Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஒரு கொலை... மூன்று இளைஞர்கள்... செம சினிமா! - ‘துருவங்கள் 16’ விமர்சனம்

துருவங்கள் 16

21 வயதே ஆன இளைஞரிடமிருந்து ஓர் ஆச்சர்யமூட்டும் கச்சிதமான த்ரில்லர் சினிமா, ‘துருவங்கள் 16’.

’சின்னச் சின்ன தவறுகள்தானே என்று நினைத்து நாம் செய்யும் செயல்கள் எப்படி வாழ்க்கையை ஆழமாகப் பாதிக்கிறது’ என்பதுதான் ஒன்லைன். ஒரு கொலை, அதை நிகழ்த்திய குற்றவாளி யார் என்று புலனாய்வு செய்யும் கதையில் முன்னும் பின்னுமாகச் சில சம்பவங்களும், சம்பந்தப்பட்ட மனிதர்களும் பிணைக்கப்படுகின்றனர்.  பல சுவாரஸ்யமான திருப்பங்கள் மூலம் பார்வையாளர்களை நாற்காலி நுனியில் அமரவைப்பதோடு, கதையின் முடிச்சு அவிழும்போது வாழ்க்கைக்கான நீதியையும் முன்வைக்கிறது ‘துருவங்கள் பதினாறு’. 

குறும்பட இயக்குநர்களிலிருந்து, தமிழுக்கு கிடைத்திருக்கும் மற்றுமொரு அறிமுகஇயக்குநர் கார்த்திக் நரேன்.  ஒரு காட்சியைக்கூட பார்வையாளர்கள் தவறவிடாதபடி சம்பவங்களின் அடுக்கடுக்கான பிணைப்புகள், விறுவிறுப்பான திரைக்கதை, நடிகர்களைக் கையாண்டது ஆகியவற்றில் முதல் படத்திலேயே முத்திரை பதித்திருக்கிறார். வாழ்த்துகள் கார்த்திக் நரேன்!

கோவையில் நள்ளிரவில் கொலை ஒன்று நடக்கிறது. தற்கொலையாக பதியப்படும் இந்தக்கொலையை யார் செய்திருப்பார் என்பதைக் கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரி தான் ரகுமான். அதே இரவில் மூன்று பொறுப்பற்ற இளைஞர்களின் காரில் மோதி,  ஒருவர் இறந்துவிடுகிறார். அந்த காரில் வந்த மூன்றுபேரும், குற்றத்தை மறைக்க சடலத்தை அதே காரில் எடுத்துச்செல்கிறார்கள். ஆனால் அடுத்த நாள் காலையில் காரில் வைக்கப்பட்ட சடலம் மாயமாகிறது. இந்த நான்கு பேருக்கும் கொலையாளிக்கும் என்ன சம்மந்தம், கார் விபத்தில் இறந்தவர் என்ன ஆனார்,  கொலையாளி யார்? இதையெல்லாம் ரகுமான் கண்டுபிடித்தாரா என்ற கேள்விகளுக்கான பதிலை பல ட்விஸ்டுகளுடன் சொல்கிறது திரைக்கதை. 

முதுமையில் நரைத்த முடியும், கையில் வாக்கிங் ஸ்டிக்கும், ஒரு கப் டீயுமாக  அறிமுகமாகி, கதையைச் சொல்லத் தொடங்கும் ரகுமான், ஃப்ளாஷ்பேக்கில் துடிப்பான நடுத்தர வயது போலீஸ் அதிகாரி. முதுமையின் நடுக்கம், காவல்துறை அதிகாரியின் கம்பீரம், மிடுக்கு ஆகியவற்றை இயல்பாகக் கொண்டுவந்திருக்கிறார். படத்தைத் தாங்கிப்பிடிப்பதே ரகுமான் என்ற ஒற்றை மனிதரின் நடிப்பு என்று சொல்லலாம். ‘’சார்னு சொல்லமாட்டீங்களா?” என்று பணத்திமிர் இளைஞர்களிடம் கேட்பது, அதே இளைஞன் காவல்நிலையத்தில் இருக்கும்போது சற்றே இடைவெளி விட்டு, அந்த இளைஞனின் மாடுலேஷனோடு, ‘சார்’ என்று அழைப்பது என்று காட்சிக்குக் காட்சி முத்திரை பதிக்கிறார் ரகுமான்.

