"எத செஞ்சாலும் நிதானமா செய்யணும். கொலையக் கூட!" - கேஷவா படம் எப்படி?

தெலுங்கு சினிமாவில் வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் நிகில் சித்தார்த் முக்கியமானவர். கமர்ஷியல் டச் படங்கள்தான், ஆனால் அதில் சம்திங் ஸ்பெஷல் கொடுக்கும் இவரது படங்கள். சுவாமி ரா ரா, கார்த்திகேயா, சூர்யா VS சூர்யா, ஷங்கராபரணம், எக்கடக்கி போத்தாவு சின்னிவாடா என அவரின் பட கதை அமைப்பு சுவாரஸ்யமானதாக இருக்கும். உதாரணமாக, 'சுவாமி ரா ரா' படத்தில், பிக் பாக்கெட் ஹீரோ கையில் கிடைக்கும் 100 கோடி மதிப்பிலான சிலை, 'சூர்யா VS சூர்யா' படத்தில், ஹெரிடிடரி டிஸார்டர் அதாவது சூரிய ஒளி மேலே பட்டால் பாதிப்படையும் ஹீரோ, அவனுடைய காதல் பற்றிய கதை, 'எக்கடக்கி போத்தாவு சின்னிவாடா' படத்தில் வித்தியாசமான ஹாரர் என சமீபத்திய அவரது படத்தேர்வுகள் ஃப்ரெஷ்ஷாக இருக்கின்றது. அதனாலேயே கேஷவா படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்தது.

கேஷவா

"எனக்கு ஒரு பிரச்னை இருக்கு. எல்லாருக்கும் இடது பக்கம் இருக்க வேண்டிய இதயம், எனக்கு வலது பக்கம் இருக்கு. அதனால அதிகமா பயந்தாலோ, பதற்றமானாலோ இதய துடிப்பு அதிகமாகி இறந்து போயிடுவேன். சிம்பிளா சொல்லணும்னா, ஹாரர் சினிமா பார்க்க முடியாது, விளையாட முடியாது. எத செஞ்சாலும் நிதானமா செய்யணும். கொலையக் கூட!" கேஷவா படத்தின் டிரெய்லரில் வரும் வசனம் இது. மிரட்டலான த்ரில்லர் என்கிற நம்பிக்கையை அளித்தது டிரெய்லர். அது போல படமும் சுவாரஸ்யம் குறையாமல் இருந்ததா? 

 

நகரத்தில் ஒரு காவலர் கொலை செய்யப்பட்டு மரத்தில் கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கிறார். கொலைகாரனைக் கண்டுபிடிக்க எந்த தடயமும் சிக்கவில்லை. கொலை செய்வது நிகில். அதே போல் மேலும் இரண்டு காவலர்கள் கொலை செய்யப்பட்டு தொங்கவிடப்படுகிறார்கள். இதை விசாரிக்க வருகிறார் ஷர்மிளா (இஷா கோபிகர்). நிகில் எதற்காக இந்த கொலைகளைச் செய்கிறார், இஷா கோபிகரிடம் சிக்காமல் இன்னும் இரண்டு கொலைகளை எப்படி செய்கிறார் என்பது கதை.

நிகிலுக்கு இந்த ரோல் முழுக்க புதியது. படம் முழுக்க இறுக்கமான முகத்துடன் வருவதுதான் அவருக்கான ரியாக்‌ஷனே. நிகிலின் சிறுவயது தோழியாக ரித்து வர்மா. ரொமான்ஸ் காட்சிகள் எதுவும் கிடையாது. ஹீரோவுக்கு உதவும் சின்ன ரோல்தான். இவர்கள் தவிர பிரியதர்ஷி, (இவரு ஆண் பாஸ்.. பேரப்பாத்து கன்ஃப்யூஸ் ஆகிடாதீங்க.. நல்ல காமெடி நடிகர்!) வெண்ணலா கிஷோர், ராவ் ரமேஷ் எல்லோருக்கும் மிகக் குறுகிய கதாபாத்திரங்கள்தான். எல்லோரும் தங்களுடைய பங்கை சரியாக செய்திருக்கிறார்கள். 

Keshava

சன்னி எம்.ஆர் இசையில் பாடல்கள் தனியாக கேட்பதற்கு வித்தியாசமான ட்ரீமெண்டாக இருந்தது. படத்தைப் பாடல்கள் தடை செய்யாதவாறு குறைவாகப் பயன்படுத்திவிட்டு சட்டென அடுத்த காட்சிக்கு சென்றது செம ஐடியா. பிரசாத் பிள்ளையின் பின்னணி இசை அதிரடிக்கிறது, சில இடங்களில் வெற்றிடமாகவே விட்டிருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்ற ஃபீலும் வந்தது. நிறைய இரவு நேர காட்சிகள், சண்டைக் காட்சிகள், பழிக்குப் பழி ஃபீல் கொடுக்க சிவப்பு மஞ்சள் காம்பினேஷன் டோனிலேயே கொடுத்தது என பல இடங்களில் பாராட்ட வைக்கிறார் ஒளிப்பதிவாளர் திவாகர் மணி.

சுவாரஸ்யமான ப்ளாட், நல்ல நடிகர்கள், டெக்னிலாகவும் சூப்பர் எல்லாம் சரியாக தானே இருக்கிறது, படத்தில் என்ன பிரச்சினை எனக் கேட்கிறீர்களா? டிரெய்லரில் ஏதோ ஒன்று இருக்கிறது என எதிர்பார்ப்பு உருவானதல்லவா, அந்த ஒன்று படத்தைப் பார்க்கும் போது மிஸ்ஸிங்!   

Isha Koppikar

ஹீரோ சிலரைக் கொலை செய்ய வேண்டும், ஆனால் பதறாமல் நிதானமாக செய்ய வேண்டும் என்ற லைன், ஒவ்வொரு கொலையும் ஒவ்வொரு சேப்டராகப் பிரித்து கதை சொன்னது எல்லாம் நன்று. ஆனால், கொலையை செய்யும் நிகிலைப் போலவே, அதைப் பார்க்கும் ஆடியன்ஸும் பதறாமல் "சரி ரசத்த ஊத்து" மோடிலேயே உட்கார வைத்தது மைனஸ். இடைவேளை சமயத்தில் வேகமெடுக்கும் படம், அதன் பிறகும் சொதப்பலாக போவதால், ஹூரோவுக்கு இருக்கும் இருதயப் பிரச்சனையே ஆடியன்ஸுக்கு மறந்துபோய், ஒருவன் பழி வாங்கப் போகிறான் அவ்வளவு தானே என நம்மை ஆசுவாசப்படுத்திவிடுகிறது. ஹீரோவின் புத்திசாலித்தனமான மூவ் எதுவும் இல்லாமல், தேமே என வந்து கொலை செய்வது, அதற்கு ஒரு ப்ளாஷ்பேக், க்ளைமாக்ஸில் சாதாரண ட்விஸ்ட் என்கிற விதத்திலே இருந்த ட்ரீட்மென்ட், வழக்கமான ஒரு சினிமா பார்த்த அனுபவத்தையே வழங்குகிறது. இயக்குநர் சுதீர் வர்மா திரைக்கதையை கொஞ்சம் விறுவிறுப்பாக்கி இருந்தால் இந்த பழிக்குப் பழி ஆட்டம் மிக சுவாரஸ்யமாக இருந்திருக்கும். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!