ஹேய்...'இயக்குநர் தனுஷ்' சிம்ப்ளி சூப்பர்ப்! - 'ப. பாண்டி' விமர்சனம்!

Power Paandi Review

 'பவர்பாண்டி' என்ற 64 வயது துறுதுறு கிழவரின் வாழ்வும், தேடலும்தான் ‘ப.பாண்டி’ படத்தின் ப்ளாட். ஒரே மகன் பிரசன்னாவின் வீட்டில் வசித்துவருகிறார் ‘ரிட்டயர்டு’ ஸ்டண்ட் மாஸ்டர் ராஜ்கிரண். பேரக்குழந்தைகள்தான் அவர் உலகம். உடம்பில் அதே முறுக்கு. அடுத்தவர்களுக்கு உதவுவது, அநியாயங்களை தட்டிக்கேட்பது என்று இவர் செய்யும் சில செயல்களால் பிரசன்னாவுக்கு கடுப்பாக, அவ்வப்போது முகம்சுளிக்கிறார். ஒரு கட்டத்தில் தான் சுமையாகிவிடக்கூடாது என்ற எண்ணத்தில் கெத்தாக, தன் புல்லட்டில் பயணப்படுகிறார் ராஜ்கிரண். இலக்கில்லாமல் ஆரம்பிக்கும் பயணம்.. ஓர் இலக்கிற்கு ராஜ்கிரணைச் செலுத்துகிறது. அது எங்கே.. ஏன் என்பதை பின்பாதியில் சொல்லியிருக்கும் படம்.. ப.பாண்டி.       

நடிகர், பாடகர், ‘பொயட்டு' என்பதெல்லாம் எட்டடிதான்.. இது பதினாறு அடி என்கிறார் இயக்குநர் தனுஷ். முதல் படம் என்பது... வெறும் கணக்குக்குத்தான் போல. இளம் நடிகர். ஆனால், கையில் எடுத்திருக்கும் களம் அவ்வளவு மெச்சூரிட்டியான கான்செஃப்ட். ஸ்டண்ட் மாஸ்டர் ராஜ்கிரண் வாங்கிய ஷீல்டுகளில் ரஜினி படங்கள் ‘பாயும்புலி’ படம் ‘பாயும் சிறுத்தை’யாகவும், ‘தீ’யை ‘அக்னி’யாகவும் எனப் பல படங்களின் பெயர்களை மாற்றிப்போட்டு விஷூவல் ஆக்கியிருப்பதில் இருந்து தொடங்குகிறது தனுஷுன் டீட்டெயிலிங். நகரம், கிராமம், பயணம்… என ஒவ்வொரு இடங்களும், அந்தந்த இடங்களுக்கான யதார்த்த முகங்களைப் பதிவு செய்திருப்பது, படத்தின் காஸ்டிங், எமோஷனலான கதையைக் கொஞ்சமும் போர் அடிக்காமல் ரசிகர்களுக்குக் கொடுத்திருப்பது என ‘இயக்குநர் தனுஷ்’ முதல் படத்திலேயே ஜெயித்திருக்கிறார். 

Rajkiran

சில கதாபாத்திரங்களுக்கு வேறு யாருமே செட் ஆகமாட்டார்கள் என்று தோன்றுமே.. பவர் பாண்டிக்கு அப்படி ராஜ்கிரண். மிரட்டியிருக்கிறார் மனுஷன். மொத்த படத்தையும் ஒற்றை ஆளாகத் தாங்கி நின்ற வகையில், இந்தப் படம் அவரது கேரியரில் முக்கிய இடம் பிடிக்கும். குழந்தைகளோடு குழந்தையாக பேரன், பேத்தியுடன் கொஞ்சுவது, அநியாயங்களைக் கண்டு பொங்குவது, ஜிம் மாஸ்டர் வேலைக்குப் போய் அங்கிருப்பவர்களை டரியல் ஆக்குவது, ஒரு சினிமாவிற்கான ஸ்டண்ட் காட்சியை ஒரே டேக்கில் முடித்து அசத்துவது, ‘ஷ்யூர்’, ‘டோண்ட் டிரபுள் யுவர்செஃல்ப்’ என ஆங்கிலத்தில் பேசி அசத்துவது எனப் படம் தொடங்கிய சில நிமிடங்களுக்கு சூப்பர் சிங்கிள்களைத் தட்டுகிறார். செண்ட்ராயன் இவரை கிழபோல்ட் எனும்போது ராஜ்கிரணின் முதுகுகூட நடிக்கிறது! "பைட் மாஸ்டர்தான் ஆனால் ஒரு நாள் கூட என்னை அவர் அடிச்சதில்லை" என்கிற ஒற்றை வரி வசனம் பாண்டி தன் மகன் மீது காட்டிய பாசத்தை சொல்லிவிடுகிறது. பேரனைவிட பெரிய, மகனை விட சிறிய வயதில் இருக்கும் பக்கத்துவீட்டுப் பையனுடனான அவரது ஃப்ரெண்ட்ஷிப் அத்தியாயம் இயக்குநரின் பெயர் சொல்லும்!  

இடைவேளைக்கு முன் ஒருரகம் என்றால், இடைவேளைக்குப் பின்னும் விஸ்வரூப நடிப்பைக் கொட்டுகிறார் ராஜ்கிரண். ரேவதியை சந்திக்கும் காட்சிகளில் அன்பு பொங்கிவழிகிறது அவர் முகத்தில்.  அவரிடமிருந்து ரிப்ளை வராதபோது அவர் செய்யும் செயல்... க்யூட் கவிதை! ரேவதியிடம் அவர் கேட்கும் ‘நமக்குக் குடும்பம் முக்கியம். அவங்களுக்கு நாம முக்கியமா?’ படத்தின் அடிநாதத்தை நச்சென்று சொல்லிச் செல்கிறது. 

ஃபிளாஷ்பேக் காட்சியில் இளவயது பவர் பாண்டியாக நடித்திருக்கிறார் தனுஷ். படத்தில் தன் பங்கு இயக்குநராகவே இருக்கவேண்டும் என்பதில் தெளிவாக இருந்திருக்கிறார் தனுஷ்.  இது ராஜ்கிரணுக்கான படம் என்பதை உணர்ந்து அளவாக நடித்து அசத்தியிருக்கிறார். காதலி மடோனா செபாஸ்டியன் ஊரை விட்டுக் கிளம்பும்போது, ஒளிந்து நின்று பரிதவிப்புடன் பார்க்கும் அந்த ஒற்றைக் காட்சியில், காதலின் மொத்த உருவமாக திரண்டு நிற்கிறார். ‘பூந்தென்றல்’ கேரக்டரில் மடோனா வின்டேஜ் வெல்வெட் கேக்!

Revathi

’பூந்தென்றல்’ மடோனாதான் ரேவதி. தன்னைத் தேடிவந்த பவர் பாண்டியை எப்படி எதிர்கொள்வது என்பதில் இருக்கும் யதார்த்தத்தை கேஷூவலாகக் கடந்துவிடுகிறார். கைபிடித்து சாலைகடந்தபின், உணர்வெழுச்சியில் நிற்கும் ராஜ்கிரணை ரேவதி பார்த்து ஒரு நடிப்பை வெளிப்படுத்துவார்.. வாவ்! புதுமுக நடிகைகள் கற்றுக்கொள்ளவேண்டிய நடிப்பு அது. பவர் பாண்டி ‘இன்னும் நான் உன் மனசுல இருக்கேனா?’ எனக் கேட்கும்போது, ஏற்கவும் முடியாமல், நிராகரிக்கவும் முடியாமல் தவிப்பது... யதார்த்த நடிப்பு. ’20 வயசானா என்ன 60 வயசானா என்ன… துணை துணைதான்’ எனப் பெற்ற மகளே, ரேவதியின் காதலை ஊக்குவிப்பதைக் கேட்ட சந்தோஷத்தில், சின்ன டான்ஸ் மொமெண்ட் கொடுக்கிறார், மொத்த கதைக்குமான ஒரு கச்சிதக் காட்சி இது. ரேவதியின் மகளாக ஓரிரு காட்சிகள்தான். ஆனாலும், அக்மார்க் முத்திரை பதிக்கிறார் டிடி.

பவர் பாண்டி மகனாக, பிரசன்னா உடம்பிலும் நடிப்பிலும் பக்கா ஃபிட். பக்கத்துவீட்டுக்காரர்கள்  புகார் சொல்லும்போது அப்பாவைப் பார்க்கும் பார்வை, விரக்தியில் சாவியைத் தூக்கி எறிவது, அப்பாவிடம் சம்பிரதாயத்திற்காக ‘ஸாரி’ சொல்வது,  மனைவி சாயாசிங் மடியில் விழுந்து அழுவது, அம்மாவின் அழைப்பை நிராகரிக்கும் சக ஊழியரிடம் எரிந்து விழுவது… என முக்கியமான பல இடங்களில் மனதில் பதிகிறார். ராஜ்கிரண் கடிதத்தைப் படிக்கும்போது அவரது முகத்தில் ஏற்படும் நடுக்கம் அத்தனை நேர்த்தி. சாயாசிங், பேரக்குழந்தைகள் என்று நடிப்பில் எவருமே குறைவைக்கவில்லை.

Power Pandi

பாடல்களிலும் பின்னணி இசையிலும்.. ஷான் ரோல்டன் கலக்கியிருக்கிறார். ராஜ்கிரணை வீட்டில் விட்டுவிட்டு ஆஃபீஸுக்குத் திரும்பச் செல்லும் காட்சியின் மிருதங்க இசைப்பின்னணி ஒரு சோறுபதம். கபடி விளையாட்டின்போது பின்னணியில் ஒலிக்கும் பாடலும், ‘ஒரு சூரக்காத்து’ பாடலும்.. ரசிக்க வைக்கின்றன.   வேல்ராஜின் ஒளிப்பதிவில் வீட்டு அறைகளின் அழகும், சாலைகளின் அழகும் தனித்தனி கோணங்களில் கவர்கின்றன. அந்த ஃப்ளாஷ்பேக் போர்ஷன் வருவதும் தெரியாமல், போவதும் தெரியாமல் கதையோடு ஒட்டி வருவதில் ஜி.கே. பிரசன்னாவின் எடிட்டிங்கிற்கு முக்கியப் பங்கு இருந்திருக்கும். 

‘வேலை வரும் போகும்..  வெட்டியா இருக்கிறதுதான் நிரந்தரம்’,  ‘ஏன் வெளியே நிற்கிற.. குடைக்குள்ள வா / நீ ஏன் குடைக்குள்ள நிற்கிற வெளியே வா’, ‘வயசுதான் வேற.. துணை துணைதான்’ என படத்தில் இடம்பெறும் அத்தனை வசனங்களும், அவரவர் கதாபாத்திரத்தோடு கச்சிதமாகப் பொருந்துகிறது. 

அப்பா, அம்மா, மனைவி, குழந்தைகள் சகிதமாகப் படம் பார்க்க வரும் அனைவருக்கும் ‘நாம சரியாதான் இருக்கோம்’ என்ற சந்தோஷத்தைத் தரலாம் அல்லது இனம்புரிதாத ஒரு குற்ற உணர்ச்சியைக்கூட விதைக்கலாம். ஏனெனில், முதியவர்கள் மனநிலைக்கு நாம் கொடுக்கும் இடம் என்ன என்பது படம் கேட்கும் கேள்வி. வெறும் கேள்வியாக இல்லாமல், பல காட்சிகளின் வழியே இந்தக் கேள்வியை நம் மனதில் கடத்தியிருக்கும் இயக்குநர் தனுஷுக்கு வாழ்த்துக்கள்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!