Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பேய், கார், நயன்தாரா... எப்படி இருக்கிறது டோரா டூர்? - டோரா விமர்சனம்

ஆவி புகுந்த வீடு, ஆவி புகுந்த டி.வி, ஆவி புகுந்த ராகவா லாரன்ஸ் வரிசையில் இந்த முறை ஆவி புகுந்திருப்பது ஒரு காருக்குள். ஆவி புகுந்த கார் அசுர வேகத்தில் பறக்கிறதா இல்லையா?

டோரா நயன்தாரா

'வைரக்கொடி' தம்பிராமையாவின் மகள் 'பவளக்கொடி' நயன்தாரா. தன்னையும், தன் தந்தையையும் அவமானப்படுத்திய கால் டாக்ஸி உரிமையாளரான அத்தை முன்பு அவர்கள் போலவே பெரிய ட்ராவல் ஏஜென்சி நடத்திக் காட்டுவது பவளக்கொடியான நயன்தாராவின் லட்சியம். அந்த லட்சியத்தை காலண்டரில் குறித்துக் கொண்ட தம்பி ராமையா, இருக்கும் பணத்தைப் புரட்டிக்கொண்டு நயனோடு சேர்ந்து செகண்ட் ஹாண்ட் கார் வாங்கக் கிளம்புகிறார். அங்கு இருக்கும் ஆஸ்டின் கேம்ப்ரிட்ஜ் மாடல் காரை வாங்குகிறார்கள். அப்புறம்தான் தெரிகிறது.. காரை இவர்கள் வாங்கவில்லை, கார்தான் இவர்களை வாங்கியிருக்கிறது என்று. அது ஏன் என்பதுதான் கதை.

நயன்தாரா என்கிற ஒற்றை மனுஷியை நம்பித் தைரியமாகப் படத்தை ஆரம்பித்திருக்கிறார் அறிமுக இயக்குநர் தாஸ் ராமசாமி. ஒன் வுமன் ஷோவாக காஸ்ட்யூமில் வசீகரிக்கிறார். நடிப்பிலும் வெளுத்து வாங்குகிறார் நயன். தனுஷ், ஜிவிபி வரிசையில் நயனுக்கு மூச்சுவிட முடியாத முழுநீள வசனம், ‘அண்ணாமலை’ ரஜினி பாணியில் ‘உன் காலண்டர்ல குறிச்சு வெச்சுக்கோ’ சவால்கள், ‘அந்நியன்’ விக்ரம் பாணியில் மல்டிபிள் பெர்சனாலிடி பெர்ஃபார்மென்ஸுகள் என்று பின்னிப் பெடலெடுக்கிறார். ‘அவன மாதிரி தெருவுக்கு நாலு பேர் இருப்பான்மா, ஆனா உன்ன மிஞ்ச தென்னிந்தியாவிலேயே ஆள் கிடையாது’ என்று தம்பி ராமையா பஞ்ச் சொல்லும் அளவுக்கு நயனுக்குத்தான் படத்தில் முக்கியத்துவம்.  

டோரா

'கும்கி' படத்தில் ஆரம்பித்த மைண்ட் வாய்ஸ் காமெடியைத் துரதிர்ஷ்டவசமாக இந்தப் படத்திலும் தொடர்கிறார் தம்பி ராமையா. 'ஓவரா மொக்கை போடுகிறாரே' என்கிறது நம் மைண்ட் வாய்ஸ். சமயங்களில் தம்பி ராமையாவின் காமெடி டார்ச்சர் தாங்காமல், வேகமாக ஓடிவரும் 'டோரா' கார் முன்பு நாமே படுத்துவிடலாமா என்று தோன்றுகிறது. சவுண்டைக் குறைங்க சார்!

போலீஸ் ஆபீசராக ஹரீஷ் உத்தமன். இது நாயகிக்கு முக்கியத்துவமுள்ள படம் என்பதால் உத்தமனுக்கு அவ்வளவாக வேலையில்லை. வரும் கொஞ்சநேரமெல்லாம் முறைக்கிறார், நயன்தாராவைப் பெண் பார்க்க வரும் இடத்தில்கூட. இந்த மூவரைத் தவிர மற்ற கேரக்டர்களுக்குப் படத்தில் பெரிய முக்கியத்துவமில்லை. வடமாநிலக் கொள்ளைக்காரர்களாக வரும் வில்லன்கள், புதிதாகத் திருமணமான பெண்ணைக் கொல்லும் காட்சியில் மிரட்டுகிறார்கள். மற்ற காட்சிகளில் பானிபூரியோ பழைய பெட்ஷீட்டோ விற்கிறார்கள் (நிஜமாத்தான் பாஸ்!)

