Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ISIS தீவிரவாதம், பெண் மனம், க்ளாஸிக் பார்வதி..! டேக் ஆஃப் படம் பார்க்கலாமா? #TakeOff

 

 

உலக அளவில் ரெஸ்க்யூ- ஆப்பரேசன் படங்கள் பல வெளிவந்துள்ளன. விமான நிலைய தீவிரவாதம், ஏதோ ஒரு இடத்தில் பிணைக்கைதிகள் ஆக்கப்பட்டு பின் அங்கிருந்து தப்பிப்பது என பலவகை.தேசப்பற்று படங்களைக் கடந்து, உண்மைச் சம்பவங்களை மையப்படுத்தி எடுக்கப்படும் ரெஸ்க்யூ-ஆப்பரேசன் படங்களும் அவ்வப்போது வெளிவரும். 2014ல் ஈராக்கில் இருந்து தப்பித்து வந்த 19 மலையாள செவிலியர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டு இருக்கும் படம் தான் டேக் ஆஃப்.  

Take off

அங்கமாலி டைரீஸ், டேக் ஆஃப் என கேரள சினிமா நிஜமாகவே வேறு லெவலில் பயணப்பட்டுக் கொண்டு இருக்கிறது.

அதிக சம்பளத்திற்காக ஈராக்கிற்கு செல்கிறது கேரளாவில் இருந்து ஒரு செவிலியர் குழு. வேலையா இல்லை குடும்பமா என கணவர் ஃபைசல் முரண்டு பிடிக்க, வீட்டுக் கடன் சூழ்நிலை காரணமாக , விவாகரத்து செய்துவிட்டு, ஈராக் செல்ல ஆயுத்தமாகிறாள் சமீரா (பார்வதி). தன்னுடன் பணியாற்றும் சாஹீதை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்கிறாள். பணத்திற்காக சென்று இருந்தாலும், ஈராக்கின் நிஜ நிலை அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. அங்கு இருக்கும் ஒரு கணவன் மனைவி மருத்துவர்கள், இவர்களுக்கு நண்பர்களாகின்றனர். டிக்ரிட்டில் இருக்கும்  மருத்துவமனையில் வேலை செய்கிறார்கள். முதல் கணவர் ஃபைசல், இனி தான் சமீராவின் மகனை பார்த்துக்கொள்ள முடியாது என சொல்லி, ஈராக் வந்து குழந்தையை சமிராவிடம் விட்டு செல்கிறார்.சமிராவின் எட்டு வயது மகனிடம் இருந்து இரண்டு விஷயங்களை சமீரா மறைக்க வேண்டும். சமீரா எல்லாவற்றையும் மகனிடம் சொல்வதற்காக, மோசூல் நகரத்தில் இருக்கும் வேறொரு முகாமிற்கு மருத்துவர்களுடன் செல்கிறார் சாஹீத்.

ஈராக்கில் தற்போதைய சூழல் போலவே அது ISIS தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்திய காலம்.சாஹீத் தீவிரவாத குழுக்களிடம் மாட்டிக்கொள்கிறார். மொசூல் நகரத்தை ISIS கைப்பற்றிவிட, ஈராக்கில் இருக்கும் இந்திய தூதரகத்தின் உதவியை நாடுகிறாள் சமீரா. நிலைமை இன்னும் மோசமாகிறது.டிக்ரிட்டில் கேரள பெண்கள் இருக்கும் மருத்துவமனையையும், ISIS தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகிறது.ஷாஹீதை, சமீரா உயிருடன் மீட்டாளா?. அனைவரும் உயிருடன் இந்தியா திரும்பினார்களா என்பதை சாமர்த்திய த்ரில்லராக எடுத்து இருக்கிறார் இயக்குனர்  மகேஷ் நாராயணன். எடிட்டரான மகேஷ், எழுதி இயக்கி இருக்கும் முதல் படம் இது.

படத்தின் ஈராக் காட்சிகள் முழுவதும் துபாயில் எடுக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. விஸ்வரூபம், தூங்காவனம் படங்களின் ஒளிப்பதிவாளர் ஷானு வர்கீஸ் ஒளிப்பதிவில் அந்தக் காட்சிகள் அனைத்துமே சிறப்பு.

