வர்லாம் வர்லாம் வா பைரவா என்ன சொல்றார்..? - பைரவா விமர்சனம்

பைரவா விஜய் கீர்த்திசுரேஷ் விமர்சனம்

டைட்டில் பிரச்னை, கதை திருட்டுப் பிரச்னை, மதத்தை இழிவுபடுத்தியிருக்கிறது என்கிற எந்தப் பிரச்னையும் இல்லாமல் ஸ்மூத்தாக ஒரு விஜய் படம் வந்திருப்பது 'பைரவா'வாகத் தான் இருக்கும். ’அழகிய தமிழ்மகன்’ படத்துக்குப் பிறகு பரதன் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கிறார். பைரவா கெத்தா இல்லையா...? 

கல்வி நிலையங்கள் செய்யும் அநியாயங்களைத் தட்டிக்கேட்கிறான் `பைரவா'. தனியார் வங்கி ஒன்றில் கலெக்‌ஷன் ஏஜென்ட் பைரவா (விஜய்). கடன் வாங்கிவிட்டு திரும்ப கட்டாத லோக்கல் தாதாக்களை வெளுத்துகட்டி பணத்தை வாங்கும் வசூல் மன்னன். நண்பன் சதீஷுடன் ’பட்டைய கிளப்பு பட்டைய கிளப்பு...’ என ஜாலியாக இருக்கும் விஜய், தோழியின் திருமணத்திற்கு வரும் கீர்த்தி சுரேஷைப் பார்த்ததும் காதல். திருமணத்திற்கு வந்த கீர்த்தி திரும்ப ஊருக்கு பஸ்  ஏறப் போகும் போது காதலைச் சொல்லப் போகிறார் விஜய். அங்கு நடக்கும் ஓர் அதிரடியால் கீர்த்தி சுரேஷின் ஃப்ளாஷ் பேக் ஆரம்பிக்கிறது. தான் படிக்கும் கல்லூரியில் நடக்கும் ஒரு அநியாயத்தை கீர்த்தி சுரேஷ் தட்டிக் கேட்டு கல்லூரி நடத்தும் ஜெகபதிபாபு மேல் வழக்கு போடுகிறார். அந்த வழக்கில் கீர்த்தியை தோற்கடித்து பின்பு கொல்லும் முடிவில் இருக்கிறார் ஜெகபதிபாபு. இதை அறிந்து கொள்ளும் விஜய் சம்பவ இடமான திருநெல்வேலிக்கு கிளம்புகிறார். அவர் எப்படி ஜெகபதிபாபுவை குற்றவாளி என்று நிரூபிக்கிறார் என்பது மீதிக் கதை.

நண்பன், துப்பாக்கி, கத்தி என வேற மாதிரி பயணிக்கும் விஜயை இழுத்து வந்து மீண்டும் மாஸ் மசாலாவில் முக்கி எடுத்து பரிமாறியிருக்கிறார் இயக்குநர் பரதன். "யாருகிட்டயுமே இல்ல்லாஆஆஆத கெட்டப்ப்ப்ப்ப்ப் பழக்கம் ஒன்னு என்ட இருக்கு... சொன்ன வார்த்தைய காப்ப்ப்ப்பாஆஆஆத்துறது" என இழுத்து இழுத்து பேசும் விஜயின் மாடுலேஷன் தொடங்கி பல இடங்களில் மறுபடி பழைய ஸ்டைல் விஜயைக் கொண்டு வந்தது.... ஆஆஆவ்வ்வ்வ்! அதே நேரத்தில் அத்தனை பெரிய படத்தில் நம்மை என்டர்டெயின் செய்வதும் விஜய் மட்டும் தான். வழக்கமான வில்லன், வழக்கமான ஹீரோயின், மிகப் பழக்கமான கதை எனப் பயணிக்கும் படத்தில் ஒரே ஆறுதல் விஜய் தான். 

கீர்த்திசுரேஷ், விஜய், பைரவா

விஜய்யுடன் கொஞ்சம் ரொமான்ஸ், வில்லனால் பிரச்சனை வரும் போது அழுவது, பாடல் காட்சிகள் என கதை எழுதும் போதே கீர்த்திக்கான வேலை இவ்வளவு தான் என குறித்துவிட்டதால், அதை மீறி கீர்த்தியும் எதுவும் செய்யவில்லை. காமெடிக்கு சதீஷ் இருந்தும், அவரை சரியாகப் பயன்படுத்தவில்லையோ எனத் தோன்றுமளவுக்கு படத்தில் காமெடியைத் தேட வேண்டியிருக்கிறது. கத்தி சண்டை படத்தைப் போலவே ஹீரோவின் ரெய்டால் வீட்டில் இருக்கும் பணம் பத்திரம் எல்லாத்தையும் இதிலும் ஜெகபதிபாபு இழப்பார் அதை வேண்டுமானால் காமெடியாக நினைத்து சிரித்துக் கொள்ளலாம். மற்றபடி உண்மையில் வில்லனாக மிரட்டுவது டேனியல் பாலாஜி தான். படத்தின் பிரதான வில்லன் இல்லை என்கிற போதிலும் தனக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை பார்ப்பவர்களுக்கு பதிவு செய்யும் படி நடித்திருக்கிறார்.

சுகுமாரின் ஒளிப்பதிவு பாடல்களில் கலர்ஃபுல்லாகவும், சண்டையில் பரபரப்பாகவும் வேலை செய்திருக்கிறது. குறிப்பாக இன்டர்வெல்லுக்கு முன்பு வரும் சண்டைக் காட்சி அசத்தல். சந்தோஷ் நாராயணின் இசையில் படத்தின் தீம் மியூசிக்கான வர்லாம் வர்லாம் வா-வும், நில்லாயோ பாடலும் கவனிக்க வைக்கிறது. 

"ஒருத்தன் டைமிங்க மட்டும் கீப் அப் பண்ணி பழகிட்டான்னு வையேன். அப்பறம் டைமே சரியில்லப்பானு சொல்ல அவசியமே இருக்காது" என சில இடங்களில் மட்டும் வசனத்தில் கவனிக்க வைக்கிறார் பரதன்.

பைரவா, விஜய், பரதன்

படத்தில் மிக முக்கியமான ஒரு விஷயத்தைப் பற்றி பேசியிருக்கிறேன் என பரதன் சொல்லியிருந்தார். முக்கியமான பிரச்சனையாக இருந்தாலும் அதன் தீவிரத்தையும் சரியாக காட்டாமல், அதை விவரிப்பதற்காக அவ்வளவு பெரிய ஃப்ளாஷ்பேக்கை வைத்து, மாஸ் ஹீரோ படமாகவும் இல்லாமல் அந்தரத்தில் மிதப்பது தான் வருத்தம். அதை சின்னச் செய்தியாக வைத்துவிட்டு, முழுக்க ஒரு கமர்ஷியல் படம் என இறங்கினால், ஆக்‌ஷன், காமெடி, ரொமான்ஸ் என கலந்து கட்டி படம் எடுக்க விஜயைவிட பெட்டர் சாய்ஸ் இருக்க முடியாது. மீண்டும் ஒரு முறை விஜய் கிடைத்தும் பரதன் வீணடித்திருப்பது தான் சோகம்.  ஆனாலும், பொங்கல் ஸ்பெஷலாக குழந்தைகளுடன் திரையரங்கிற்குச் சென்று,  மகிழ்ச்சியாக படம்பார்க்க பைரவா பெஸ்ட் சாய்ஸ்!  வர்லாம்... வர்லாம்...வா...! 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!