“ஜாலி புலியா... காலி புலியா?” ஸ்வர்ண கடுவா படம் எப்படி?

ஸ்வர்ண கடுவா

மாறுபட்ட கதைகளைத் தேடிப்பிடித்து, நடிப்பவர் மலையாள நடிகர் பிஜூமேனன். இவரின் ஹிட் படங்கள் “லீலா”,  “ஓலப்பீப்பீ” வரிசையில்  அடுத்த படம் “ஸ்வர்ண கடுவா”. இதன்  தமிழ் அர்த்தம் “தங்கப் புலி”. 

நகைக்கடை அதிபர் இன்னசன்ட், கேரளா ஹைவே ரோட்டில் ஒருவரின் மீது காரை ஏற்றிவிடுகிறார். அங்கிருந்து எஸ்கேப் ஆகும் இன்னசன்ட் பதற்றத்தில் பிஜூமேனனுக்கு போன் போடுகிறார். இன்னசன்டிடம் வேலை பார்ப்பவர் தான் பிஜூ. இவரை போலீஸிடமிருந்து தப்பிக்க வைக்க, சுரேஷ்கிருஷ்ணாவை போலீஸிடம் ஆஜர் செய்ய முயற்சிக்கிறார். இன்னசன்டுக்கு பதிலாக சிறைக்குச் செல்ல ஐந்து லட்சம் விலையும் பேசப்படுகிறது. இதற்கு நடுவே, சில லட்சங்களில் போலீஸையே சரிகட்டிவிடுகிறார் பிஜூ. 

கடுப்பான சுரேஷ்கிருஷ்ணா, முதலாளி இன்னசன்டிடம் தகராறு பண்ண, எதிர்பாராதவிதமாக சுரேஷ் கிருஷ்ணா இறந்தும் விடுகிறார். இதற்கு சாட்சியாக இருப்பது நர்ஸாகவரும் பூஜிதா மேனன் மற்றும்  மனைவியான இனியா. இந்த சாட்சிகளை சமாளித்து,  நகைக்கடை ஓனராக பிஜூ மாறுவதும், அதற்கு பின் நடக்கும் சில சுவாரஸ்ய நிகழ்வுகளுமே ஸ்வர்ண கடுவா. 

பிஜூமேனனும், அவரின் அட்டூழியமும் தான் படமுழுக்க. ஒவ்வொரு காட்சியிலும் எதாவது ஒரு வகையில் இம்ப்ரெஸ் செய்துவிடுகிறார். ஓரு கட்டத்திற்கு மேல் பிஜூ நல்லவரா கெட்டவரா என்ற சந்தேகம் கூடவரலாம். முதலாளியிடம் 10 லட்சம் கேட்டு மிரட்டுறான் என்று காசு வாங்கி, மிரட்டியவனிடம்  5 லட்சத்தில் செட்டில்மென்டையே முடித்துவிடும் அளவுக்கு கில்லாடி பிஜூ . புதியதாக முளைத்துக் கொண்டேயிருக்கும் பிரச்னைகளை அசால்டாக பேசியே சரிகட்டிவிடுகிறார் பிஜூ.

படத்தின் ஸ்பெஷலே, சென்டிமென்டாக எந்தக் காட்சியும் நம்மை உறையவைக்காது. சோகமான காட்சியென்றாலும் பிஜூவின் கவுண்டர் டயலாக் காமெடியாக மாற்றிவிடும். புஜீதா மேனனை திருமணம் செய்வது, இனியாவுடன் காதல் என்று இரண்டிலுமே பக்காவாக பொருந்துகிறார் 50 வயதான பிஜூ. ஒவ்வொரு காட்சியிலும் இனியாவின் நடிப்பு சிறப்பு. 

 பாபு ஜெனார்த்தனின் ஸ்கிரிப்ட்லே அத்தனை அதகளமும் இருக்கின்றன. ஆனாலும்  திரைக்கதை தொய்வடைவது சலிப்பு. ரதீஷின் இசையும் ஜான் குட்டியின் எடிட்டிங்கும் படத்திற்கு பொருத்தம்.விஜய் சந்தரின் பின்னணி இசை அடிபொலி. 

மெதுவாக நகரும் திரைக்கதையென்றாலும், அதற்கான கேரக்டர் தேர்ந்தெடுத்த விதத்திலும், காமெடிக்கென தனியாக டிராக் எதுவும் வைக்காமல், படத்தோடு நகரும் காமெடி காட்சிகளிலும், படத்தை தொந்தரவு செய்யாத பாடல்காட்சிகளிலும்  பாஸ்மார்க் வாங்குகிறார் இயக்குநர் ஜோஸ் தாமஸ். 

கார் விபத்தில் தான் முதல் காட்சி தொடங்கும். அங்கிருந்து  திரைக்கதை நகர்ந்து, இறுதியில் படம் ஆரம்பித்த இடத்திலேயே முடித்திருப்பது, படத்தினை முழுமைப்படுத்துகிறது.  நம் அன்றாடம் சந்திக்கும் சக்சஸ்ஃபுல் தொழிலதிபர்களில் பலர் பிஜூ மேனனை நினைவுப்படுத்துவார்கள். பிஜூவின் கலாட்டாக்களை முந்தைய மலையாள படங்களில் ரசித்தவர்களுக்கு இது ஒரு எண்டெர்டெயின்மெண்ட் புலி. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!