Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'வெள்ளந்தி' ராஜகுமாரன், 'காரியக்கார' பரத், அந்த ஸ்கூல் சம்பவம்..! - 'கடுகு' விமர்சனம்

திரையுலகில் 20வது வருடத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன், இயக்குநராகக் கொடுத்திருக்கும் நான்காவது படம், கடுகு. 

கடுகு

புலிவேஷம் போடுபவர் ராஜகுமாரன். அதனாலேயே பாண்டி என்ற பெயரை புலிப்பாண்டி என்று வைத்துக் கொண்டிருக்கிறார். இன்ஸ்பெக்டராகப் பணிபுரியும் ஏ.வெங்கடேஷுக்கு தரங்கம்பாடிக்கு மாற்றல் வர, அவருக்குத் துணையாகச் சென்று சமையல் உட்பட உதவிகள் செய்பவராகச் செல்கிறார் ராஜகுமாரன். தரங்கம்பாடியில் சேர்மனாக இருக்கும் நம்பி (பரத்). தரங்கம்பாடி ஸ்டேஷனில் எடுபிடியாக இருக்கும் ‘பெட்டி கேஸ்’ அனிருத் (பாரத் சீனி).  ஸ்கூல் டீச்சர் எபி (ராதிகா ப்ரசீதா) , பரத் சீனுவின் முக்கோணக் காதலி சுபிக்‌ஷா. இவர்களைச் சுற்றி நிகழும் ஒரு சம்பவம். அதன் விளைவுகள் இவற்றை மனித உணர்வுகளோடும், நியாய, அநியாயங்களோடும் பொருத்தி ஒரு திரைப்படமாக்கிக் கொடுத்திருக்கிறார் விஜய் மில்டன். 

பரபர ஆக்‌ஷன் ஏதுமின்றி, ஒரு ஃபீல்குட் மூவியைப் பார்க்கப்போகிறோம் என்ற உணர்வை ஆரம்பத்திலேயே தந்துவிடுகிறது கடுகு. கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு கதாபாத்திரங்களை, அவர்களின் தன்மையை சிறுசிறு காட்சிகளோடு அறிமுகப்படுத்துவது அழகு.   

ராஜகுமாரனுக்கு இது சொல்லிக்கொள்ளும்படியான படம். அந்தக் கதாபாத்திரத்துக்கு வேறு யாரையுமே நினைத்துப் பார்க்கமுடியவில்லை என்பதுதான், அவரது வெற்றி. ‘வெள்ளந்தி’ என்பதற்கான அடையாளமாகவே வந்து போகிறார். புலிவேஷம் போட்டு ஆடும்போது அதற்குண்டான நியாயம் கற்பித்திருக்கிறார். தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் உதவுவது, பாரத் சீனியை, ‘அனிருத் சார்.. அனிருத் சார்’ என்றழைப்பது, இன்ஸ்பெக்டர் முன் வளைந்து நெளிந்து தனக்குண்டான வேலையைச் செய்து வருவது, ‘தீபிகா படுகோனை’ப் பார்க்க ஏங்குவது, யாரென்று தெரிந்ததும் மருகுவது என்று கம்ப்ளீட் பேக்கேஜாகவே நடித்திருக்கிறார். ஆனால்   ரொம்பவும் ஸ்லோவாக இவர் பேசும் மாடுலேஷன், சில இடங்களில் உருக்கமாகவும் சில இடங்களில் எடுபடாமலும் இருக்கிறது. 

பரத் கடுகு

இப்படி ஒரு கதாபாத்திரத்தை ஏற்றுக்கொண்டு நடித்ததற்கு பரத்-துக்கு சபாஷ். இன்றைய சமூகத்தில் பலரும் பரத் நிலையில் இருப்பதுதான் நிதர்சனம். இவர் கேரக்டருக்கு ‘நம்பி’ என்று பெயர் வைத்தது டைரக்டர் டச். நாம் அவரை பரத்-தாகப் பார்ப்பதாலேயே சில இடங்களில் அவர் குமுறவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால் நிஜத்தில் அப்படி நடப்பதில்லை என்பதைப் பிரதிபலித்திருக்கிறது அவரது பாத்திரப்படைப்பு. அனிருத்-தாக நடிக்கும் பாரத் சீனு நடிப்பிலும், உடல்மொழியிலும் கவனிக்க வைக்கிறார். பாரத்சீனுவுக்கும், ராஜகுமாரனுக்குமான ஃபேஸ்புக் மொமண்ட்ஸ்.. படத்தின் ஜாலி போர்ஷனை கச்சிதமாகச் செய்கிறது.      

