அறிவியல் கனவு.. நனவாகிறதா? - ‘கனவு வாரியம்’ - விமர்சனம்

 

முயன்றால் முடியாதது எதுவுமில்லை; நல்ல கனவுகள் நனவாகும் என்று நம்பிக்கை விதைகளை விதைக்கும் படம், 'கனவு வாரியம்'.

கனவு வாரியம்

பள்ளியில் நன்றாகப் படிக்கும் மாணவன்தான் நாயகன் அருண் சிதம்பரம். மற்ற பாடங்களைவிட அறிவியலின்மீது ஆர்வம் அதிகம். 'ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்குப் பள்ளிக் கல்வியைவிட அனுபவக் கல்வியே முக்கியம்' என்று முடிவுக்கு வரும் நாயகன், பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு மின்சாதனப் பொருட்களைப் பழுது பார்க்கும் கடையில் சேர்கிறார். சொந்தமாக ஒரு கடை வைத்திருக்கும்போது தமிழ்நாட்டையே வாட்டி வதைத்த மின்வெட்டால் நாயகனின் தொழிலும் முடங்குகிறதது. தனது கிராமத்தில் ஏற்படும் மின்வெட்டுக்குத் தீர்வு காண முயற்சிக்கிறார். இன்னொருபுறம் லட்சத்தில் சம்பளம் வாங்கிய ஐ.டி வேலையை உதறி விட்டு இயற்கை விவசாயம் பார்க்க கிராமத்திற்கு வருகிறார் யோக் ஜெப்பி... இவர்கள் இருவரின் முயற்சியைப் பார்த்தும் சிரித்தும் ஏளனம் செய்யும் கிராம மக்கள், இருவருக்குமே 'கிறுக்கன்' என பட்டம் வழங்கிப் பரிகசிக்கிறார்கள். இந்த இரு 'கிறுக்கன்'களின் கனவும், முயற்சியும் கைகூடியதா என்பதே படம். 

மறைந்த அப்துல்கலாம் எங்கும் எப்போதும் சொல்லிவந்த 'கனவு காணுங்கள்' என்ற மந்திர வாசகத்தையே நல்ல திரைப்படமாகத் திரையில் தொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் அருண் சிதம்பரம். இவர்தான் படத்தின் ஹீரோ, பாடலாசிரியர் மற்றும் வசனகர்த்தா... வணக்கங்களும் வாழ்த்துகளும் வரவேற்பும் உரித்தாகுக!

நாம் மறந்துபோன கிராமத்து விளையாட்டை எல்லாம் நினைவுபடுத்தும் 'கல்லா மண்ணா..' பாடலில் தொடங்கும் படம்... 'முயலாமை' கதை, மகனை எப்போதும் உற்சாகப்படுத்தும் அப்பா. புத்தகத்துக்கு நடுவில் சாக்லேட்டை வைத்து வீடு வீடாகக் கொடுத்து வரும் நூலகர். சின்னச் சின்ன விஞ்ஞான அறிவியல் விளையாட்டுகள், பல தோல்விகளுக்குப் பின்னரும் ரசாயன உரத்தைத் தவிர்த்து இயற்கை விவசாயத்தை மட்டுமே நம்பி நிலத்தில் விதைபோடும் நவீன விவசாயி என படம் நெடுக நல்ல விதையைத் தூவித்தூவி இருக்கிறார்கள்... இதுதான் படம் பார்க்கும் நமக்கும் உற்சாகத்தை தருகிறது.

கூடுதலாக, தமிழகத்தில் அரசு அலுவலகங்கள் எப்படி இயங்குகின்றன, ரசாயன உரத்தைப் பயன்படுத்தும் விவசாயிகளின் மனநிலை என்னவாக இருக்கிறது என அழுத்தமாகவும் தரவுகளோடும் சொல்லிய விதம் அருமை. ஒரு விவசாயி தன் நிலத்தில் ரசாயனத்தைத் தெளித்துக்கொண்டு இருக்கும்போது, அந்த பக்கம் போகும் யோக் ஜெப்பியிடம், 'பூச்சி மருந்து தெளிக்கிறோம். முகத்தை மூடிக்கோங்க.' என சொல்ல.... 'என்னை முகத்தை மூடிக்கச் சொல்லுறீங்க. ஆனா, இந்த விஷத்தைத்தானே மக்களுக்கு அறுவடை பண்ணிக்கொடுக்கறீங்க?'  என கேட்கும் ஒரு காட்சியே... பகீர் என்கிறது. இப்படிப் படம் முழுக்க நக்கலாகவும் நறுக் என்றும் வசனங்கள் சமூகப் பிரச்னைகளை அலசுகின்றன..

'கல்லா மண்ணா...' என்ற பாடலில் நமது கிராமத்து விளையாட்டுகள் அத்தனையும் ஒரே பேக்கேஜில் காட்டியது சூப்பர். அந்தப் பாடலிலேயே தெரிகிறது ஒளிப்பதிவாளர் எஸ்.செல்வகுமாரின் உழைப்பு. 'இவன் கிறுக்கன்தான்.. கிறுக்கன்தான்.' பாடலில் கவர்கிறார் இசையமைப்பாளர் ஷ்யாம் பெஞ்சமின். 

'உனக்கு பிடிச்சதை செய்யுப்பா...' என மகனைத் தொடர்ந்து எல்லா முயற்சிகளுக்கும் ஊக்கப்படுத்தும் ரோல்மாடல் அப்பாவாக இளவரசு, மகன் மேல் பாசம் இருந்தாலும் திட்டிக்கொண்டே இருக்கும், அம்மாவாக செந்தில் குமாரி... நண்பன் முயற்சிக்கு உதவி செய்து அவ்வப்போது காமெடி கலகலப்பூட்டும் ப்ளாக் பாண்டி, நூலகர் கு.ஞானசம்பந்தன். விவசாயியாக வரும் யோக் ஜெப்பி என அனைவருமே கச்சிதம். காதல் போர்ஷனுக்கு வலுக்கட்டாயமாக ஹீரோயின் 'வீணா' கேரக்டரை சேர்த்து இருப்பது பக்கா கமர்ஷியல். ஹீரோ அருண் படம் முழுக்க ஒரு அசட்டு சிரிப்புடனே வருவது ஏனோ? முதல் பாதியில் இருந்த வேகமும் விறுவிறுப்பும் இரண்டாம் பாதியில் மிஸ்ஸிங். திடீரென்று கிராமத்து மக்கள் வில்லன்களாகி நாயகனின் முயற்சியைத் தடுப்பதிலும் பிறகு அவர்கள் மனம் மாறுவதிலும் நாடகத்தனம் எட்டிப்பார்க்கிறது. ப்ளாக் பாண்டி அப்பாவிற்கு ஒரு காமெடி ப்ளாஷ் பேக் ஸ்டோரி, கொசுவலை, சாக்குப்பை எல்லாம் கட்டி எடுக்கப்பட்ட அந்த  காதல் மான்டேஜ் டூயட் சாங்... என சின்ன சின்ன தேவையில்லாத விஷயங்களுக்கு விடை கொடுத்து இருந்தால் கனவு வாரியம் கச்சிதமாய் இருந்திருக்கும்..

இப்படி சில சின்னச்சின்ன குறைகள் இருந்தாலும் தமிழர்கள் வரவேற்க வேண்டிய தரமான படைப்பு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!