Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திருஷ்யம் ஜோடி மோகன்லால் - மீனா... அதே மேஜிக் கொடுக்கிறார்களா? முந்திரிவள்ளிகள் தளிர்க்கும்போல் படம் எப்படி? #விமர்சனம்

முந்திரிவள்ளிகள் தளிர்க்கும் போல்,  மோகன்லால், மீனா

‘என்னோட வாழ்க்கை என் மனைவியும் என் குழந்தைகளும் தான்...’ என்பதை கணவன்மார்களுக்குச் சொல்லித்தரும் மோகன்லாலின், க்யூட் குடும்பத்தில் நிகழும் மகிழ்ச்சியும், வருத்தமும் தான்  ‘முந்திரிவள்ளிகள் தளிர்க்கும்போல்’ மலையாளத் திரைப்படம்.  

நடுத்தர குடும்பம், மார்டன் குடியிருப்பில் மனைவி மீனா மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் குடியிருக்கிறார் மோகன்லால். குட்டி கிராமத்தில் பஞ்சாயத்து செக்ரட்ரியாக வேலைப்பார்க்கும் மோகன்லாலுக்கு காலையில் வேலை, மாலையில் நண்பர்களுடன் குடி. இதுவே 19 வருடமாக தினசரி வழக்கம். இதனால் வாழ்க்கையின் மீது வெறுப்பும், சலிப்பும் தட்டிவிட, குடும்பத்தோடு ஒட்டாமல் ஒதுங்கியே இருக்கிறார். பக்கத்துவீட்டு நண்பனான அனூப் மேனனின் லவ்வர் பாய் இமேஜ் இவரையும் உசுப்பேற்றிவிட, வேறு ஒரு பெண்ணுடன் இவருக்கு தொடர்பு ஏற்படுகிறது. அந்த உறவினால் ஏற்படும் களேபரத்தால், மனம் திருந்தும் மோகன்லால் மீண்டும் குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கிறார்.  திருமணமாகி 20 வருடங்கள் கழித்து மீண்டும் மீனா மீது காதல் கொள்ளும் மோகன்லாலின் மகிழ்ச்சியும், அந்த நேரத்தில் மகள் ரோஷ்மை செபாஸ்டியனால் நிகழும் வருத்தமும் அதன் பாடங்களும் தான் கதை. 

கனவுகளோ, லட்சியமோ எதுவுமே இல்லாமல் வேலைக்குச் செல்வதும், திரும்பி வரும்போது பேருந்தில் தூங்கிவிழுவதுமாக வருகிறார் மோகன்லால். இரண்டாம் பாதியில் மீனாவுடன் காதலில் விழும் போது குறும்புத்தனமும், கலகலப்புமாக இரண்டுவித நடிப்பிலும் வித்தியாசம் காட்டுகிறார் மோகன்லால். மொத்தத்தில் நடுத்தரவயது நாயகனாக நச்சென பொருந்துகிறார் மோகன்லால். 

முந்திரிவள்ளிகள் தளிர்கும் போல் , மோகன்லால், மீனா

சமையலறையும், அழுகாச்சி சீரியலுமே உலகம் என ஒட்டுமொத்த மனைவிகளுக்கும் பிராண்ட் அம்பாசிடராக வந்துசெல்கிறார் மீனா. மேக்கப் இல்லாத உடல்மொழி, பர்ஃப்யூமில் மணக்கவைப்பது  என்று த்ரிஷ்யம் ஜோடி இந்தப் படத்திலும் நிறைகிறது.   

‘ஜாக்கப்பிண்டே சொர்க்கராஜ்யம்’ படத்தில் வந்த ரோஷ்மை செபாஸ்டியன் அழகிலும், பெற்றோருக்காக காதலை உதறித்தள்ளும் இடத்திலும் நடிப்பில் பாஸ்மார்க் வாங்குகிறார். அனூப் மேனன், அலென்சியர், லில்லிக்குட்டி என்று ஒவ்வொரு கதாபாத்திரமும் நடிப்பில் சிறப்பு...மிகச்சிறப்பு.. 

‘இப்பவுமே என் மனசுல ஓர் ஓரத்தில் பழைய காதல் அப்படியே தான் இருக்கு..  என்னை எப்போவது நினைச்சிப்பார்ப்பியா...” 

‘பொய் சொல்லணும்னா...ஆமானு தான் சொல்லணும்’ ‘அப்படி சொன்னா, என் மனசு கஷ்டப்படும், அதுக்கு நீ பொய்யே சொல்லலாம்...’ -  ஓல்டு ஸ்டூடண்ட் மீட்டிங்கில் முன்னாள் காதலி ஆஷாசரத்துடன் மோகன்லாலின் இந்த லவ்கீக டயலாக்குகள் அழகியல். 

எழுத்தாளார் வி.ஜெ.ஜேம்ஸ் எழுதிய சிறுகதையான ‘pranayopanishad’ தழுவி சிந்துராஜ் திரைக்கதை எழுத, ஜிபு ஜேக்கப் இப்படத்தை இயக்கியிருக்கிறார். சிறுகதையின் ஒட்டுமொத்த சாராம்சத்தையும் மலையாள கரையின் விழுதுகளோடு அப்படியே படரவிட்டிருக்கிறார்கள். 

நடுத்தர குடும்பத்தின் வாழ்வியல் என்னவாக இருக்கும், பிறர் மனைவியை தவறாக அணுக நினைப்பதால் ஏற்படும் பிரச்னைகள்,  பள்ளிப்பருவத்தில் தளிர்விடும் பிள்ளைகளின் காதலை பெற்றோர்கள் எப்படி சமாளிப்பது என்று சில நுணுக்கங்களையும் எளிமையாக கையாண்டிருக்கிறார் இயக்குநர்.  

பிஜிபால் மற்றும் ஜெயச்சந்திரன் இருவரின் இசையும் பின்னணி கோப்பும் படத்தோடு பொருந்துகிறது.  மலையாளத்திற்கேயான மெதுவாக நகரும் திரைக்கதை, நம்மை கொஞ்சம் பொறுமை இழக்கவும் செய்கிறது. 

மோகன்லால், மீனா, முந்திரிவள்ளிகள் தளிர்க்கும் போல்

எந்தவித ட்விஸ்டும், படபடப்பையும் நிச்சயம் இப்படம் நமக்குத்தராது என்றாலும் முழுக்க முழுக்க சுவையான காதலை உணரச்செய்யும். “இந்த வாழ்க்கை, மறந்துபோன நம்முடைய காதலுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு தரும், அந்த காதல் மறுபடியும் வாழ்க்கையை அழகாக்கும்” என்ற சில டயலாக்குகுகளால் சிரிக்கவும், நெகிழவும் வைக்கும்.   

பெற்றோர்களுக்கிடையேயான காதலையும், அன்பையும் பார்த்து தன் பிள்ளைகள் வளரும் என்ற செய்தியைச் சொல்லும் ’முந்திரிவள்ளிகள் தளிர்க்கும்போல்’ தவிர்க்கமுடியாத அழகான குடும்பப்படம். புரிதலும், விட்டுகொடுத்தலும் குடும்பங்களுக்கு அவசியம் என்ற படிப்பினையைச் சொல்லும் இப்படத்தை நிச்சயம் பார்க்கலாம்.. ரசிக்கலாம்.. ! 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

விகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது? விஜய்யிடம் என்ன பிடிக்கும்? - விஷால்