ரஜினி - கமல் ரசிகர்கள் சண்டை எடுபடுகிறதா? - எங்கிட்ட மோதாதே படம் எப்படி?

ரஜினி - கமல் ரசிகர் மன்றத்தை சேர்ந்த இருவரும், லோக்கல் அரசியல்வாதியும் மாறி மாறி 'எங்கிட்ட மோதாதே' எனச் சொல்லி கடைசியில் யார் ஜெயிக்கிறார்கள் என சொல்லும் படம் தான் எங்கிட்ட மோதாதே.

ரஜினி ரசிகர் நட்ராஜ் - கமல் ரசிகர் ராஜாஜி இருவரும் நண்பர்கள். வெளியூரில் கட்அவுட் வரையும் இவர்களிடம், 'இனி நீங்களே தனியா தொழில் பண்ணுங்கடா' என முதலாளி சொல்ல, நட்ராஜின் ஊரான திருநெல்வேலிக்கு வருகிறார்கள். ராஜாஜி தன்னுடன் தன் அம்மா, தங்கையையும் அழைத்து வருகிறார். ரசிகர்கள் கட்அவுட்டைப் பார்த்து வெறியாகி சண்டை போட்டுக் கொள்வதும், தியேட்டரை துவம்சம் செய்வதும் தொடர்கதையாக இருக்க அதற்கு முடிவுகட்ட நினைக்கிறார் ராதாரவியிடம் வேலை செய்யும் விஜய்முருகன். இனிமேல் யாரும் கட்அவுட் வரைந்து தரக்கூடாது என வழக்கமாக வரைபவர்கள் அனைவருக்கும் உத்தரவிடுகிறார். அதை மீறி ராஜாஜி கமலின் கட்அவுட்டை வரைந்து தர, ஆரம்பிக்கிறது பிரச்னை. அப்படித் துவங்கும் அடிதடி பின் எப்படி எல்லாம் டெவலப் ஆகிறது, எப்படி முடிகிறது என்பதுதான் கதை.

எங்கிட்ட மோதாதே

 

படம் முடித்து வெளியே வந்ததும் இது ஆர்ட் பிலிம் கேட்டகரியில் சேர்க்கணுமா என்கிற குழப்பம் வந்தது. அந்த அளவுக்கு நட்ராஜும், ராஜாஜியும் சேர்ந்தோ, தனித்தனியாகவோ வரைந்து கொண்டே பாதிப்படத்தை நகர்த்திவிடுகிறார்கள். ரஜினி - கமல் ரசிகர்கள், ஒவ்வொரு படத்தையும் தியேட்டரில் மட்டும் வந்து கொண்டாடிய தமிழ்ராக்கர்ஸ் தொல்லைகள் அற்ற பீரியட், கட்அவுட் வரையும் இருவர் என பிடித்த ப்ளாட் புகுந்து விளையாட செமத்தியான ஏரியா. ஆனாலும், வழக்கமான ஒரு பாணியில் திரைக்கதையை அமைத்து, சூப்பரும் இல்லாமல் மிக மோசமும் இல்லாமல் பத்தோடு  பதினொன்றாவது சினிமாவாகக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ராமு செல்லப்பா. 

Enkitta Mothathe

நட்ராஜ், ராஜாஜி, மெனக்கெட்டு கருப்பு நிற  மேக் - அப்புடன் வரும் சஞ்சிதா ஷெட்டி, பார்வதி நாயர் என யாரின் நடிப்பும் பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி இல்லை. 'ஃப்ரெஷ்ஷா இருக்கு ஜி' முருகானந்தம் சொல்லும் சில கலாய்கள் மட்டும் அவ்வப்போது ஆறுதல் அளிக்கிறது. விஜய் முருகனின் அலட்டல் இல்லாத வில்லத்தனம் நன்று. சில காட்சிகள் மட்டும் வந்தாலும் ராதாரவி கவர்கிறார். 

ரஜினி

படத்தின் பெரிய ப்ளஸ், கலை இயக்கம். கதை நடக்கும் காலகட்டம், அதற்கு ஏற்ப வெளியான ரஜினி கமல் படங்கள், அதை வைத்து கட்அவுட் பின்னணியை அமைத்த டீட்டெய்லிங், அசத்தலான கட்அவுட் ஓவியங்கள் என படத்தில் ஆறுச்சாமியின் கலை இயக்கம் குறிப்பிட்டு பாராட்டப்பட வேண்டியது. மனிதன் - நாயகன் இரண்டு படமும் ஒரே திரையரங்கின் இரண்டு ஸ்க்ரீன்களில் திரையிடப்பட்டு, எதிர் எதிரே ரஜினி - கமல் கட்அவுட் இருந்தால், அந்த இடத்தின் கொண்டாட்டமும், ரசிகர்களின் ரகளையும் எப்படி இருக்குமோ அதை முடிந்த அளவு அப்படியே கொண்டு வந்திருக்கிறார்கள்.

நடராஜ் சங்கரனின் பாடல்கள் எல்லாம் பிலோ ஆவரேஜ் ரகம்தான். படமே விறுவிறுப்பாக மாறினாலும் தலையில் தட்டி "எதுக்கு இவ்வளோ வேகம், வூட்ல சொல்லிட்டு வந்துட்டியா?" எனக் கேட்டு ஸ்பீட் பிரேக்கரைப் போடுகிறது. பின்னணி இசை சில இடங்களில் இடைஞ்சலாகத்தான் ஒலிக்கிறது. வலிமையான ப்ளாட் ஒன்றைக் கையில் எடுத்துவிட்டு, அதை நம்பாமல், நண்பனின் தங்கையைக் காதலித்ததை வைத்து சண்டைபிடிப்பது, ஆழமற்ற அரசியல் போட்டி இதை எல்லாம் வைத்து வழக்கமான ஒரு க்ளைமாக்ஸை வைத்து படத்தை முடித்திருக்கிறார் இயக்குநர். அதுவும் விஜய்முருகனை, ஃபெரேரா மூளை சலவை செய்யும் இடம்கூட மிக சாதாரணமாக இருக்கிறது.

கடைசி 20 நிமிடங்கள் திரைக்கதை தந்த பரபரப்பைப், படமாக்குவதில் கோட்டைவிட்டிருக்கிறார்கள். எடுத்துக்கொண்ட களத்தைப் போலவே, படத்தையும் வித்தியாசமாக எடுத்திருந்தால் கவனிக்கப்பட்டிருக்கும் இந்த ‘ஃபேன் வார்’.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!