’மொழி’ ஜோதிகா Vs ’பிருந்தாவனம்’ அருள்நிதி..! யாருக்கு ஸ்கோர் அதிகம்? - ‘பிருந்தாவனம்’ விமர்சனம்

'மொழி' தமிழில் பேசப்பட்ட படம். காது கேளாத, வாய் பேசாத பெண்ணின் மன உணர்வுகளைக் கவித்துவமாய்ச் சொன்ன படம். 'பிருந்தாவனம்' படத்தில் நாயகன் காது கேளாத, வாய் பேசாத இளைஞர். 'மொழி'யில் இருந்த அதே நேர்த்தி 'பிருந்தாவனத்தி'லும் இருக்கிறதா?

பிருந்தாவனம்

 

ஊட்டியில் ஒரு சலூனில் வேலை பார்க்கும் அருள்நிதி காது கேளாத, வாய் பேசாத இளைஞர். சிறுவயதில் ஆதரவற்றுத் திரிந்தவரை ஹோமில் சேர்த்தவர் எம்.எஸ்.பாஸ்கர். ஒருகட்டத்தில் வேலை பார்த்த சலூனே அருள்நிதிக்கு சொந்தமாகும் சூழல் வருகிறது. டிபார்ட்மென்டல் ஸ்டோர் வைத்திருக்கும் 'தலைவாசல்' விஜயின் மகள் தான்யா. சிறுவயதிலிருந்தே நண்பனான அருள்நிதியுடன் அவ்வப்போது வம்பு வளர்த்துத் திரிகிறார். ஹீரோயின் என்றால் அதோடு நிறுத்திக்கொள்ளக்கூடாதே, ஹீரோவைக் காதலிக்கவும் வேண்டுமே! யெஸ். அருள்நிதியைக் காதலிக்கிறார். இதற்கிடையில் சொந்த வேலையாக ஊட்டிக்கு வரும் நடிகர் விவேக்குடன் நண்பராகிறார் அருள்நிதி. தயங்கித் தயங்கி தான்யா காதல் சொல்ல, ஆத்திரத்துடன் மறுக்கிறார் நாயகன். ஏன் அருள்நிதி காதலை மறுக்கிறார், கடைசியில் காதல் கைகூடியதா இல்லையா என்பதே 'பிருந்தாவனம்'.


காமெடி ஒன்லைனர்கள், நெகிழ்ச்சியும் உணர்ச்சியும் கலந்த சம்பவங்கள், மிகைப்படுத்தப்பட்ட சற்றே நாடகத்தனம் கலந்த காட்சிகள் இவைதான் ராதாமோகன் படத்தின் ஃபார்முலா. இதில் நெகிழ்ச்சியும் நாடகத்தனமும் கொஞ்சம் தூக்கலாகிவிட்டதுதான் பிரச்னை. அருள்நிதிக்கு ஒரு ஃப்ளாஷ்பேக், விவேக்கின் நண்பருக்கு ஒரு ஃப்ளாஷ்பேக், எம்.எஸ்.பாஸ்கருக்கு ஒரு ஃப்ளாஷ்பேக், தான்யாவின் தந்தையான 'தலைவாசல்' விஜய்க்கும் ஒரு ஃப்ளாஷ்பேக் என்று எல்லோருக்கும் சொல்வதற்கு ஏராளமான முன்கதைகள். ஊட்டி மலைப்பாதையில் உள்ள திருப்பங்களைவிட படத்தில் ஃப்ளாஷ்பேக்குகள் ஏராளம்.

பிருந்தாவனம் விமர்சனம்


 அரைமணிக்கு ஒரு நெகிழ்ச்சிக்கதை வந்து ஆளாளுக்கு கண்ணீரால் நனைகிறார்கள். ஒரு காட்சியில் 'நெஞ்சை நக்காதேடா' என்று விவேக்கே சொன்னாலும் படம் பார்க்கும் நம் நெஞ்சில் ஏகப்பட்ட ஈரம், காரணம் ஊட்டி பனி அல்ல.
சைகை மொழியில் பேசும் பாத்திரத்தில் நிறைவாகவே செய்திருக்கிறார் அருள்நிதி. தான்யா காதலைச் சொல்லும் இடத்தில் எல்லாம் ஆத்திரப்படும்போது இயல்பான உணர்ச்சிகளைக் கொண்டுவந்திருக்கிறார். ஆனால் அவர் சொல்லும் ஃப்ளாஷ்பேக்கும் அவர் மறைக்கும் ஒரு முக்கியமான ரகசியத்துக்கான பின்னணியிலும் ஏகப்பட்ட சினிமாத்தனம். ''எனக்கு அன்பைவிட அனுதாபம்தான் வேண்டும்" என்று அவர் சொல்லும் டயலாக்கில் எதுகை மோனை இருக்கிறதே தவிர, எதார்த்தமில்லை.

ஹீரோயின் தான்யா செம க்யூட். அழகாக நடிக்கவும் செய்கிறார். கடைசிக் காட்சியில் காதலைக் கண்களில் தேக்கிப் பரிதவிக்கும் காட்சியில் அசத்தல் தான்யா. நடிகர் விவேக், நடிகர் விவேக்காகவே வருகிறார். 'ஜேம்ஸ் கேமரூனின் அவதார் பார்த்திருக்கீங்களா?', 'அவர் அவுத்தாருன்னா நான் ஏன் பார்க்கணும்?', 'வாழ்க்கைங்கிறது வாழைக்காய் மாதிரி, நீளமா சீவினா பஜ்ஜி; குறுக்கே சீவினா சிப்ஸ்" என்று காமெடி ஒன்லைனர்களில் கலகலப்பு தூவுவதாய்  இருக்கட்டும், நண்பனின் கடைசி ஆசையை நிறைவேற்றிவிட்டுக் கண்கலங்குவதாய் இருக்கட்டும், கச்சிதம் விவேக்.

Brindavanam Movie Review


 'டாடி எனக்கு ஒரு டவுட்டு' செந்திலும் 'தலைவாசல்' விஜயும் சில காட்சிகள் வந்தாலும் நிறைவாகச் செய்திருக்கிறார்கள். 'எம்.எஸ்.பாஸ்கரை இன்னும் பயன்படுத்தியிருக்கலாமே' என்று தோன்றுகிறது.விஷால் சந்திரசேகரின் இசையில் பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை. ஊட்டியின் அழகை சில்லென்று கொண்டுவந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.விவேகானந்த்.
நாடகத்தன்மையைக் குறைத்து, மன உணர்வுகளை அழுத்தமாய்ச் சொல்லும் காட்சிகளை அதிகரித்திருந்தால் பிருந்தாவனத்தில் இன்னும் நறுமணம் தூக்கலாக இருந்திருக்கும்.
 
அட... வழக்கமான ’டாய் டூய்’ ஹீரோயிஸ சினிமா இல்லாம, குடும்பத்தோட பார்க்கிற மாதிரியான படமா சொல்லுங்க’ என்று கேட்பவர்கள், இந்த பிருந்தாவனத்துக்கு ஒரு விசிட் அடிக்கலாம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!