துருவங்கள் 16 ரகுமான்

ரகுமானுடன் வரும் கான்ஸ்டபிள் கெளதம் நடிப்பில் கவனிக்கவைக்கிறார். இப்படத்தில் இரண்டாவது முக்கிய கதாபாத்திரமாக வரும் கெளதம் யாரென்பதை க்ளைமாக்ஸில் உடைக்கும் ட்விஸ்ட் எதிர்பாராத திருப்பம். குறைவான கதாபாத்திரங்கள்தான், டெல்லி கணேஷைத் தவிர அனைவருமே புதுமுகங்கள் என்றாலும் கதையின் இயல்பான போக்கும் சுவாரஸ்யமான விறுவிறுப்பும் நம்மைப் படத்தோடு ஒன்றவைக்கிறது. 

போலீஸ் ஸ்டேஷனுக்குள் ரகுமான் நுழையும் காட்சி, மழையில் நடக்கும் கொலையை ஒவ்வொரு கோணத்திலும் பதிவு செய்தவிதம் என்று நேர்த்தியான ஒளிப்பதிவை தந்திருக்கிறார் சுஜித் சாரங். படத்தின் ட்விஸ்டைப் பதட்டத்துடனும், விறுவிறுப்புடனும் கடத்துவதற்காக ஸ்ரீஜித் சாரங்கின் கத்தரி நிறையவே மெனக்கெட்டிருக்கிறது.  பாடல் காட்சிகள் இல்லாதது படத்தின் ப்ளஸ். பட இறுதியில் வரும் மான்டேஜ் பாடல் ரசிக்கும் விதம். படத்துக்கேற்ற பின்னணி இசையை வழங்கியிருக்கிறார் ஜோக்ஸ் பிஜாய்.  

குற்றவாளி நிச்சயம் சைக்கோ கில்லர் தான் என்று நம்பவைக்கும் இடங்களில் சச்சின் சுதாகரனின் சவுண்ட் எஃபெக்ட்ஸ் கைகொடுக்கிறது. சைக்கோ கில்லராக உருவகப்படுத்தும் வில்லனின் கெட்டப், இரவு நேரத்திற்கான செட் வேலைகள் என்று படமே நேர்த்தியான திரைக்கதையுடன் முழுமைபெறுகிறது. 

“உன்னோட கோணத்தில் பார்த்தா நான் செஞ்சது தப்புங்குறமாதிரி தெரியும். ஆனா என்னோட கோணத்துல பார்த்தாதான் நான் பண்ணது சரியானு உனக்குப்புரியும்”, ‘’போலீஸ்காரன் சாகுறதுக்கு பயப்படமாட்டான். ஆனா என்னைச் சாகடிக்கிறதுக்கான சரியான காரணம் உனக்குத் தெரியணும். அதுனால நான் சொல்லுற கதைய கேட்டுட்டு அப்புறம் என்னைச் சுடு” - கதைக்கேற்ற கச்சித வசனங்கள். 

நாள் முழுவதும் ரகுமான் செல்ஃபோன் உபயோகிக்காமல் சுற்றுவது, நெருடுகிறது. ஒரு நாள் முழுவதுமா செல்ஃபோன் சார்ஜ் ஏறும்? அடுத்த காட்சிகான லீடாக முந்தைய காட்சியிலேயே சீன் வைப்பது த்ரில்லரின் முழு அனுபவத்தையும் உணரவிடாமல் சில இடங்களில் தடுக்கிறது. கோவை போன்ற ஒரு மாநகரில் மிகக்குறைவான போலீஸ் பாத்திரங்களே மீண்டும் மீண்டும் வருவது இன்னுமொரு உறுத்தல்.

ஆனால், இவற்றையெல்லாம் தாண்டி ஒரு த்ரில்லர் சினிமாவாக... அழுத்தமாக ஈர்க்கிறது இந்த துருவம்! 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்