Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நீட் தேர்வு, +2 ரிசல்ட் சமயத்தில் மருத்துவத்தின் மீதான குறி கவர்கிறதா? - ‘எய்தவன்’ விமர்சனம்

+2 ரிசல்ட், மருத்துவ மாணவர்களுக்கான 'நீட்' தேர்வு விவகாரம் பற்றி எரிந்துகொண்டிருக்கும் சூழல். மருத்துவக் கல்லூரிகளில் நடக்கும் மோசடிகளையும், கல்வி விற்பனை பற்றியும் பேசியிருக்கும் 'எய்தவன்' படம் எப்படி? 

எய்தவன்

சில வருடங்களுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்டத்தில், தீனதயாள் நாயுடு என்பவருக்குச் சொந்தமான டி.டி மருத்துவக் கல்லூரியில் போதிய உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், அந்தக் கல்லூரியின் அங்கீகாரத்தை மருத்துவ கவுன்சில் ரத்து செய்திருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். பாதிக்கப்பட்ட மாணவர்கள் தீர்வுக்காக தினமும் வீதிக்கு வந்து பதாதைகளை ஏந்தி போராடினார்கள். ஆனால், நாளடைவில் அவர்களது போராட்டம் கானல் நீராகிப்போனது. மாணவர்கள் போராட்டம், கல்வி தாதாக்கள், நன்கொடை வாங்கி மாணவ சேர்க்கை நடத்தும் தரகர்கள் என அனைத்தையும் சுவாரசிய ஒன் லைன் பிடித்து த்ரில்லர் படமாக எடுத்திருக்கிறார்கள்.

'தங்கையைக் கொன்ற வில்லன்களைப் பழிவாங்கப் புறப்படும் ஹீரோ' என்ற நைந்துபோன ஒன்லைனைக் கொண்டு, வலுவான திரைக்கதை மூலம் சுவாரஸ்யம் சேர்த்திருக்கிறார் இயக்குநர் சக்தி ராஜசேகரன். சொந்தத் தொழில், தாய், தந்தை, தங்கையுடன் மகிழ்ச்சியான மிடில்-கிளாஸ் வாழ்க்கை வாழும் ஹீரோ கலையரசன். சிறுவயதில் இருந்தே டாக்டர் ஆகவேண்டும் என்ற கனவோடு இருக்கும் தங்கைக்கு, நல்ல மதிப்பெண்கள் இருந்தும் அரசு மருத்துவக் கல்லூரியில் சில காரணங்களால் இடம் கிடைக்காமல் போகிறது. தனியார் கல்லூரியை நாடுகிறார் கலையரசன். சில பல இடைத் தரகர்களைக் கடந்து, 50 லட்சம் நன்கொடை கொடுத்து, வெற்றிகரமாக தங்கையை மருத்துவ மாணவி ஆக்கிய சந்தோஷம் மறைவதற்குள், தங்கை படிக்கும் கல்லூரிக்கு அங்கீகாரம் ரத்து ஆகியிருப்பது தெரியவருகிறது. அதே சூழலில் தங்கையையும் பறிகொடுக்கிறார். தன் தங்கையைப் போல பாதிக்கப்பட்டிருக்கும் பல மாணவர்களுக்கும் நீதி வேண்டும் என்ற அறம் சார்ந்த கோபத்தோடு, ஹீரோ கலையரசன் மோசடி கும்பலின் அதிகார, அடியாள் பலத்தோடு மோதுகிறார். முடிவு என்ன என்பதுதான், ‘எய்தவன்’. 


கலையரசன் 

படத்தின் ஆரம்பம் துவங்கி சுவாரஸ்யமாகவும், ஒரு சமூக அக்கறையுள்ள கதையையும் எடுத்ததற்காகவே இயக்குநர் சக்தி ராஜசேகரனைப் பாராட்டலாம். குறிப்பாக மருத்துவக் கல்லூரிகளின் அட்மிஷன்களுக்குப் பின்னால் நடக்கும் நன்கொடைக் கொள்ளைகள் எப்படி நடக்கிறது போன்ற டீட்டெய்லிங் பகீர் என இருக்கிறது. ஆனால் இப்படி அழுத்தமான பிரச்னையில் கமர்ஷியல் சாயம் பூசியதும், அந்த பில்டப்பிற்கு ஏற்ப அழுத்தமான க்ளைமாக்ஸ் இல்லாததும் ஏன் ப்ரோ? 

