் இளமையைப் பார்த்தால், இன்னும் ஒரு ரவுண்டு வரலாம். கோலிவுட்டின் அரசியல் சினிமாவில் த்ரிஷாவின் கதாப்பாத்திரம் ரொம்பவே ஆச்சர்யம். ஆனால், கத்தி பட விஜய் போல இரும்புக் கம்பியைப் பிடித்து அடிக்கும் போது லைட்டாக சிரிப்பு வருகிறது.

மீத்தேன் கழிவுகள், அரசியல் போதை என சில கருத்துகளைத் தொட்டாலும், அதற்கான வீரியம் சுத்தமாக இல்லை. அரசியல் படம் என போஸ்டர்களிலும், டிரெய்லர்களிலும் சொல்கிறார்கள். வெள்ளை வேட்டி சட்டைகளும், கலர் கலர் கொடிகளையும் தாண்டி வேறு ஒரு அரசியலும் தெரியவில்லை.

அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் வேட்பாளர் இறந்தால் தேர்தலை தள்ளி வைக்க வேண்டுமென்பது விதி. அந்த அளவிற்காவது அரசியல் பற்றி ஹோம் ஒர்க் செய்துவிட்டு இறங்கியிருக்கலாம் இயக்குநர். 'எல்லோரும் பிறக்கும் போது சிங்கிள் தான். நான் பொறக்கும் போதே டபுள்ஸ்", "சேர்ந்தா தான் கூட்டம். சேர்த்தா அது கூட்டம் இல்ல" வசனங்களில் மாஸ் தெறிக்கிறது. 

 எஸ்.ஏ.சந்திரசேகர்,சரண்யா பொன்வண்ணன்,காளி வெங்கட் என சப்போர்ட் காஸ்டிங் செய்யும் அனைவருமே அவர்களது கதாப்பாத்திரத்தை சரியாக செய்து இருக்கிறார்கள். காமெடி நேரத்தில் சிரிக்க வைக்கிறார். செண்டிமெண்ட்டில் கலங்க வைக்கிறார் காளி.

 எஸ்.வெங்கடேசன் ஒளிப்பதிவு இரண்டு தனுஷ்களும் வரும் காட்சியை  நம்பும்படியாக காட்டியிருக்கிறது. இரண்டாம் பாட்டுக்கும், மூன்றாம் பாட்டுக்கும் இடையே 5 நிமிட இடைவெளி விடவேண்டும் என நினைத்த எடிட்டருக்கு கிளாப்ஸ். ஏ சுழலி பாடம்  மென் மெலோடியாக கலக்குகிறது. தனுஷ் அருண்ராஜா காமராஜாவின் குரல்களில் வரும் கொடி பறக்குதா தீமுக்கு அதிர்கிறது அரங்கம்.

பல விறுவிறு கிறுகிறு அரசியல் சினிமாக்களை பார்த்துப் பழகியதாலோ என்னவோ, உயரம் குறைவான  கம்பத்திலும் அரைக்கம்பத்திலேயே பறக்கிறதோ இந்தக் கொடி என்ற சந்தேகத்தை தவிர்க்க முடியவில்லை..!

Don't miss this

Do you like the story?

Please Appreciate the Author by clapping!