ஒரு மணி நேரம் ப்ரேக் இருக்கா? ‘த அன்ரிசர்வ்டு’ படம் பார்க்கலாமா? #TheUnreserved

‘த அன்ரிசர்வ்டு’ என்றொரு படம். 15ம்தேதி வெளியானது. ஒருமணிநேரம்தான். வித்தியாசமான அனுபவத்தை உங்களுக்கு நிச்சயம் தரும். ’அப்படி ஒரு படம் எந்தத் தியேட்டர்ல ஓடுது?’ என்று கேட்கத் தோன்றுகிறதா? முதலில் படியுங்கள். படத்தைப் பற்றிய இந்தக் கட்டுரையைப் படித்துக் கொண்டே படம் பார்க்கலாம் 

இந்தியா முழுக்க ரயிலில் ஒரு பயணம். ஆனால், அது காதில் ஹெட்ஃபோன் மாட்டிக் கொண்டோ, புத்தகம் படித்துக் கொண்டோ, செல்ஃபி எடுத்துக் கொண்டோ அல்ல. இது கொஞ்சம் வித்தியாசமான பயணம். உடன் பயணம் செய்பவர்களிடம் பேசி, அவர்கள் கதைகளைக் கேட்கும், பயணம். வாழ்வில் ஒரு பயணம். மும்பையிலிருந்து கிளம்பி மும்பைக்கே திரும்பும் ஒரு அன்ரிசர்வ்டு கம்பார்ட்மென்ட் பயணம். 

இயக்குநர் சமர்த் மஹாஜன் தன் சின்ன குழு மற்றும் கேமிரா, மைக்குடன் கிளம்பி ரயிலில் அன்ரிசவர்டு கம்பார்ட்மென்டில் ஏறுகிறார். அங்கிருந்து துவங்குகிறது 'த அன்ரிசர்வ்டு' படத்தின் கதை. ஆரம்பித்ததும் ஒரு தாத்தா 'எனக்கு மிமிக்ரி நல்லா வரும் என நாய் போல கத்துவது, யோகா செய்வேன் என சீட்டிலேயே ஆசனம் செய்து காண்பிப்பது என ரகளையாக துவங்குகிறது. 

அன்ரிசர்வ்டு

இது கண்டிப்பாக வழக்கமான படம் கிடையாது. கதை, திரைக்கதை, காமெடி, சண்டை, கிளுகிளுப்பான ஹீரோயின், பாடல்கள் என வழக்கமான எந்த வஸ்துவும் கிடையாது. ஆனால், அப்படியான படங்களை விட நல்ல, புது அனுபவத்தை வழங்கும். மிஸ்டு காலில் உருவான தனது காதல் பற்றிப் பேசும் ஒருவனை உங்களால் சந்திக்க முடியும், டாக்டராக நினைத்து நர்ஸ் ஆகிப் போன பெண்ணை சந்திக்க முடியும், குழந்தையின் வியாதியை சரி செய்ய கடன் வாங்கி நொடிந்து போயிருக்கும் தந்தை ஒருவரின் அழுகுரலைக் கேட்க முடியும், ரிசர்வேஷன் அரசியல் பற்றிப் பேசும் பெரியவரை கவனிக்க முடியும், 'நான் முஸ்லீம் என்பதால் பாகிஸ்தான் அணிக்கு ஆதரவு தருகிறேன். ஆனால், சச்சினும், கோலியும் நன்றாக விளையாடுகிறார்கள்'  என கிரிக்கெட் பற்றிப் பகிர்ந்து கொள்ளும் நண்பரைப் பார்க்க முடியும், ‘உங்களுக்கு அந்தப் படம் பிடிக்கலன்னா பாக்காதீங்க, அதைப் பாக்க விரும்பறவங்க பார்த்துகட்டும்’ என மஜித் மஜிதியின் 'மொஹமத்: த மெசஞ்சர் ஆஃப் காட்' படத்திற்காக வாதாடும் முன்பின் தெரியாத இரண்டு தோழர்களைக் கடந்து செல்ல முடியும், ரஜினிகாந்த் பற்றி பேசுவதைக் கேட்டதும் 'மை ஃபேன் இஸ், ரஜினிகாந்த் மை ஐ ஃபேன்' என ஆர்வம் காட்டும் திருநங்கை ஒருவரின் குரலில் இருக்கும் ரசிகத்தன்மையை உணர முடியும். 

2011ல் மைகேல் க்ளோவோகேர் இயக்கத்தில் வெளியான ஆவணப்படம் 'வொர்ஸ் க்ளோரி'. தாய்லாந்து, பங்களாதேஷ் மற்றும் மெக்சிகோ இந்த மூன்று இடங்களிலும் விபச்சாரத்தின் கலாசாரத்தைப் பற்றி விவரிக்கும் பிரமாதமான ஆவணப்படம் அது. 'அன்ரிசர்வ்டு' விபச்சாரம் பற்றிப் பேசவில்லை, ஆனால் வெவ்வேறு வகையான மனிதர்களைப் பற்றி நேரில் பார்க்கும் லைவ்லியான விதத்தில் காட்சிப்படுத்தியிருப்பதால் தவறவிடாமல் கவனிக்க வேண்டிய பட்டியலில் இணைகிறது. அதே வேளையில் இது ஒரு டாகுமென்ட்ரியோ, டாக்-ட்ராமாவோ கிடையாது. எந்த ஜானருக்குள்ளும் அடக்க முடியாத, 1 மணிநேர வாழ்வியல்! 

மேலே இருப்பது படத்தின் ட்ரெய்லர் அல்ல. படம். ஆம். முழுப்படத்தையும் யூ-ட்யூபிலேயே வெளியிட்டிருக்கிறார் இயக்குநர் சமர்த் மஹாஜன். ஆஃபீஸ்ல இருக்கீங்களா? ஒரு மணி நேரம் ப்ரேக் ப்ளீஸ்! 

- பா.ஜான்ஸன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!