'அதே கண்கள்' படத்திற்குப் பிறகு, மீண்டும் தனி ஹீரோவாக மொத்தக் கதையையும் தாங்கியிருக்கிறார் கலையரசன். இனி, தனி ஹீரோவாகவே தொடரும் வாய்ப்பை இந்தப் படமும் வழங்கியிருக்கிறது. போலீஸ் காதலியிடம் விறைப்பும், முறைப்புமாக ரொமான்ஸ் செய்யும் காதலனாக, தங்கைக்கு நல்ல அண்ணனாக, போலீஸோ, ரெளடியோ... நியாயம் தன் பக்கம் இருக்கும்போது கோபம் காட்டும் இளைஞராக, மாணவர்களை ஒருங்கிணைத்து வில்லனுக்கு எதிராக நிற்கும் போராளியாக... வெளுத்து வாங்கியிருக்கிறார். கலையரசன் காதலியாக சாட்னா டைட்டஸ். போலீஸ் அதிகாரியாக தோற்றத்தில் இருக்கும் கச்சிதம் அவருடைய கேரக்டர் வடிவமைப்பில் இல்லை. வில்லனாக நடித்திருக்கும் கெளதம், ஹை-கிளாஸ் இளைஞனாக மட்டுமல்ல... ஸ்டைலிஷ் வில்லனாக மிரட்டியிருக்கிறார். வேல.ராமமூர்த்தி, ராஜ்குமார், வளவன், சார்லஸ் வினோத் அவரவருக்கான கேரக்டர் தேவைக்கு ஏற்ப நடித்திருக்கிறார்கள். 'தர்மன்' கேரக்டரில் நடித்திருப்பவரும், வில்லனின் பினாமி ஆடுகளம் நரேனும் தனித்துத் தெரிகிறார்கள். 

yeidhavan

கதாபாத்திரங்களுக்கு புராண பாத்திரங்களின் பெயர்களை வைத்து அதன் படி கதை நகர்த்தியது பாராட்டுக்குரியது. டைட்டிலில் ஆரம்பித்து நிறைய விவரங்கள் கவர்கிறது. ஆனால், ஒரு கட்டத்தில் படம் எதை நோக்கிப் போகிறது என எதிர்பார்ப்புடன் உட்கார வைத்து, மிகச் சாதாரணமாக முடித்திருந்த விதம் ரொம்ப பழசு. படத்தின் ஹீரோ கலையரசன், ஆனால் அவரின் கதாபாத்திரத்தைவிட வில்லனான கௌதமின் கதாபாத்திரம் நன்றாக வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால், அதுவும் க்ளைமாக்ஸில் வந்து ஏனோ தானோ என வசனம் பேசி காலியாகிறது.

கிடைக்கும் லொக்கேஷன்களை வைத்துக் கொண்டு காட்சியை எவ்வளவு அழகாக கொடுக்க முடியும் என வேலை செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரேம்குமார். மாணவர்களைக் கொல்லப்போகும் காட்சியின் டாப் ஆங்கிள் ஷாட்... வாவ்! படத்தின் பின்னணி இசை சோதிக்கிறது. பாடல்களும் பெரிதாக ஈர்க்கவில்லை. 

அந்த கள்ளக்காதல் விவகாரம், க்ளைமேக்ஸ் முன் சம்மந்தமே இல்லாமல் வரும் குத்துப்பாட்டு போன்று சில சீன்களை நறுக்கி இருந்தால், சொல்ல வந்த கருத்தை இன்னும் தெளிவாகச் சொல்லி இருக்கும். குறைகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் கல்வி பிரச்னையை வைத்து சுவாரஸ்யமான த்ரில்லர் கொடுத்த விதத்தில் நிச்சயம் கவனிக்க வேண்டிய படம் 'எய்தவன்'.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்