ஒரு அறைக்குள் 8 பேர்... ஒரு மணிநேர சவால்! - தாயம் படம் எப்படி

Dhayam review

தமிழ் சினிமாவில் எப்போதாவது சில எக்ஸ்ப்ரிமென்டல் படங்கள் வரும். அந்த படம் வெற்றி பெற்றாலோ அல்லது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றாலோ அதே போன்ற படங்கள் வரத் தொடங்கும். அந்த மாதிரியான ஒரு சோதனை முயற்சிதான் ‘தாயம்’. ‘ஒரே அறைக்குள் எடுக்கப்பட்ட வித்தியாசமான படைப்பு, தாயம்’ -  இப்படி வேறு மார்க்கெட்டிங் செய்கிறார்கள் படத்திற்கு. உண்மையில் இது வித்தியாசமான படம் தானா..?   தாயம் ‘விழுந்தி’ருக்கிறதா?  

ட்ரிப்பிள் எஃப் என்ற கம்பெனியின் சிஇஓ பதவிக்காக மூன்று பெண்கள், ஐந்து ஆண்கள் இன்டர்வியூ வருகிறார்கள். அவர்களை ஓர் அறைக்குள் அடைத்து வைத்து, ஒரு மணி நேரம் கழித்து உங்களில் யார் உயிரோடு இருக்கிறீர்களோ அல்லது எத்தனை பேர் உயிரோடு இருக்கிறீர்களோ அவர்கள்தான் இந்த கம்பெனியில் சிஇஓ என்று சொன்னதோடு, இந்த அறையில், முன்னாள் சிஇஓவின் ஆவியும் இருக்கிறது என்று சொல்கிறார்கள்.  தாயம் போல் ஒற்றை ஆளாய் யார் இறுதிவரை உயிரோடு இருக்கிறார் என்பதுதான் ‘தாயம்’ படத்தின் கதை. 

‘எக்ஸாம்’ என்கிற ஆங்கிலப்படத்தின் சாயலில் இந்த படத்தை இயக்கியிருக்கிறார், கண்ணன் ரங்கசாமி. ‘படிக்காதவன்’ படத்தில் ‘எப்போவாது வித்தவுட்னா பரவாயில்லை, எப்பவுமே வித்தவுட்னா எப்படி...’ என்று விவேக், தனுஷிடம் கேட்பார். அப்படி இயக்குநர் கண்ணன் ரங்கசாமியிடம், ‘படத்தில் ட்விஸ்ட் இருந்தால் ஓகே, படமே ட்விஸ்ட்டா இருந்தா எப்படி...’ என்று கேட்க வைக்கும் அளவுக்கு படத்தின் க்ளைமாக்ஸ் வரை ட்விஸ்ட், ட்விஸ்ட், ட்விஸ்ட் தான். அவையெல்லாம் சுவாரஸ்யமாக இருக்கிறதா என்று கேட்டால்,  பதில் இல்லை பாஸ். அதுவும் ஒவ்வொரு ட்விஸ்ட் வருவதற்கு முன்பும் நடிகர்கள் சிரிப்பது ஒருவேளை நம்மைப் பார்த்துதானோ என்று தோன்றுகிறது.  ஒரு கட்டத்தில் அவர்கள் சிரிப்பது, அபாய ஒலியாகவே மாறிவிடுகிறது.

படம் ஒரு ஜானரில் மட்டும் ட்ராவல் பண்ணவில்லை. ஹாரர், த்ரில்லர், சைக்கலாஜிகல் த்ரில்லர் என பல தடங்களில் பயணிக்கிறது. கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் படத்தின் மூலம் அறிமுகமான சந்தோஷ் தான் இந்த படத்தின் ஹீரோ. இவர் முன்பு நடித்த படத்தின் டைட்டிலில் உள்ள நான்கில் மூன்றில் கோட்டை விட்டிருக்கிறார் என்பது வேதனை. முக்கியமான எட்டு கதாபாத்திரங்களில் ஆறு கதாபாத்திரங்கள் புதுமுகம் என்பதால் அவர்களின் நடிப்பின் மூலம் நம் மனதில் இடம் பிடித்து விடவேண்டும் என்று கொஞ்சம் ஓவராகவே நடித்திருக்கிறார்கள். 

படத்தின் எடிட்டர் சுதர்சனுக்கு நமது நன்றிகள்!  படத்தை இரண்டு மணி நேரத்திற்குள் சுருக்கியதற்கு. ஒரே அறைக்குள் படம் நகர்வதாலும், படத்தில் காட்சிகள் சுவாரஸ்யமாக இல்லாததாலும் அந்த இரண்டு மணிநேரமும்... சோதனையாகத்தான் கடக்கிறது.  புதுமையான கதைக்களத்தில் நன்றாக விளையாடியிருக்கலாம். படத்தின் பின்னணி இசை தொடங்கும்போதெல்லாம்  ம்யூட் பட்டனைத் தேடுகிறது மனம். ஒளிப்பதிவு ஓரளவுக்கு பரவாயில்லை.  

இந்த புது முயற்சிக்காக இயக்குநருக்கு ஒரு கைத்தட்டல் மட்டும்தான் கொடுக்க முடிகிறது! பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் பாஸ்!

செவ்வாயில் கண்டுபிடிக்கப்பட்ட ஜீவராசி? - லைஃப் படம் எப்படி? #Life

Do you like the story?

Please Appreciate the Author by clapping!