86 புதுமுகங்களுடன் கதையே இல்லாத கலக்கலான சினிமா! - அங்கமாலி டைரீஸ் படம் எப்படி?

86 புதுமுகங்களைக் கொண்டத் திரைப்படம் என்னும் அடையாளத்துடன் வெளியான படம் 'அங்கமாலி டைரீஸ்'. ஆனால், காலை 9 மணிக்காட்சிக்கே அரங்கம் நிரம்பி ஹவுஸ் ஃபுல் ஆனதற்கு சில காரணம் இருந்தது. 2010ம் ஆண்டு முதல் தொடர்ந்து தன் நடிப்பால், பல படங்களில் அப்ளாஸ் அள்ளிய ‘செம்பன் வினோத் ஜோஸ்’ எழுதி இருக்கும் படம் இது. அதே போல், ‘ஆமேன்’, ’சிட்டி ஆஃப் காட்’, ‘நாயகன்’ என வித்தியாசமான படங்களை இயக்கிய ‘லிஜோ ஜோஸ் பெல்லிசெரி’ இந்தப் படத்தை இயக்கியது, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. அங்கமாலியின் சில இளைஞர்கள், அவர்களின் தினசரி நடவடிக்கைகள் என  அங்கமாலியின் அத்தனையும் தான் படம். 

அங்கமாலி டைரீஸ்

படம் இவ்வளவு லைவாக இருக்க அங்கமாலியைச் சேர்ந்த செம்பன் வினோத் ஜோஸ் எழுதியிருக்கும் கதை பெரிய காரணம். மத நல்லிணக்கத்தோடு ஒரு சிகரெட்டை, கடவுளர் வேடமிட்ட பலர் புகைக்கிறார்கள், பாரில் நடக்கும் சண்டை ரோட்டுக்கு வருகிறது (சண்டைக்கு புகைப்பிடித்தது காரணம் இல்லை). அங்கிருந்து ஆரம்பிக்கிறது படம். அதில் ஜீசஸாக வேடமிட்டு இருக்கும் வின்சென்ட் பீப்பே (ஆண்டனி வர்கீஸ்) தான் ஹீரோ. அவன் சந்திக்கும் பெண்கள், அவன் பார்க்கும் தொழில், அது சார்ந்து நடக்கும் பிரச்னைகள், அவனைச் சுற்றிய நண்பர்கள், அங்கமாலியின் உணவு இவ்வளவு தான் கதை. ஆனால், ஒவ்வொரு காட்சியையும் அமர்க்களப்படுத்தி எழுதி இருக்கிறார். 

பாபுஜீ என்பவரின் அதிரடி உள்ளூர் அடாவடியைப் பார்த்து வளர்கிறான் வின்சென்ட். பாபுஜீக்கு இருப்பது போலவே தனக்கும் ஒரு கூட்டத்தை உருவாக்குகிறான். பாபுஜி கொல்லப்பட, அங்கு புதிதாய் பலர் வருகிறார்கள். கேபிள் டிவி பிஸ்னஸ், பன்றிக்கறி வியாபாரம் நண்பர்களுடன் அரட்டை என ஜாலியாக செல்லும் வின்சென்ட்டின் வாழ்வில் எதிர்பார்க்காத திருப்பம் ஒன்றுவருகிறது. அதன் பின் படத்தின் பயணம் வேறு மாதிரி ஆகிவிடுமோ என யோசித்தால், முன்னால் கதை சொன்ன அதே பதத்தில் தொடர்வது சிறப்பு.

Heroines

அடிதடி, அறுசுவை உணவு இரண்டு கலந்தது நீள்கிறது படம். அனைத்து மக்களுமே புதுமுகம் என்பதால், யாரை கவனிப்பது என்றே தெரியவில்லை. ஆனால், படம் முடிந்து வெளியே வரும் போது, படத்தில் இருக்கும் பல கதாப்பாத்திரங்களின் பெயர்கள் அப்படியே நினைவுக்கு வருகிறது. அங்கு அசால்ட்டாக வென்று இருக்கிறார் கதை ஆசிரியர் செம்பன் வினோத். குறிப்பாக 10 மில்லி தாமஸ் (பிட்டோ டாவிஸ்) கதாபாத்திரத்தை ரொம்ப சுலபத்தில் மறந்திட முடியாது. பீப்பேயின் முதல் காதலி சீமா ( அம்ருதா அன்னா ரெஜி), இரண்டாம் காதலி சகி ( பின்னி ரிங்கி பெஞ்சமின்), மனைவி லிச்சி (ரேஷ்மா ராஜன்) என அனைவருமே செம்ம்ம்ம பெர்ஃபாமன்ஸ். மூவரில் லில்லி சேச்சி (எ) லிச்சியின் ரோல், அவர் ஹீரோவைக் கையாளும் விதம் தன் காதலை நாசூக்காக சொல்ல ஆரம்பித்து படாரென போட்டு உடைக்கும் இடம் அழகு.

