திருடப்பட்ட இதயத்தை மீண்டும் ஃபிக்ஸ் செய்யும் ரகளை பொண்ணு! Moana படம் எப்படி?

Moana

இந்த ஆண்டு அனிமேஷன் பிரியர்களுக்கும்,குட்டீஸ்களுக்கும் செம்ம தீனி போட்ட ஆண்டு. ஜூட்டோபியா,ஃபைண்டிங் டோரி, தி சீக்ரெட் லைஃப் ஆஃப் பெட்ஸ், தி ஆங்கிரி பேர்ட்ஸ், குங்ஃபூ பாண்டா என மாதம் ஒரு படம் வந்து ஹிட் அடித்தது.அந்த வரிசையில் ஆண்டின் இறுதியை கலர்ஃபுல்லாக நிறைவு செய்திருக்கும் படம் மோனா.

டிஸ்னி அனிமேஷன் ஸ்டூடியோஸ் மூலம் வெளியான தேவதைகளில், புதுவரவு மோனா. தனது தீவைக் காப்பாற்ற மோனா ஏழு கடல் தாண்டி எடுக்கும் சாகச பயணமே ,இந்த வாரம் வெளியாகி இருக்கும் மோனா திரைப்படத்தின் ஒன்லைன்

 மோட்டுநூயி தீவில் தன் தாய், தந்தையுடன் வசித்து வருகிறாள் மோனா.தன் பாட்டி சொல்லும் கதைகளைக் கேட்டு வளரும் மோனாவுக்கு, தீவைக் கடந்து செல்ல வேண்டுமென ஆசை. ஆனால், மோனாவின் தந்தையும், தீவின் தலைவருமான Tui அதற்கு தடை போடுகிறார். எல்லாம் கிடைக்கும் தீவும் ஒரு கட்டத்தில் பொய்த்துப்போக, எல்லைகளை கடக்க பயணம் செல்கிறாள் மோனா. தீவுகளின் கடவுளான டீ ஃபீட்டியின் Te Fiti இதயத்தை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் திருடி விடுகிறான் மௌயி. அதை மீண்டும் டீ ஃபீட்டியின் நெஞ்சில் ஃபிக்ஸ் செய்ய வேண்டும். அதற்கு மௌயியைக் கண்டுபிடிக்க வேண்டும்.இவை அனைத்தையும் மோனா எப்படி சாதிக்கிறாள் என்பது தான் மோனா திரைப்படம்.  

103 நிமிட படத்தில் பல விஷயங்களை பாடல்களின்வழி இசைத்து இருக்கிறார்கள் மிரண்டா & டீம்.பாட்டி கதை,மௌயி சொல்லும் டாட்டூ கதை,கடலைத்தாண்ட மோனா சொல்லும் கதை என பல பாடல்கள்.ஆனால்,எல்லாமே வாவ் ரகம்..  

குட்டீஸ் படம் என்பதால், படத்தில் கொடூர வில்லன் எல்லாம் கிடையாது. சூழ்நிலையால் மட்டுமே ஒருவர் தீயவர் ஆகிறார்கள் என்பதை அழுத்தமாகச்சொல்லி நல்ல பெயர் எடுக்கிறார்கள் ரான் கிளிமென்சும், ஜான் மஸ்கர்ஸும்.  John Musker & Ron Clements. தி லிட்டில் மெர்மெய்ட், அலாடின், தி ப்ரின்செஸ் அண்டு தி ஃப்ராக் போன்ற படங்களை இயக்கிய ஜோடியை மீண்டும் மில்லியன் டாலர் பேபி ஆக்கியிருக்கிறாள் மோனா. 

மந்திரக்கோல் உதவியுடன் ,நினைத்த நேரத்தில் உருமாறும் சக்தி கொண்ட பயில்வானான டெமி காட் மௌயிக்கு குரல் கொடுத்து இருக்கிறார் WWE புகழ் ராக் (டிவேய்ன் ஜான்சன்). இந்த ஆண்டின் ஆரம்பத்தில் சென்ட்ரல் இன்டெலிஜென்ஸ் படத்தில் காமெடியில் கலக்கியவர் , இந்த முறை மீண்டும் சிக்ஸர் அடித்து இருக்கிறார். ஒவ்வொரு டாட்டூவுக்கும் அவர் சொல்லும் காரணங்கள், மோனாவுடன் ஜாலியாக இடும் சண்டைகள் என அவரது கதாப்பாத்திரம் வேற லெவல். 

Auli'i Cravalho ஔலி கிரவல்ஹோ என்ற 14 வயது சிறுமி தான் மோனாவுக்கு குரல் கொடுத்து இருக்கிறார். டிஸ்னி தேவதைகளுக்கு பெரும்பாலும், காதலனை தேடுவது மட்டும் தான் கதையின் ஒரே வேலையாக இருக்கும்.ஆனால், மோனாவுக்கு இதில் சண்டை,பாசம், என வெரைட்டியான கதாப்பாத்திரம்.

லூசு சேவல்,க்யூட் பன்றி,காமெடி வில்லன்ஸ் தேங்காய் மண்டயன்ஸ், புதையலை பராமரிக்கும் நண்டு, என படம் முழுக்க குட்டீஸ்களுக்காகவே எக்கச்சக்கச்சக்க விசுவல்ஸ். நீரிலும் டிஸ்னி செய்து இருக்கும் அனிமேஷன் வேலைகள் தெறி. எல்லா இடத்திலும் குட்டிச்சுட்டி அனிமேஷன்களால், கலக்கிய டீம், மௌயின் உடலில் இருக்கும் உண்மை சொல்லி டாட்டூஸ்களிலும் சிரிப்பு மூட்டி இருக்கிறார்கள். 

கறுப்பு- வெள்ளை இனவெறி சுழன்று அடிக்கும் தேசத்தில் , டிஸ்னியின் பாக்ஸ் ஆபீஸை நிரப்பப்போகும் பெண் ஒரு வெள்ளை நிற அழகி அல்ல. மாநிறமான மோனா என்பது தான் ஹைலைட். 

தேசிய கீதம் ஆரம்பிப்பதற்கு முன்னர் படத்திற்கு சென்றுவிடுங்கள் மக்கா.  குறும்படமான இன்னர் வொர்க்கிங்ஸை மோனாவிற்கு முன் திரையிடுகிறார்கள். 24*7 வேலை வேலை என்னும் ஹைப்பர்டென்சனில் இருக்கும் பெரியவர்கள் நிச்சயமாய் பார்க்க வேண்டிய குறும்படம் இன்னர் வொர்க்கிங்க்ஸ்.டோன்ட் மிஸ் இட்..

இந்த வீக் எண்டுக்கான பெர்ஃபெக்ட் சாய்ஸ் மோனா. டோன்ட் மிஸ் .

படத்தின் டிரெய்லர்

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!