Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

உதயநிதி அரசியலுக்கு சரி வருவாரா?! - 'சரவணன் இருக்க பயமேன்' விமர்சனம்

அரசியல் கட்சித்தலைவர் உதயநிதியின் காதல், காமெடி அதகளம்தான் ‘சரவணன் இருக்க பயமேன்’. 

‘சரவணன் இருக்க பயமேன்’ ஒரு குடும்பக் கதை. இரண்டு குடும்பக் கதை என்றுகூடச் சொல்லலாம். உதயநிதி குடும்பம், ரெஜினா கஸாண்ட்ரா குடும்பம். ஆங்.... சாம்ஸ்- மன்சூர் அலிகான் குடும்பம் சேத்தினா, மூன்று குடும்பக் கதை. ஓகே கதைக்கு வருவோம்.

உதயநிதி

உதயநிதியின் மாமா சூரி ஒரு தேசிய கட்சியின் தமிழக தலைவராகிறார். போட்டோ குழப்பத்தினால் போஸ்டர் மாறிவிட பிரச்னை பிரளயமாகிறது. அதிலிருந்து தப்பிக்க துபாய்க்கு எஸ்கேப் ஆகிறார் சூரி. அந்த அரசியல் கட்சியின் தலைவர் பொறுப்பிற்கு  உதயநிதி வந்துவிடுகிறார்.  சூரியின் அண்ணன் மகள் ரெஜினா. சிறுவயதில்  ரெஜினாவும் உதயநிதியும் பாம்பும் கீரியுமாகவே இருக்கிறார்கள். ஆனால் அதே ரெஜினா, கொழுக் மொழுக் என்று எதிரில் வந்து நிற்க,  உதயநிதி,  ரெஜினாவின்  அழகில் ஆல் அவுட்டாகிறார். காதலில் விழுகிறார். ஆனால் ரெஜினாவுக்கு இவர்மீது எந்த ரியாக்‌ஷனும் ஏற்படவில்லை.  வேறு ஒருவருடன் திருமண ஏற்பாடு நடக்கிறது. ரெஜினாவை காதலிக்க வைக்க உதயநிதி செய்யும் மாயாஜாலமும், மற்றவையுமே கதை.

நடிப்பில் உதயநிதி கொஞ்சம் முன்னேற்றம் காட்டியிருக்கிறார். ஆனால் இந்த நடனம்தான்.... ‘இன்னும் முயற்சிக்கலாமே’ என்கிறது.  அரசியலில் படம் ஆரம்பமானதும், அப்படி இப்படியென  எதிர்பார்த்தால், 'ஆக' என்கிற வார்த்தையை வைத்தே நக்கல் செய்கிறார்.  ‘கழகம் பிறந்தால் தான் வழி பிறக்கும்’ என்ற வசனம் கூட  வருகிறது. ஆனா, படத்துல வர்றது கலகம். எதற்கு வம்பு என்று கட்சியையும் தேசிய கட்சியாகக் காட்டிக் கடக்கிறார்கள். 

துபாய் ரிட்டர்ன் சூரியின் காஸ்ட்யூமெல்லாம் எங்க பாஸ் பிடிச்சீங்க என்ற ரேஞ்ச் தான். கலர்கலராக மிளிர்கிறார். காமெடி செய்கிறார். வில்லனாகிறார்.  சூரியின் காமெடி வடிவேலுவை இமிடேட் செய்கிறது. 'இந்த உண்மை கடுகளவு வெளியே கசிஞ்சாலும்...' என்ற 'வீரபாகு' (பேக்கரி) வடிவேலு டயலாக்கை ரெண்டு இடங்களில் சூரி பேசுகிறார். 'கொண்டையை மறைக்கலையேய்யா' என்பதைப்போல் 'வாய்ஸை மாத்திட்டே நம்பரை மாத்தலையே?' என்று சூரியின் காமெடி, உல்டா ஆகிறது.

Rejina


ரெஜினா, ஸ்ருஷ்டி டாங்கே என படத்தில் இரண்டு நாயகிகள்.  இருவருமே நடிப்பில் அழகு

ரோபோ சங்கர், ரவிவர்மா, யோகிபாபு, சாம்ஸ், மனோபாலா, லிவிங்ஸ்டன், மதுமிதா,  மதன்பாப் என்று பல மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே படத்தில் இருக்கிறது. அதற்காக ஒரு பாட்டு எல்லாம் கொஞ்சம் ஓவர். சில இடங்களில் வெடித்து சிரிக்கவைத்தாலும் பல இடங்களில் சிரிப்பு நமத்துப்போகிறது. 

ஜி.எம்.குமாருக்கு எல்லா காட்சிக்கும் ஒரே காஸ்டியூம் தான். 'என்ன தம்பி ஷாட் ரெடியா' என்பது போலவே கேஷுவலாக வந்து நடித்துவிட்டுப் போகிறார். ஜோமல்லூரி, லிவிங்க்ஸ்டன், மன்சூர் அலிகான் என சீனியர்களும் நடிப்பில் பக்கா. 

