Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்த பேய் பயமுறுத்துது... ஆனா, எப்படி தெரியுமா? - சங்கிலிபுங்கிலி கதவ தொற விமர்சனம்

ஒரு கைவிடப்பட்ட பங்களா. வழக்கம் போல அதில் பேய் இருக்கிறது. வழக்கம் போல் ஒருவர் அந்த வீட்டை வாங்குகிறார். வழக்கம் போல அந்தப் பேய் குடிவந்தவர்களை பாடாய்ப்படுத்துகிறது. வழக்கம் போல் பேய் ஓட்டுபவர் ஒருவர் வந்து பேயின் ஃப்ளாஷ்பேக்கை சொல்கிறார். வழக்கம் போல் அந்த வீட்டில் வசித்த நல்ல மனிதரை சொந்தக்காரர்கள் சேர்ந்து கொன்றுவிடுகிறார்கள். வழக்கம் போல் அவர் பேயாக மாறிவிடுகிறார், அந்த பேயை எப்படி சாந்தப்படுத்தி அனுப்பி வைத்து வீடுவாங்கியவர் வீட்டை அடைகிறார் என்பதை வழக்கமான க்ளைமாக்ஸில் சொல்லியிருக்கிறார்கள். 

பேய்

ஜீவாவுக்கு, வழக்கமான நடிப்புதான். ஸ்ரீதிவ்யாவுக்கும் அவருக்கும் ஆரம்ப அத்தியாயம் தொடங்கி கடைசி வரை வரும் காதல்.... ஆவ்...! சூரியின் காமெடியில் இதிலும் அச்சு அசல் வடிவேலு சாயல். ஒரு படத்தில் கவுண்டமணி மனைவியாக வரும் கோவை சரளாவுக்கு அல்வா கொடுத்த செந்தில் காமெடி டிராக், வேறொரு படத்தில் வடிவேலு சொல்லும் இலவு காத்த கிளிக்கதை டிராக், சந்திரமுகி வடிவேலு அரண்மனை எபிசோட் என்று பலவற்றின் தழுவலில் காமெடி செய்ய முயற்சித்திருக்கிறார்கள்.    

படம் ஆரம்பத்திலேயே பேய் வந்துவிட்டாலும், ‘ப்ச்.. கொஞ்சம் ஓரமாப் போய் நில்லு’ என்று கதையை எதிர்பார்க்கிறார்கள் ரசிகர்கள். ஜீவா, குடித்துவிட்டு வந்து ‘சங்கிலியாண்டி’ ராதாரவியிடம் அண்ணாமலை ஸ்டைலில் பேசும் காட்சி, கலகல. அந்தக் காட்சியை, ‘உனக்குத்தான் தெரியுமே... கூட்டிக் கழிச்சுப் பாரு’ என்று ராதாரவியிடமே சொல்லி முடித்த விதமும் ரசிக்க வைக்கிறது.

காஞ்ஜூரிங், அனேபெல் போன்ற ஹாலிவுட் இறக்குமதி பூச்சாண்டிகளையே லெப்ட்டில் டீல் செய்துகொண்டிருக்கிறார்கள் தமிழ் ரசிகர்கள். இவர்களிடம் பின்னால் இருந்து ஒரு கை முன்னால் இருப்பவரின் தோளை தொடும்போது பியானோவை அலறவிட்டு பயமுறுத்த நினைப்பதெல்லாம் கோபம் வரச் செய்யும் காமெடி. தமிழ் சினிமாவை ஐந்து வருடங்களாக பேய் பிடித்து ஆட்டுகிறது. அதனாலேயே, திகில் காட்சிகளில் 'நீதான் பயங்கரமான ஆளாச்சே இன்னும் நல்லா பயமுறுத்து' என்கிற மோடிலேயே அசால்ட்டாக இருக்கிறார்கள்.   பேய்ப்படத்தில் பேய் இருக்கிறதோ இல்லையோ கண்டிப்பாக இருக்கவேண்டிய ஆள் கோவை சரளா. இதிலும் இருக்கிறார். சூரி, ஜீவாவின் இலை உடைக் காமெடி ’கொஞ்சம் சிரிச்சுக்கோங்க ப்ளீஸ்’ என வேண்டுகோள் வைக்கிறது. தேவதர்ஷினி, தம்பி ராமையா இருவருக்குமான காட்சிகளில் இரட்டை அர்த்தமெல்லாம் , இலை மறை காயென்றெல்லாம் இல்லாமல், ஒரே அர்த்தமாக ஒலித்துத் தொலைக்கிறது. 

சங்கிலி புங்கிலி கதவத்தொற

படத்தின் ஸ்டார் நடிகர் ராதாரவிதான். அந்த ஃப்ளாஷ்பேக் காட்சியில் குடும்பத்தின் ஒற்றுமை கண்டு சந்தோஷப்படும்போதும், பேத்தி கேட்கும் அந்த ஒற்றைக் கேள்வியில் உடைந்து போகும்போதும் நச் நடிப்பு. இரண்டாம் பாதியில் பேய் என்கிற பெயரில் அந்தப் பவுடரை முகத்தில் அப்பாமல் இருந்திருந்தால், இன்னும் அவர் நடிப்பை ரசித்திருக்கலாம். ஆனாலும் உடல்மொழியில் மிரட்டுகிறார். அவருக்கு இணையாக நடிக்கும் இன்னொருவர் ராதிகா. தோன்றும் காட்சிகளிலெல்லாம்... அசால்ட்டாக அசத்துகிறார்! 

கங்கை அமரன், அனிருத், சிம்பு, ஜி.வி.பிரகாஷ்குமார், பிரேம்ஜி என்று எல்லாரையும் பாடவைத்திருக்கிறார் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர். அவற்றில் கங்கை அமரன் பாடும் பாடல் கேட்கலாம் ரகம். பின்னணி இசை... இன்னும் பூச்சாண்டி காமித்திருக்கலாம். டி.எஸ்.சுரேஷ் எடிட்டிங்கில் ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் காட்டிய கச்சிதம், படம் முழுவதும் இருந்திருக்கலாம். சத்யன் சூரியனின் ஒளிப்பதிவு அந்த பங்காளாவை லாங் ஷாட்டில் காட்டும்போது எக்ஸ்ட்ரா உற்சாகத்துடன் இருந்திருக்கிறது.

இன்னும் தமிழ் ஹீரோக்களில் பேய்ப்படத்தில் நடிக்காமல் இருக்கிறது யாருன்னு பார்த்து ஜீவாவையும் அந்த நோட்டில் மொய் எழுத வைத்துவிட்டார்கள். அட்லியின் ‘ஏ ஃபார் ஆப்பிள்’ நிறுவனம் தயாரித்த முதல் படமான இதை, புதுமுக இயக்குநர் ஐக் இயக்கியிருக்கிறார். தமிழ் சினிமா பேய் பட ஹிஸ்ட்ரியை மனதில் வைத்து, இன்னும்  மிஸ்ட்ரி சேர்த்திருக்கலாம்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்