நாயின் ஆவி புகுந்த கார், அதன் கண்கள்தான் காரின் ஹெட்லைட், காதுகள்தான் ஹாரன், கால்கள்தான் சக்கரங்கள் என்ற உருவகம் சுவாரஸ்யம். ஒவ்வொரு கொலையின்போதும் பிரமாண்டமாய் நாயின் நிழல், வில்லன்களைக் கடித்துக்குதறுவதும் படத்தில் ஆங்காங்கே வரும் கிராஃபிக்ஸ் காட்சிகளும் அசத்துகின்றன. பிளாஷ்பேக் கதையில் சிறுமி மீதான பாலியல் வன்முறையைச் சொல்லியிருப்பது சமகாலத்தை நினைவூட்டுகிறது.

Nayanthara

ஆனால் இந்த விஷயங்களைத் தாண்டி படத்தில் ஏகப்பட்ட மைனஸ்கள். படமே இன்டர்வெல்லில் பழிவாங்கும் நாயின் நிழலில்தான் தொடங்குகிறது.அதற்கு முன்பு  தம்பிராமையாவின் டார்ச்சர் காமெடிகள், கால் டாக்ஸி முயற்சிகள், பெண் பார்க்கும் படலம் என்று முதல்பாதி ஏகத்துக்கும் சோதிக்கிறது. புது பிளாட்டில் புதுப்பெண் கொலையை ஹரீஷ் உத்தமன் விசாரிக்கும் காட்சிகள் மட்டும் கொஞ்சம் விறுவிறுப்பாக இருக்கின்றன. 

 ஸ்டார்ட் ஆனால் தான் ஆவியால் அந்தக் காரை இயக்க முடியும் என லாஜிக் வைத்ததும், அதை க்ளைமாக்ஸ் வரை தெளிவாக கொண்டு சென்றதும் சூப்பர். ஆனால், கொலையாளியைப் பிடிக்க, ரேடியேட்டர் மூடி, டயர் மார்க் என போலீஸ் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்க, நயன்தாராவுக்கு ஒரே போன் காலில் கிடைக்கும் அந்த சி.சி.டி.வி ஃபுட்டேஜ், அதன் மூலம் குற்றவாளியை தேடிப்போவது எல்லாம் லாஜிக் மீறல்கள். அதேபோல் இரண்டுபேரைக் கொல்வது என்று நயன் முடிவெடுத்தபிறகு அதை சைலன்டாகச் செய்யாமல்  ஹரீஷ் உத்தமனிடம் 'முடிஞ்சா தடுத்துப் பாருங்க' என்று ஏன் சவால் விடவேண்டும்?

விவேக் - மெர்வின் இசையில் 'எங்க போற டோரா' பாடல் ஓகே. ஆனால் பின்னணி இசை பல காட்சிகளுக்குப் பொருந்தாமல் பதற்றப்படுகிறது. தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு மூலம் படத்தின் திகிலைக் கூட்ட முடிந்தவரை முயற்சி செய்திருக்கிறார். காரின் நிழல் மூலம் அதற்குள் இருக்கும் ஆவி யாருடையது என சொன்ன ஐடியாவும், அந்த கிராஃபிக்ஸும் செம. அந்த நிழல் மூலமே சொன்னபின்னரும் அந்த சூனியக்காரி பாட்டி அதற்கு கோனார் நோட்ஸ் போடுவது கொட்டாவியை வரவழைக்கிறது. 

ஆரோ 3டி எஃபக்டில் சிரிக்கும் மந்திரவாதிப் பாட்டி, எலுமிச்சம் பழம், விபூதி என்று பழைய டெக்னிக்குகளைத் தவிர்த்திருக்கலாம். இப்போதெல்லாம் இதற்குப் பார்வையாளர்கள் பயப்படுவதில்லை என்பதை இனிவரும் இயக்குனர்களாவது புரிந்துகொள்ள வேண்டும். (எத்தனை பேய்ப்படங்கள் பார்த்தாச்சு!)

  ‘த கார்’, ‘பிள்ளைநிலா’ படங்களைப் போல காருக்குள் ஆவி. எல்லாம் ஓகேதான்.  ஆனால் சீரியல் பேய்களே கெத்து காட்டும்போது, சினிமா பேய், அதுவும் நல்லதுக்காக பழிவாங்கும் பேய் இன்னும் கொஞ்சம் பயமுறுத்திருக்க வேண்டாமா?  ஏராளமான ஸ்பீடு பிரேக்கர்களால் காரின் ஓட்டம், கொஞ்சம் தள்ளாட்டம்தான்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

விகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது? விஜய்யிடம் என்ன பிடிக்கும்? - விஷால்