ஒவ்வொரு கதாபாத்திரத்துக்குமான பின்புலக் கதை படத்தின் அடர்த்தியை அதிகப்படுத்தும் என்பதற்கு இது மற்றும் ஒர் உதாரணம். ஆரம்பக்காட்சியில் உள்ளூர் கை ஒருவரை "இன்னுமாடா பீஃப் தின்னுறீங்க, அவர் மலைப்பாம்பு கறி சாப்பிடுவார்" என்று பெரிய பில்டப்போடு அறிமுகப்படுத்துவதும் அதன் தொடர்ச்சியிலேயே மலைப்பாம்பு எங்கு இருந்து வந்தது என காட்டி இவ்வளோ தான் இந்த ஆளு என வெளிச்சப்படுத்துவார்கள்.  இப்படி படத்தில் வரும் பாபுஜி, தாமஸ், நாட்டு வெடிகுண்டு செய்யும் குஞ்சூட்டி (சின்ஜோ வர்கீஸ்) ரவி, ராஜன், பீப்பே மற்றும் அவனுடன் இணைந்த நண்பர்கள் எல்லோருக்கும் சின்னச் சின்னதாய் பின்புலக் கதையை அலுக்காமல் சொல்லி அதைக் கதையின் அடிப்படைக்கு அதைப் பயன்படுத்தியிருந்தது மிரட்டல். இங்கு ரவி, ராஜனைக் குறிப்பிடுதல் மிக அவசியம். அவர்களுக்கென ஒரு தொழில் இருக்கிறது, அடாவடியாய் இருந்தாலும் அந்த தொழிலில் ஒரு தர்மத்தை கடைபிடிக்கிறார்கள். அதற்கு ஒரு ஆபத்து, தன்னை மீறி இன்னொருவன் என்று எதாவது பிரச்னை வந்தால், வெறியாட்டம் ஆடுவது என வேறுவிதமான ஆட்கள். அந்த இருவருமாக நடித்திருக்கும் சரத்குமார், டிடோ வில்சன் நடிப்பு அட்டகாசம். 

	Chemban Vinod

படம் முழுக்க இழையோடும் நகைச்சுவை, திடீரென அதிரடிக்கும் நிகழ்வு மறுபடி பழைய ஃப்ளோவுக்கு போய் இயல்பாக மாறும் காட்சிகள் என படத்தின் தன்மையை வடிவமைத்திருக்கும் விதம் பிரமாதமான ஒன்று. உதாரணமாக பயங்கரமான சம்பவம் ஒன்று ஹீரோவின் வாழ்க்கையை பாதிக்கிறது, அடுத்த காட்சியிலேயே அதை சரிசெய்யப் பேசிக் கொண்டிருக்கும் போது "சரி எல்லாம் ஓகே, வாங்க ரெண்டு 10 மில்லி சாப்பிடுவோம்" என தாமஸ் கதாபாத்திரத்தை வைத்து தடதடப்பைக் குறைத்து, காட்சி செம ஜாலியாகும்.  ஆனால், மறுபடி ஒரு அதிர்ச்சி, மறுபடி  கலகல  என அந்தக் கோர்வையே எதிர்பார்க்க முடியாததது. 

இடைவேளைக்கு முந்தைய காட்சியில் வரும் ஓட்டம், அதைத் தொடர்ந்து வரும் சண்டை இதனை கிரிஷ் ஒளிப்பதிவு செய்திருந்த விதம் மிக அருமை. படத்தின் க்ளைமாக்ஸில் கிட்டத்தட்டக் கால் மணிநேரத்துக்கும் அதிகமாக நீளும் சண்டைக்காட்சி அது. பெருநாள் கொண்டாட்டம் தெருவில் நடந்து கொண்டிருக்க, அதன் இடையில் புகுந்து அடித்து உதைத்து புரண்டு விழும் அந்தச் சண்டை முழுவதையும் ஒன்ஷாட்டில் எடுத்து அதகளம் செய்திருக்கிறார்கள். பிரசாந்த் பிள்ளையின் இசையில் ஒரு பாடல் வரும்; பீப்பே தன் முதல் காதலியுடன் பாடும் பாடல். கதவைத் தட்டுவது, புத்தக பக்கங்களைத் திருப்புவது இதை வைத்தே ட்யூனைத் துவங்கியிருப்பார். அந்த ஐடியாவும் படத்தின் பின்னணி இசையும் அருமை.

Angamaly Diaries

படம் சில நேரம் ‘கம்மாட்டிபாட’த்தை நினைவுபடுத்தலாம், நண்பர்கள் கூட்டம் என்பதால் சுப்ரமணியபுரம் கூட வந்து போகலாம். ஆனால், அவற்றுடன் இதை ஒப்பிட முடியாது. குறிப்பிட்ட ஏரியா தான் களம் என்றாலும் அடித்து விளையாடியிருக்கும் ஆட்டம் வேறு வேறு. அங்கமாலியின் ஆட்கள் எல்லாரும் இப்படித் தான் என்கிற அச்சத்தை தராமல், இப்படியான ஆட்கள் இருந்தார்கள் இவர்களுக்கு இப்படி எல்லாம் நடந்தது என்பது வரை மட்டும் ஆடியன்ஸுக்கு சொல்லியிருந்த விதத்தில் கவர்கிறது படம். இந்த வருடத்தில் வந்த மலையாளப் படங்களில் மோகன்லால், ப்ருத்விராஜ், துல்கர்  படங்களைவிட தரத்திலும் கதையாலும் முந்தியிருக்கும் படம் புதுமுகங்கள் நடித்த படம் என்பது, கதை தான் வெற்றியைத் தீர்மானிக்கும் என நிரூபித்திருக்கிறது. சினிமா காதலர்கள் கண்டிப்பாக தவறவிடக்கூடாத லிஸ்டில் இணைகிறது இந்த அங்கமாலி டைரீஸ். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!