Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வித்தியாசமான டைட்டில்... அனிருத் இசை, பேய்ப்படம் - இதெல்லாம் போதுமா? ‘ரம்’ படம் விமர்சனம்

‘போரில் மறைந்த வீரர்களின் ஆன்மா எந்தத் தீங்கும் செய்யாமலிருக்க, அந்தப் போர்க்களத்தைச் சுற்றிச் சில அதிசய கற்கள், எலுமிச்சை பழம் போன்றவற்றைப் புதைத்துவைப்பார்கள். அவற்றுக்கு அந்த ஆன்மாக்களை அடக்கும் சக்தி உண்டு” - இப்படி வித்தியாசமான அறிமுகத்துடன் தொடங்குகிறது படம். இப்படிப்பட்ட சக்தி வாய்ந்த கற்கள், இந்திய அரசிடம் ஒப்படைக்கப்படுகின்றன. அவற்றை இடம் மாற்றும்போது அதைக் கொள்ளையடித்து, ஒரு பங்களாவுக்குள் மாட்டிக்கொள்கிறது ஹரிகேஷ் அண்ட் கோ. எதற்காக அதை அவர்கள் கொள்ளையடித்தார்கள்? அந்த பங்களாவிலிருந்து இவர்கள் தப்பித்தார்களா? இந்தக் கேள்விகளுக்கான பதில்தான் ‘ரம்’.

ரம்

‘ரம்’ என்ற வித்தியாச டைட்டில், முதல்முறையாக பேய்ப் படத்துக்கு அனிருத் இசை என, ஆர்வத்துடன் போகும் ஆடியன்ஸுக்கு ‘ரம்’ திருப்தி அளிக்கிறதா?

‘வேலையில்லா பட்டதாரி’யில் தனுஷின் தம்பியாக நடித்த ஹரிகேஷ் ஹீரோ.  அவர், விவேக், சஞ்சிதா ஷெட்டி, அர்ஜுன் சிதம்பரம், அம்ஜத் கான் ஆகியோருடன் சேர்ந்து சின்னச் சின்னத் திருட்டு வேலைகளைச் செய்கிறார். இந்த விஷயங்கள், வீடியோ ஆதாரத்துடன் போலீஸ் அதிகாரி நரேன் கையில் சிக்குகின்றன. மிரட்டலுக்கு பயந்து திருடும் பணத்தில், நரேனுக்கு கமிஷன் கொடுக்கவேண்டிவருகிறது. அந்தச் சமயத்தில் அந்த விநோதமான கற்களைத் திருடும் ஹரிகேஷ் அண்ட் கோ, நரேனிடமிருந்து தப்பிக்க நினைத்து ஏலகிரியில் ஒரு பேய் பங்களாவில் தலைமறைவாகிறது. அங்கு சில அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்கின்றன. அதன் பிறகு என்ன ஆகிறது என்பதெல்லாம் பேயே பேஸ்தடித்து உட்காரும்படியான சித்துவேலைகள்.

எதிர்க்கவேண்டிய வில்லனை விட்டுவிட்டு, எதேச்சையாக வீட்டுக்குள் வருபவர்களைப் பயமுறுத்துவது, கட்டிலை ஆட்டுவது, தள்ளிவிடுவது... முதல் பாதி முழுக்க ஏனோதானோ எனக் கதை நகர்கிறது. அதிலும் அந்த எலுமிச்சை பழ ட்விஸ்ட் எல்லாம் அநியாயம். 

Rum

`‘இவன்வேற, எல்லாத்துக்கும் ஒரே எக்ஸ்பிரஷனைக் காட்டிக்கிட்டு!’’ என்று ஹரிகேஷைக் கலாய்ப்பார் விவேக். அவர் கலாய்க்கவில்லை, உண்மையைத்தான் சொல்லியிருக்கிறார் என்றே தோன்றுகிறது. நரேன், இருக்கிறார் அவ்வளவே! ‘குட்டிக் குட்டி ட்ரவுசர் அணிந்து வந்தாலே போதும், நடித்ததாக ஆகிவிடும்’ என்று சஞ்சிதாவிடம் யாரோ தவறாகச் சொல்லியிருக்கிறார்கள்போல. இப்படி பெர்ஃபாமன்ஸில் பெரிதாக ஈர்க்கும்படியாக ஒருவரும் இல்லை. கதை, கதாபாத்திரம் எதற்கும் எந்த பலமான பின்புலமும் இல்லை.

‘என்னடா விஜய் - அஜித் ஃபேன்ஸ் மாதிரி சண்டை போட்டுக்கிறீங்க, இது ரோடா இல்லை ஃபேஸ்புக்கா?’, ‘இவன் போலீஸா, பிரஸ்ஸா இல்ல மீம்ஸ் போடுறவனானு தெரியலையே!’, ‘நல்லா எம்.சி.ஆர் வேட்டிய கட்டிக்கிட்டு மோகன்லால் மாதிரி ஒரு உருவம் வந்து துவம்சம் பண்ணிடுச்சுடா’, ‘650 ஸ்பேர் பார்ட்ஸ்ல ஓடாத வண்டியாடா இந்த எலுமிச்சை பழத்தால ஓடப்போகுதுன்னு கேட்டவன்டா நானு. ஏதோ பேய் சீஸன்ல வந்து நானும் மாட்டிக்கிட்டு, இந்தக் கஷ்டத்தை எல்லாம் அனுபவிக்கிறேன்’... இப்படி தன் ஒன் லைனர்களால் நம்மை உட்காரவைப்பது விவேக்கின் காமெடி மட்டும்தான். இதையே ஆரம்பமா நினைச்சு அடுத்த இன்னிங்ஸை ஆரம்பிங்க பாஸ். இன்னொரு தகவல், உங்களுக்கு சோலோதான் பாஸ் செட்டாகுது!

Anirudh

அனிருத் தான் ‘ரம்’மின் செல்லிங் பாயின்ட். ஆனாலும் ஒரு பாடலைத் தவிர வேறு எங்கும் அவர் தெரியவே இல்லை. ‘ஹாரர் படத்துக்கு இசையமைத்து எனக்குப் பழக்கமே இல்லை’ என அவர் சொன்னதை நாம் சீரியஸாக எடுத்துக்கொண்டே ஆக வேண்டும். அதே பழைய வீடு, கோரமான முகம், ஒரு ஃப்ளாஷ்பேக், பழிவாங்குதல்... என படத்தில் காட்டப்பட்ட அத்தனை விஷயங்களும் உலகின் முதல் பேய்ப் படம் தொடங்கி கடைசியாக வந்த பேய்ப்படம் வரை அது அது அப்படி அப்படியே இடம்பெற்றிருக்கின்றன. ஆனால் ஆங்காங்கே பயப்படவைத்ததுதான் படத்தில் ஒரே ஆறுதல். 

புது முயற்சிகளுடன் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் ‘ரம்’ நல்ல ஆரம்பமாக இருந்திருக்கும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்