பாகுபலி-1 Vs பாகுபலி-2.... எது பெஸ்ட்? - பாகுபலி 2 விமர்சனம் #Baahubali2Mania

முன்குறிப்பு: படத்தின் சஸ்பென்ஸ் கலைக்கும் விவரங்கள் எதுவும் விகடன் விமர்சனத்தில் இடம் பெறாது. எனவே, தைரியமாக விமர்சனம் படிக்கலாம்!

பாகுபலி... சூப்பர்ப் சினிமா. அப்போ, பாகுபலி-2 எப்படி இருக்க வேண்டும்..? அதுவும் இரண்டு வருட எதிர்பார்ப்புக்குப் பின் படம் வெளியாகும்போது, எப்படி இருக்க வேண்டும்!? ‘எப்படியெல்லாம் இருக்க வேண்டும்?’ என்று நீங்கள் நினைத்த மாதிரியும், அதற்கு மேலுமாகக் கவர்கிறது படம். ஹாட்ஸ் ஆஃப் ராஜமெளலி அண்ட் டீம்! 

வழக்கமாக இது கதை, இதிது இப்படி இப்படி இருந்தது என்று சொல்வதை விட, பாகுபலி-2-வைக் கொஞ்சம் வேறுவிதமாக அலசுவோம்.

முதல் பாகம் Vs இரண்டாம் பாகம்!

 

பாகுபலி 2

முதல் பாகத்திற்கு தமிழில் இந்த அளவு எதிர்பார்ப்பு நிச்சயம் இருக்கவில்லை. அக்கட தேசத்தில் அசால்ட் காட்டும் எஸ்.எஸ்.ராஜமௌலியை அதிகம் அறியாதவர்கள் ‘ஈய வெச்சே அப்படி ஒரு படம் குடுத்தவர்’ என்ற ஒரே ஒரு அடையாளத்தோடுதான் அணுகினார்கள். ஆனால் படத்தின் ட்ரீட்மென்ட் தந்த பிரமிப்பு ரசிகர்களை ஆச்சர்யத்தில் அள்ளியது. படத்தையும், ராஜமௌலியையும் கொண்டாடினார்கள். முதல் பாகத்தின் க்ளைமாக்ஸ் ‘அச்சச்சோ... பாகுபலி சாகறானா.. அப்பறம்?’ என்று பதற்றப்பட வைத்தது.  

இரண்டாம் பாகம், அகில உலகத்துக்குமான எதிர்பார்ப்பைக் கொண்டிருந்தது. ப்ரமோஷன், மார்க்கெட்டிங் என்று எல்லாவிதத்திலும் எல்லா தரப்பினரையும் மனதில் வைத்து இறங்கினார்கள் படக்குழுவினர். இயக்குநரே எதிர்பார்க்காத வண்ணம் #WhyKattappaKilledBaahubali ட்ரெண்டிங் ஆனது. பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என்று மூன்று அம்புகளை, ஒரே வில்லில் பூட்டி வைத்து சக்ஸஸைக் குறிவைத்து இறங்கினர். ‘அதெப்படி ஒன்றுக்கு மேற்பட்ட அம்புகள் ஒரே வில்லில்?’ என்று கேட்பவர்களுக்கு.. இரண்டாம் பாகத்தில் பிரபாஸ் பதில் சொல்லியிருக்கார் பாஸ்!