பேய்களை வைத்து ராகவா லாரன்ஸ் செய்ததைவிட, எழில் புதிதாக ஒரு டெக்னிக்கை கண்டுபிடித்திருக்கிறார். சில இடங்களில் இது காமெடிப்படமா,பேய்படமா என்று யோசிக்கவைக்கிறது. அதுமட்டுமல்ல, இந்த பேய் அவசியம் தானா என்று கூட யோசிக்கவைக்கிறது. படத்துல யார் பேய்ன்னு மட்டும் கேட்காதீங்க ப்ளீஸ்! இன்னொண்ணு... பொதுவாத் திருவிழாவில் காப்பு கட்டினா வெளியூர் போகக்கூடாது என்பது நம்பிக்கை. ஆனால் இதில் பேயே (அதுவும் முஸ்லீம் பேய்) ''காப்பு கட்டினா நான் ஊரை விட்டுப் போய்விடுவேன்" என்கிறது.

சில சீன்களில் நம் கை ரிமோட்டைத் தேடும் அளவு, டிவி காமெடி ஷோக்களில் வரும் முகங்கள்.  கோதண்டம், முல்லை, குரேஷி என்று சின்னத்திரையில் பார்த்த பல முகங்களுக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கொடுத்ததற்காக இயக்குநர் எழிலை நிச்சயம்  பாராட்டலாம். 

சரவணன் இருக்க பயமேன் விமர்சனம்ப்ளாஷ்பேக் காட்சிகள் எல்லாமே கொஞ்சம் கோமா நிலை தான். திரைக்கதை வீக்காக இருப்பது சோக நிலை. குறிப்பாக ஸ்ருஸ்டி டாங்கேவின் ப்ளாஷ் பேக் காட்சிகள் பலவீனம். நைட் ஒன்ஸ் போக எழுந்து போகும் ரெஜினாவின் தம்பி காலை வரை வராமல் இருக்கும் அளவுக்கு படத்தில் அத்தனை லாஜிக் மீறல்கள். தவிர,  இரட்டை வசங்கள் இல்லாமல் காமெடி சீன்களை உருவாக்கமுடியாதா என்ற கேள்வியை மீண்டும் மீண்டும் இயக்குநர்களிடம் கேட்கவே தோன்றுகிறது.பழங்குடி மக்களை 'குருவிக்காரன்' என்றெல்லாம் இழிவுபடுத்துவது கொடுமையானது. 

இரண்டு கட்சிகள் பிளவு, அரசியல் பற்றிப் பேசுவது என ஆரம்பித்துவிட்டு, அப்படியே பாதியில் விட்டுவிட்டு, காதல் ரொமான்ஸ் என்று திரைக்கதை மாறிவிடுகிறது.  ‘அப்போ அரசியல் அவ்வளவு தானா’ என ஆடியன்ஸின் மைண்ட் வாய்ஸ் மட்டும் கேட்கிறது. ஆனால் காமெடியாக பார்த்தால் எழில் இயக்கியிருக்கும் இப்படம் ஓகே ரகம். 

பஞ்சாயத்து சீனில் ரோபோ ஷங்கர், ரவிவர்மா காம்பினேஷனுக்கு காமெடிக்கு இன்னும் கொஞ்சம் இயக்குநர் மெனக்கெட்டிருக்கலாம். இமான் இசையில் ‘எம்புட்டு இருக்குது ஆசை..’ பாடல் ஆஹா! குரல்களைத் தேர்வு செய்வதில்  இமான் எப்பவுமே கச்சிதம் பாடலுக்குத் தேவையான குரல் என்றால் வெளிநாட்டிலிருந்தாலும் அள்ளிக் கொண்டு வருபவர், பக்கத்திலேயே இருப்பவரை விடுவாரா.. ஆம். இந்தப் பாடலுக்கு ஷான் ரோல்டன் குரல்.. அத்தனை அட்டகாசமாய்ப் பொருந்துகிறது.  வெங்கடேஷின் ஒளிப்பதிவும், ஆனந்த் லிங்ககுமாரின் படத்தொகுப்பும் படத்திற்கு தேவையானதை கொடுத்திருக்கிறது. படத்தில் ஒருகட்டத்தில் சவுண்டு ஓவர் ஆகி, தலை கிறுகிறுக்கிறது.

அடிக்கற வெயிலுக்கு எத்தனை தண்ணீர் குடித்தாலும் பத்தலை என்பதுபோல, எதிர்பார்த்த என்கேஜ்மெண்ட் கம்மிதான். ஆனாலும் ஒருமுறை பார்க்க குறையொன்றுமில்லை.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement