Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

யாருமே குடியேறாத அபார்ட்மெண்ட்டின் 35வது மாடியில் மாட்டிக்கொண்டால் என்ன செய்வீர்கள்? ‘Trapped’ படம் எப்படி?

நாம் எல்லோரும் ஏதோ ஒருவகையில் தினமும் எதற்குள்ளோ  மாட்டிக் கொண்டுள்ளோம். தப்பிக்க வழியில்லாமல் நரக வேதனையை அனுபவிக்கிறோம். அது ஆபிஸின் வேலைப்பளுவோ, காதலியின் தொடர் நிராகரிப்போ, கந்து வட்டிக்காரனின் டார்ச்சரோ  இந்த `Trapped' லிஸ்ட் நீ...ள...ம்!

trapped

பாலிவுட்டின் சமீபத்திய ரிலீஸான ‘Trapped' படம் பேசும் விஷயமும் இதுதான். பிஸியான மும்பையின் மையப்பகுதியில் ஆட்கள் யாருமில்லா ஒரு உயர்ந்த அபார்ட்மெண்ட்டில் 35-வது மாடியில் மாட்டிக் கொள்ளும் ஒருவனின் அபலக் குரல் எப்படி அவனை மீட்கிறது?   இந்த 105 நிமிட ரோலர் கோஸ்டர் சவாரி போன்ற த்ரில்லர் சினிமா விடை சொல்கிறது. 

ஒரு கை விரல்களால் எண்ணிவிடும் நடிகர்கள். ஒரு ஃபிளாட், 20 நாள் ஷூட்டிங்,  மிகக் குறைவான பட்ஜெட் இவ்வளவு தான் டிராப்டு. ஆனால் 105 நிமிடம் உங்களை சீட்டின் நுனியில் உட்காரவைக்கும் பக்கா த்ரில்லர். அனுராக் காஷ்யப்- விக்ரமாதித்யா மோத்வானே டீமின்  தயாரிப்பில், விக்ரமாதித்யா மோத்வானே இயக்கியிருக்கும் இந்த படத்துக்கு பாராட்டுக்கள் குவிந்து கொண்டிருக்கின்றன. முதலில் நாமும் ஒரு பூங்கொத்தை கொடுத்துவிடுவோம். 

டிராப்டு கதை என்ன? 

மும்பையில் வசிக்கும் சௌரியா மிகச் சாதாரண இளைஞன். உடன் பணிபுரியும் நூரியுடன் அவனுக்குக் காதல். நூரிக்கு நிச்சயம் ஆகி திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. அவனது காதலை ஏற்றுக் கொண்டாலும் அவளால் அவனது மும்பை பேச்சுலர் வாழ்க்கையை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. டேட்டிங் எல்லாம் முடிந்து திருமண பேச்சு வரும்போது, "நீ இப்போ பேச்சலர், தனி வீடு கூட இல்லை...வீடு கூட இல்லாத இடத்துல நான் எப்படி வாழறது? நிச்சயம் அம்மா - அப்பா சம்மதிக்க மாட்டாங்க" என்கிறாள் நூரி. அடங்கா காதலில் இருக்கும் சௌரியா, அடித்துப்பிடித்து  மும்பையில்  ஒரு அபார்ட்மென்ட்டில், 35 வது மாடியில் ஒரு பிளாட்டை, ஒரே நாளில் வாடகைக்கு பிடிக்கிறான். 

மாநகராட்சியின் முழு அனுமதி கிடைக்காததால், அந்த அப்பார்ட்மென்டில் ஒருவர்கூட வசிக்கவில்லை. இவர் மட்டுமே அந்த பிளாட்டில் குடியேறுகிறார். மறுநாள் காலை, வீட்டை பூட்டிவிட்டு வெளியே செல்ல எத்தனிக்கும் போது,  எதிர்பாராத விதமாக காற்றடித்து, சாவியுடன் இருக்கும் கதவு வெளிப்புறமாக மூடிவிட, உள்ளே மாட்டிக் கொள்கிறான் சௌரியா. இதையெல்லாம் ட்ரெய்லரிலேயே காண்பித்து இருப்பார்கள். ஆனால், அதற்குப் பிறகான போராட்டம் நம்மை சீட் நுனிக்கு நகர்த்தி விடுகிறது.  