அமரேந்திர பாகுபலி Vs மகேந்திர பாகுபலி

பிரபாஸ்

இரண்டுமே பிரபாஸ்தான். அப்பா, மகன். ரிவர்ஸாக முதலில் மகன், இரண்டாம் பாகம் அப்பா என்று  ஒரு சுவாரஸ்யம் கூட்டியிருப்பார் எஸ்.எஸ்.ராஜமௌலி. முதல்பாகத்தில் முழுவதும் மகன், மகேந்திர பாகுபலிதான். இந்த இரண்டாம் பாகத்தில், கட்டப்பா ஃப்ளாஷ்பேக் சொல்வதால் முழுக்க முழுக்க அப்பா அமரேந்திர பாகுபலியாக அள்ளுகிறார் ப்ரபாஸ். அதுவும் அந்த அறிமுகக் காட்சி... ஆஸம் கற்பனை! புகழும் பெருமையும் வரும்போதும், அவை இல்லாதபோதும் எப்போதுமே சலனமற்று இருக்கும் ஜென் முக பாவத்தை அருமையாகக் காட்டுகிறார் பிரபாஸ். முறுக்கேறிய அவர் உடலமைப்பு நம்புகிறபடியே இருக்கிறது. கதைப்படி சில காட்சிகளில் அடக்கி வாசிக்க வேண்டியிருக்கும்போதும் நடிப்பில் வெளுத்து வாங்குகிறார். க்ளைமாக்ஸில் பல்வாள்தேவன் ராணா டகுபதியுடன் மோதும் காட்சிகளில் வலி, வெறி, வீரம் என்று சகல ஃபீலிங்ஸிலும் வெளுத்துக் கட்டுகிறார் பிரபாஸ். அனுஷ்காவை அத்தனை காதலோடு பார்ப்பதும் பிரபாஸ்தான், அம்மாவாகப் பாசத்துடன் பார்ப்பதும் பிரபாஸ்தான் என்பதை படம் முடிந்தபிறகுதான் உணரமுடிகிறது. அப்படி வித்தியாசம் காட்டி நடித்திருக்கிறார்.

அனுஷ்கா Vs தமன்னா

அனுஷ்கா

முதல் பாகம் முழுவதும் தமன்னா என்றால் இரண்டாம் பாகம் அனுஷ்காவுக்கானது. ‘நான் சீனியராக்கும்’ என்று நடிப்பிலும் அழகிலும் கில்லியடித்திருக்கிறார் அழகி. படத்தில் ராஜமாதா சிவகாமியைக் கேள்வி கேட்கும் ஒரே கேரக்டரும் இவரே. அதை நம்பும்விதத்தில் கம்பீரம் காட்டியிருக்கிறார் அனுஷ்கா. அதே சமயம் கண்களில் காதல் காட்டுவதில் குறைவைக்கவில்லை. தமன்னாவுக்கு இதில் கெஸ்ட் ரோல்தான்.      

 

கட்டப்பா Vs பிங்களத்தேவன்

kattappa

சத்யராஜும் நாசரும். அனுபவ நடிப்பு என்பதற்கு லைவ் உதாரணங்களாக நடித்துத் தள்ளியிருக்கிறார்கள் இருவருமே. கிட்டத்தட்ட படத்தைத் தோள்மாற்றித் தாங்கிக் கொள்பவராக படம் முழுவதும் வியாபித்திருக்கிறார் சத்யராஜ். ஆரம்ப காட்சியில் நாசருக்கும், சத்யராஜுக்குமான வசனமோதல் காட்சி ஒன்றுண்டு. மதன்கார்க்கி வசனம். நாசரிடம் அவரை ஏன் மன்னனாக்கவில்லை என்பதற்கு ஒரு காரணம் சொல்வார் சத்யராஜ்.  அப்ளாஸ் அள்ளுகிறது. அந்தக் காட்சி முடிந்து சத்யராஜ் வெளியேற முற்பட, ‘ஒட்டுக்கேட்டாயா?’ என்பார் நாசர், அதற்கன பதிலும்தான்!      

வெறி, துரோகம், சூழ்ச்சி எல்லாமுமாய் நாசர் வலம்வர, அதற்கு நேரெதிராக விசுவாசத்தின் மொத்த உருவமாய் வலம்வருகிறார் சத்யராஜ். இந்த இரண்டு கேரக்டர்களுக்கும் இவர்களை விடுத்து ஒருவரை நினைக்க முடியவில்லை. அப்புறம் ஒருவிஷயம்; கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் என்பது இருக்கட்டும், கட்டப்பா ஏன் பிங்களத்தேவனைக் கொல்லவில்லை?’

ராஜமாதா ரம்யாகிருஷ்ணன்! 

Ramya krishnan

படத்தின் அல்டிமேட் கதாபாத்திரமும், நடிப்பும் இவருடையதுதான். இவர் கட்டளையே சாசனம் என்றானபின், அந்த கம்பீரம் நடிப்பில் இருக்க வேண்டுமல்லவா? அது தேவைக்கு அதிகமாகவே இருக்கிறது! அவரது குரலும் பெரிய ப்ளஸ். பாசத்துக்கும், ஆட்சிக்குமிடையே அவர் மனம் அலைபாயும்போது முகமும் அதற்கேற்ப பாவங்களை வெளிப்படுத்துகிறது.   