மொசூலில் இருக்கும் தீவிரவாத தலைவன், காயம்பட்ட தீவிரவாதிக்கு மருத்துவம் பார்க்க சொல்ல, மறுத்துவிடுகிறார் ஈராக் மருத்துவர், " இஸ்லாம் தீவிரவாதம் செய்ய சொல்லவில்லை" என உரக்க சொல்வதால் கொல்லப்படுகிறார். யாஜிதி இன பெண்களை அடிமைகளாக நடத்தும் ISIS குழுக்களிடம் மாட்டிக்கொள்கிறாள் மருத்துவரின் மனைவி. யாஜிதி இன பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளை காட்டும் முதல் படம் இதுவாகத்தான் இருக்கும்.கேரளாவில் இருக்கும் இளைஞர்கள் எப்படி ISIS தீவிரவாதிகளாக மாற்றப்படுகிறாகள் என்பதையும் ஒரு காட்சியில் சொல்கிறார்கள்.

Take Off

இந்திய மக்கள் எங்கேனும் சிக்கிக்கொள்ளும் போது, அங்கு இருக்கும் இந்திய தூதரகங்கள் எப்படி செயல்படுகின்றன. இங்கு இருக்கும் இந்திய தூதரகம் அதை எப்படி கையாள்கிறது என்பது பற்றியும் அலசி இருக்கிறார்கள். உண்மைக்கு மிக அருகில் எடுக்க, உன்னைப்போல் ஒருவனில் முதல்வர் குரலாக, அப்போதைய முதல்வர் கருணாநிதியின் குரல் வருவது போல், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் குரலும், அப்போதைய முதல்வர் ஒம்மன் சாண்டியின் குரலும் வாய்ஸ் ஓவராக ஒலிக்கிறது.

" ஒரு பெண்ணிடம் எப்படி நடக்க வேண்டும் என இஸ்லாம் உனக்கு சொல்லித் தரவில்லையா", " நாங்கள் கடவுளின் குழந்தைகள் என பலர் சொல்கிறார்கள், ஆனால், உண்மை நிலை அதுவல்ல" , "யாஜிதினாலே இங்கு அடிமையாத்தான் நடத்தணும். ஆனால், என் மனைவி அப்படிப்பட்டவள் அல்ல", என பல ஷார்ப் வசனங்கள். " ரெண்டு மாசமா சம்பளம் வரல, இப்ப இவங்க உதவியுடன் கிளம்பிட்டா, காசுக்கு என்ன பண்றது?" என அவர்கள் கிளம்ப மறுக்கும் காட்சி, கேரளத்தின் உண்மை நிலையைக் காட்டுகிறது. 

ஈராக்கில் இருக்கும் இந்திய தூதராக ஃபகத் ஃபாசில், சமீராவின் இரண்டாவது கணவராக வரும் குன்சக்கோ போபன் என பலர் சிறப்பாக நடித்து இருந்தாலும், படத்தின் ஹீரோ பார்வதி தான். தன் சமீபத்திய படங்கள் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் பார்வதிக்கு, இது வேற லெவலில் தீனி போட்டு இருக்கும் படம். கருகலைக்க கணவர் ஷாஹித் சம்மதிக்காத போது அழுவதாகட்டும், இருக்கும் பிரச்னைகளைப் பற்றி துளியும் யோசிக்காமல் முதல் கணவர் குழந்தையை விட்டு செல்லும் போது அவள் பார்க்கும் பார்வை, கர்ப்பத்தை மறைக்க ஃபர்தா அணிவதாகட்டும், கணவர் ஷாஹீதைக் காப்பாற்ற இந்திய தூதரகத்தில் முறையிடுவது, தீவிரவாதிகளை எதிர்த்து பேசுவது என எல்லாமே டாப் கிளாஸ்.

' பூ' படத்தில் ஆரம்பித்த பார்வதியின் உடல்மொழி, ஒவ்வொரு படத்திலும் வேறுபட்டு நிற்கிறது. 2015ல் வெளியான என்னு நின்ட்டே மொய்தீன், சார்லி வரை பார்வதியின் நடிப்பு வளர்ந்துகொண்டே வருகிறது. இந்த வருடம், சில விருதுகளை பார்வதி தன் பெயரில் ரிசர்வ் செய்து வைத்துவிட்டார்.

சினிமா ரசிகர்கள், மிஸ் செய்யக்கூடாத ஒரு படம் ' டேக் ஆஃப்'. டோன்ட் மிஸ்!!!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்