பாரத் சீனி

ராதிகா ப்ரசீதா வரும் இடங்களிலும் நடிப்புக்கான ஸ்கோப். சிறப்பாகவே செய்திருகிறார். கலர்ஃபுல் போர்ஷனுக்காக வரும் சுபிக்‌ஷாவும் ஓகே. ஆனால் இவர்களை அசால்டாகத் தூக்கிச் சாப்பிடுகிறார் அந்த சின்னப்பெண் கீர்த்தி. அந்த சம்பவம் நடக்கும் முன் துறுதுறுவென்று திரிவதும், அதற்குப்பின் முடங்குவதும் சபாஷ் பொண்ணே! 

இயக்குநர் விஜய் மில்டனை விட, வசனகர்த்தா  விஜய் மில்டனும், ஒளிப்பதிவாளர் விஜய் மில்டனும் எக்ஸ்ட்ரா லைக்ஸ் அள்ளுகிறார்கள். மந்திரி வரும் விழாவுக்கு முன்பான காட்சியில், பரத்தில் ஆரம்பிக்கும் கேமரா, வழிநெடுக பயணித்து,  சுபிக்‌ஷாவின் நண்பிகள் கூட்டத்துக்குள் புகும்போது, அந்தக் கூட்டத்தில் இருந்து பாரத் சீனு வெளிவருவது என்று செம ஐடியா செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.  ‘ஒரு ரௌடி கல்வித்தந்தை ஆகலாம், ஆனா பாலியல் தொழிலாளி திருந்தி வாழமுடியாது’,  ’இதெல்லாம் தப்பில்லன்னா வேற எதுதான் தப்பும்பீங்க?’ என்று எளிமையான வசனங்கள்.   ராதிகா ப்ரசீதாவின் ஃப்ளாஷ்பேக்கும், அதைக் காட்சிப்படுத்திய விதமும் படத்தின் க்ளாஸ் காட்சி. அந்தக் காட்சியின் முடிவில், இயக்குநர் செய்திருக்கும் ஐடியாவுக்கு தியேட்டரில் கைதட்டல்கள் பறக்கின்றன.

ப்ரசீதா

இத்தனை ப்ளஸ்கள் இருக்கும் படம், எப்படியான உணர்வைத்தரவேண்டுமோ அதைத் தரத் தவறிவிட்டது. முன்பாதியில் காண்பித்த யதார்த்தம், கதாபாத்திரங்களை வைத்து இரண்டாம் பாதியில் சடுகுடு ஆடியிருக்க வேண்டாமா? திடீரென்று படம் எழுபதுகளுக்குப் பின்னால் போய்விட்டது. அந்த இடைவேளை ப்ளாக் -  ஸ்கூலில் அத்தனை பேர் காத்திருக்க மந்திரி செய்யும் காரியமெல்லாம் - பெரிய பூச்சுற்றல். அந்தக் காட்சி நம்பகத்தன்மை வாய்ந்ததாக, அழுத்தமாக அமைந்திருக்க வேண்டிய ஒன்று. படத்தின் பின்னணி இசை சோதிக்கிறது.  பாடல்களில் இன்னும் மெனக்கெட்டிருக்கலாம்.                                                                       

படத்தின் சோகம் ஓவர் டோஸாகிவிடுவதாலேயே, இடைவேளைக்குப் பின் நெளிய வேண்டியதாக இருக்கிறது.  ‘புலி வேஷம்’ போடுவதால் அத்தனை உடல்வலிமை வரும் சரி.. கொஞ்சம்கூட மனவலிமை வரவே வராதா? கடைசி வரைக்கும் அப்படிப் பாவப்பட்டவராகவேவா இருப்பார்? இவரை கன்னத்தில் அறைந்து அனுப்பிய சர்க்கிள் இன்ஸ்பெக்டரிடம், ராதிகா ப்ரசீதா செல்லத் துணியும்போதே வேண்டாமென்று தடுத்திருக்க மாட்டாரா? திருவிழா, நாயகி தாவணியோடு கோவிலுக்குள் சுற்றிக் கொண்டிருப்பது, ஊர்ப் பெரியவர்கள் என்று காட்சிகள் அந்தக்காலத்துக்கு போய்வருவது அலுப்பு.  அந்த க்ளைமேக்ஸ், படத்தின் முன்பாதியில் காட்டிய யதார்த்தங்களை கடாசிவிட்டு ‘சினிமாத்தனமாக’ துருத்தி நிற்கிறது. 

இரண்டு ஸ்டெப் இறங்கி சிக்ஸர் அடித்திருக்க வேண்டிய பந்தில் இரண்டு  ரன்களோடு சமாதானப்பட்டிருக்கிறார்கள். ஆனால், கன்னா பின்னா காட்சிகள், முகத்தைச் சுளிக்கும் வசனங்கள் ஏதுமில்லாத ஒரு நன் முயற்சிக்காகப் பாராட்டலாம். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

விகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது? விஜய்யிடம் என்ன பிடிக்கும்? - விஷால்