சரி, இந்தப் படத்தை ஏன் பார்க்கவேண்டும்?  

இந்தியத் திரையுலகின் பெருமைமிகு படைப்புகளில் ஒன்றாக இப்படம் நிச்சயம் இடம்பிடிக்கும். பழகிய கதையாக இருந்தாலும், அதன் ஒவ்வொரு நிமிடங்களிலும் ஒரு உணர்வைக் கடத்துவதும், கிராபிக்ஸ் கற்பனைகளில் அவ்வளவு சுவாரஸ்யம் சேர்த்திருப்பதுமாக... ஆஸம்!   

Dot ஆரம்ப காட்சியில் ரம்யாகிருஷ்ணன் அடிதப்பாமல் நடக்க வேண்டும். ஆனால் யானை ஒன்றுக்கு மதம் பிடிக்கிறது, இரண்டையும் சமாளிக்கும் ஒரு விஷயத்தைச் செய்கிறார் பிரபாஸ்.   

 Dot அனுஷ்கா படகில் ஏறிச் செல்லும் காட்சி ஒன்றில், எதன்மீது ஏறிச் செல்கிறார் என்பது... கெத்து!

Dot அனுஷ்காவும், பிரபாஸும் மகிழ்மதிக்கு வரும் அந்த அன்னப்படகு அழகிய கற்பனை. தண்ணீரில் படகாகச் சென்று, வானத்தில் பறந்து மேகங்கள் குதிரைகளாக.. சபாஷ்!

Dot ஓப்பனிங் காட்சி போலவே, க்ளைமாக்ஸில் அனுஷ்கா அடிதப்பாமல் நடக்க இருக்கும்போதும் ஒரு தடை வருகிறது. அதற்கும் ஒரு வயலன்ட் கற்பனையில் தீர்வு தருகிறார்கள். 

Dot படத்தின் பிரதான கதாபாத்திரங்கள் மட்டுமல்ல... தலைகாட்டும் ஒவ்வொரு துணை கதாபாத்திரமும் சூழ்நிலையின் தன்மைக்கேற்ப உருக்கமும் மூர்க்கமுமாக அசர வைக்கிறார்கள். 

இப்படிப் பல காட்சிகள். போலவே, படத்தின் டீட்டெய்லிங். திரையில் ஒரு காட்சி ஓடும்போது, மையக் காட்சியத் தவிர்த்து எதைக் கவனித்தாலும் அதில் ஒரு டீட்டெய்லிங். அந்த பெர்ஃபெக்‌ஷன்.. ராஜமௌலியின் பெஸ்ட்

சில சுட்டிக்காட்டல்கள்!

Dot காதலிக்கும் பெண்ணைக் கவர ஹீரோ கோழையாக நடிக்கிறான் என்பது பல படங்களின் டெம்ப்ளேட் அல்லவா? இதிலுமா? 

Dot எதை எடுப்பது, எதை விடுவது, எப்படி நேரத்தைக் குறைப்பது என்று எடிட்டர் குழம்பியிருப்பது ஆங்காங்கே தெரிகிறது. சில காட்சிகளின் Ending  சட்டென்று முடிகிறது.

Dot பாடல்கள்.... இன்னும் நல்லா பண்ணியிருக்கலாம்!  

 இடைவேளைக்கு முன் பரபர, விறுவிறுவென இருக்கும் படம்.... அதன் பின் சற்றே வேகம் குறைத்துக் கொள்கிறது   

எது எப்படியோ, இந்திய சினிமாவின் கதை சொல்லலையே வேறு தளத்துக்குக் கொண்டு சென்ற வகையில் பாகுபலி-2-வுக்கு சொல்லலாம் ஜெய் மகிழ்மதி! 

ஒட்டுமொத்தமாக என்ன சொல்ல... முதல் பாகம், இரண்டாம் பாகம் என்றெல்லாம் பிரித்துப் பார்க்காமல் ஒட்டுமொத்தமாக பாகுபலியின் இரண்டு பாகங்களும் கொடுப்பது... ஒரு ஆவேசமும் பரவசமுமான அனுபவம். அதை அனுபவிப்போம்! 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!