குடிக்கத் தண்ணீரும் இல்லை; உண்ண உணவும் இல்லை; கரண்டும் இல்லை; மொபைலில் சார்ஜூம் இல்லை; அந்த அப்பார்ட்மென்டிலும் எவரும் இல்லை; இவர் காட்டுக்கத்து கத்தினாலும் எவருக்கும் கேட்கப்போவதும் கிடையாது. இதெல்லாம் செயற்கையான திணிக்கப்பட்ட விஷயங்கள் இல்லை, இந்தச் சூழ்நிலைகளுக்கு எல்லாம் சரியான டீட்டெயிலலிங்கும் படத்தில் இருக்கிறது. மாட்டிக்கொண்ட  சௌரியா என்ன செய்கிறார், என்னென்ன திட்டங்கள் போடுகிறார், அது சக்சஸ் ஆனதா, அவர் உயிரோடு வெளியே வந்தாரா, அவரது காதல் என்னவானது என்பதை விறுவிறுவென சொல்லும் உன்னத சினிமா தான் டிராப்டு. 

ஒரு இடத்தில் சிக்கிக்கொண்டு, பின்பு அந்த இடத்தை விட்டுத் தப்பிப்பது போன்ற கதையை ஹாலிவுட்டில் 'கேஸ்ட் எவே', 'பரீடு' போன்ற சினிமாக்களில் நாம் பார்த்திருந்தாலும் இந்தப் படம் நம்மைப் பல கோணங்களில் சிந்திக்க வைக்கிறது.

trapped

வித்தியசமான விதத்தில் மிளிர்கிறார் இயக்குநர்.  நாயகன் அங்கே மாட்டிக் கொண்டிருக்கும் போது, நாமும் அந்த அப்பார்ட்மென்டில் மாட்டிக்கொண்ட உணர்வு வருகிறது. அந்த நாயகனின் முயற்சிகள் உடையும் போது, மனம் அவ்வளவு பதறுகிறது. ஏனெனில் எடிட்டிங் அவ்வளவு ஷார்ப். கேமரா கோணங்களும் கேண்டிட் பாணியில் எடுக்கப்பட்டிருப்பதால் நாமே மாட்டிக் கொண்ட உணர்வு. உண்மையில் நாமும் இப்படி மாட்டிக்கொண்டால் என்ன நடக்கும் என்ற எண்ணம் வந்துவிடும்போது நடுக்கமும் சேர்ந்து கொள்கிறது.

வழக்கமாக இது மாதிரியான படங்களில் இயற்கைதான் தொந்தரவு கொடுக்கும். ஆனால் இந்த படத்தில் இயற்கை தான் நாயகனை உயிர்ப்போடு வைத்திருக்கிறது. அடர்த்திமிக்க, மும்பை நகரத்தில், நான்கு கான்கிரீட் சுவர்கள் கூட ஒரு மனிதனுக்கு சிறையாகிவிடுகிறது என்பதில் அவ்வளவு அர்த்தங்கள்!  அவனது இயலாமை துக்கமும் வெடிக்கும் கணங்களில் நாம் உடைந்து போகிறோம்... பிறகு அவன் தப்பித்து வெளியே வர வழி தேடும்போது நாமும் தேடுகிறோம். இதுதான் இந்தப்படத்தின் சக்சஸ்.

