Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விவசாயம் பத்தி படம் எடுக்கறதும் கஷ்டம்தான் போல! - கடலை விமர்சனம்

“பசிச்சா ஆண்றாய்ட் ஃபோனை சாப்பிட முடியாது. அரிசிதான் வேணும்”  என விவசாயத்தின் அவசியத்தை சொல்லும் இன்னொரு படம்.சமூக அக்கறையுடன் கொஞ்சம் காதல், கொஞ்சம் காமெடி என மாகாப ஆனந்த் நம்பி இறங்கியிருக்கிறார். பல முறை பெயர் மாற்றம் பெற்று, ரிலீஸ் தேதி மாறி, ஒரு வழியாக வெள்ளித்திரையை அடைந்திருக்கிறது கடலை.

விடுமுறை நாளன்று ஹாயாக வீட்டில் இருந்து பார்த்தால் ரசிக்கக்கூடிய டெம்ப்ளேட் ஸ்க்ரிப்ட் தான். விவசாயம்தான் உயிர் என வாழ்கிறார் பொன்வண்ணன். விவசாய நிலங்களை யாராவது ரியல் எஸ்டேட்காரர்களுக்கு விற்றால் கூட விட மாட்டார். தன் மகனை விவசாய விஞ்ஞானி ஆக்கியே தீருவது என முடிவு செய்திருக்கிறார். பொறுப்பான அப்பாவுக்கு பொறுப்பற்ற மகன் பிறப்பதுதானே கோடம்பாக்க வழக்கம்?அதன்படி விவசாயத்துக்கு நோ சொல்கிறார் மாகப ஆனந்த். ஒண்ணேகால் வருடத்தில் (அது என்ன கணக்கோ) தொழில் செய்து ஒரு பெரிய தொழிலதிபராக ஆவேன் என்கிறார். இதற்கிடையில் அக்ரி மாணவிகள் சிலர் பொன்வண்ணனிடம் புராஜெக்டுக்கு வருகிறார்கள். அதில் ஒருவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். நண்பன் யோகி பாபுவுடன் ஊர் சுற்றிக்கொண்டே, ஐஸ்வர்யாவையும் காதலித்துக்கொண்டே தனது சபதத்தை மாகாப நிறைவேற்றினாரா என்பதே திரைக்கதை. கதைக்கு வில்லனாக வருகிறார் ரியல் எஸ்டேட் புரோக்கர் ஜான் விஜய்.

வெறும் பொழுதுபோக்கு படமாக மட்டும் இல்லாமல் விவசாயிகளின் முக்கியமான பிரச்னையை பேசியதற்காக இயக்குநரை பாராட்டலாம். படம் பேசும் பிரச்னைகள் அனைத்தும் நியாயமானவை என 100% பேரும் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். ஆனால், அதைத்தாண்டி ஒரு படமாக இரண்டரை மணி நேர சுவாரஸ்யத்தை கொடுக்க வேண்டிய கட்டாயம் இயக்குநருக்கு உண்டு. அதில் பெரிதும் சறுக்கியிருக்கிறார் இயக்குநர் சகாயசுரேஷ்

தனது சீனியர் சிவகார்த்திகேயன் போட்ட பாதையிலே பயணிக்க வேண்டிய கட்டாயம் மாகாப ஆனந்துக்கு. பொறுப்பற்ற இளைஞன், பக்கத்துணையாக காமெடி நண்பன், ஒரு காதல், அப்பாவுடன் மோதல் என இன்னொரு வருத்தப்படாத வாலிபர் சங்கத்துக்குத்தான் குறி வைத்திருக்கிறார்கள். தனது பெஸ்ட்டை தந்திருக்கிறார் மாகாப. கேமரா பயம் துளியும் இல்லை என்பது தெரிகிறது. டேன்ஸூம் ஒகேதான். ஸ்ட்ரெய்ட்டா ஹீரோ என்றில்லாமல் காமெடியை முயற்சித்தால் நலம். ஐஸ்வர்யா ராஜேஷுக்கு 30 நாள் கோவை டிரிப். ஜாலியாக வந்து ஜாலியாக போயிருக்கிறார்.

படத்தை காப்பாற்றுவதே யோகி பாபுதான். நெட்டு மடிக்கிறவனில் தொடங்கி பிட்டுப்படம் வரைக்கும் ஒருத்தரையும் விடாமல் கலாய்த்து எடுக்கிறார். படம் நெடுக வரும் தல ரெஃபரன்ஸ், ஆங்காங்கே வரும் தளபதி ரெஃபரன்ஸுக்கு வராத கைத்தட்டல் யோகிபாபுவின் இண்ட்றோவுக்கு விழுகிறது. ஜெயிச்சிட்டீங்க ப்ரோ!

பக்கா கொங்கு ஸ்லாங்கில் பட்டையை கிளப்பியிருக்கிறார் பொன்வண்ணன். பாஸிட்டாவான, மிகத் தெளிவான கதாபாத்திரத்தில் அசால்ட் செய்திருக்கிறார். ஆனால் அவர் மனைவியும் மகனும் சென்னை தமிழ் பேசுகிறார்கள். மற்ற நடிகர்கள் அவரவருக்கு தெரிந்த தமிழ் பேசுகிறார்கள். பொன்வண்ணன் மட்டுமே தனி ஆவர்த்தனம் செய்து என்ன பயன்?

ஒண்ணே கால் வருட சபதம் போடும் மாகாப செகண்ட் ஹாஃப் வரை என்ன செய்கிறார்? குடிக்கிறார் சிரிக்கிறார் தூங்குகிறார். அவ்வளவே. விவசாயிகளுக்கு ஆதரவான படம் என ஆரம்பத்தில் சொல்லி செட்டில் ஆகிவிட்டது. க்ளைமேக்ஸில் ஒரு ஆவண வீடியோவைக் காட்டி முடித்தால் அது நல்ல படமாகிவிடுமா? விவசாயம் மட்டுமில்லை பாஸ். அதை பற்றி சரியான படம் எடுப்பதும் கஷ்டம் தான். 

சாமின் இசையில் பாடல்கள் ஒகே.   பின்னணி இசைக்கு அனுபவம் தான் கைகொடுக்க வேண்டும். காதலுக்கும் செட் ஆகும். விவசாயத்துக்கும் செட் ஆகும் என்பதால் கடலை என்ற தலைப்பா?  

நல்ல விஷயம் சொல்கிறார்கள் என்பதற்காக இன்னும் எத்தனை சுவாரஸ்யமற்ற படங்களைத்தான் தாங்க வேண்டுமோ?

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்