கதை நாயகன் சௌரியாவாக பட்டையை கிளப்பியிருக்கிறார் ராஜ்குமார் ராவ். 'சிட்டி லைட்ஸ்', `ஷாகித்', 'கை போ சே', 'குயின்' படங்களில் கலக்கிய ராஜ் குமாருக்கு யதார்த்த சினிமாக்களில் தனித்த அடையாளம் உண்டு. அனுராக் காஷ்யப்பின் கண்டுபிடிப்பான இவர் இந்தப்படத்தில் தனக்குக் கிடைத்த வாய்ப்பை கச்சிதமாக செய்திருக்கிறார். நிறைய உழைத்திருக்கிறார். படத்தில் தப்பிக்க வழிதேடும்போது காயம் உண்டாக்கி நிஜ ரத்தத்தைப் பயன்படுத்தி இருக்கிறார் ராஜ்குமார்!  காதல், காமம், சோகம், கோபம், பயம், ஆனந்தம் என ஒவ்வொரு உணர்வுகளுக்கும் வெரைட்டி நடிப்பால் விருந்து வைக்கிறார். ஷூட்டிங் நடந்த  இருபது நாளும் வெறும் காபியையும், கேரட்டையும் மட்டுமே உண்டு, நடித்து கதாபத்திரத்துக்காக அவ்வளவு மெனக்கெட்டிருக்கிறார்! 

சௌரியா வெஜிடேரியன். ஆனால் மாட்டிக்கொண்டு தப்பிக்க முடியாமல், உயிர்பிழைக்க விரும்பும் சமயத்தில் அவனுக்கு உணவாவது எது தெரியுமா? கரப்பான்பூச்சியும், காகமும் தான். எலியைக் கண்டு  பயந்து நடுங்கும் ஒருவன், பின்னர் அந்த எலியை என்ன செய்கிறான், ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் தவிப்பவன், தண்ணீருக்குக்காக எடுக்கும் முடிவுகள் என ஒவ்வொன்றும் ஷாக்கிங்.

உண்மையில் கதையில் வரும் நாயகனைப் போலத்தான் நாமும் இருக்கிறோம். சாதி வெறியர்கள், மத அரசியல் செய்பவர்கள், கார்ப்பரேட் கலாசாரம், போலியான வாழ்வு, குடும்ப நிர்ப்பந்தங்கள், என  பலப்பல காரணிகளில் சிக்குண்டு  எப்படித் தப்பிப்பது என விடை தேடியே உயிர் தொலைக்கிறோம். அந்த உணர்வுகளை நமக்கு கடத்தியதிலும், அச்சத்தை விதைத்ததிலும், அட்டகாசமான திரைக்கதை அமைத்ததிலும் வெற்றி பெறுகிறார் இயக்குநர் விக்ரமாதித்யா. 

trapped

அந்த நாயகனுக்கு உறவினர்கள், நண்பர்கள் யாருமே  மும்பையில் இல்லையா? நாயகன் மாட்டிக் கொண்டிருக்கும் நாட்களில் நாயகி என்னதான் செய்தார்? யாருமில்லாத அப்பார்ட்மெண்டில் திருமணம் செய்து கொள்ளப்போகும் காதலியுடன் 35 வது மாடியில் வசிக்க எந்தக் காதலனாவது முடிவெடுப்பானா என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு சரியான விடை இல்லை.  எனினும் அடர்த்தியான திரைக்கதை படத்தை நகர்த்திவிடுகிறது. 

ஒளிப்பதிவுக்கும், இசைக்கும் நாம் நன்றி சொல்லியே ஆக வேண்டும். குறிப்பாக இசையமைப்பாளர் அலோகானந்தா படத்துக்கு எது தேவையோ அதை மட்டும் பக்குவமாகச் செய்திருக்கிறார்.

“இந்தப் படத்தின் நாயகன் சௌர்யா நான் தான். 4 வருடங்களாக குழப்பமான மனநிலையில் மாட்டிக் கொண்டு தவித்தேன். அப்போது என் மனதில் எழுந்த கதையே இது. இப்போது அடுத்த படத்துக்கான வேலையில் மும்முரமாக இருக்கிறேன். எனக்கு நானே நன்றி சொல்லிக் கொள்ள வேண்டிய நேரம் இது!'' என்று தன் வாழ்க்கையோடு பொருத்திப் பார்த்து சொல்கிறார் அசத்தல் இயக்குநர் விக்ரமாதித்யா. 

 'தகுதியானது தப்பி பிழைக்கும்'  எனச் சொல்வார்கள். ஒரு வெள்ளிக்கிழமைக்கு சராசரியாக நாடு முழுவதும் பத்து திரைப்படங்கள் வெளியாகின்றன. டிராப்டு நிச்சயம் 'பிழைக்கும்'!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்